திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பாதுகாப்பு குறித்து ஆய்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமை தாங்கினார். அமைச்சர் கே.என்.நேரு, அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் (நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை) பிரதீப் யாதவ், மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

 

இன்னுயிர் காப்போம் திட்டம்:

 

இதனைத்தொடர்ந்து, கூட்டத்தில் அதிகாரிகள் மத்தியில் பேசிய அமைச்சர் வேலு கூறியது, இன்னுயிர் காப்போம் திட்டம் - நம்மை காக்கும் 48 திட்டத்தின் மூலம் திருச்சி மாவட்டம் மட்டுமின்றி வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்கள், வெளி நாட்டிலிருந்து வந்திருப்பவர்கள் எதிர்பாராத வகையில் விபத்தை சந்திக்க நேரிட்டாலும் அதற்கான மொத்த சிகிச்சை செலவையும் தமிழக அரசே ஏற்றுக் கொள்கிறது. அதன் அடிப்படையில் தற்போது வரை 237 அரசு மருத்துவமனைகள் மற்றும் 451 தனியார் மருத்துவமனைகள் என மொத்தம் 688 மருத்துவமனைகள் மூலம் 1 லட்சத்து 70 ஆயிரத்து 239 ேபர்களுக்கு ரூ.149 கோடியே 97 லட்சம் செலவில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

 



கடும் நடவடிக்கை:

 

திருச்சி மாவட்டத்தில் 10 அரசு மருத்துவமனைகள், 23 தனியார் மருத்துவமனைகள் என மொத்தம் 33 மருத்துவமனைகள் மூலமாக 5,602 பேர்களுக்கு ரூ.5 கோடியே 8 லட்சம் மதிப்பீட்டில் சிகிச்சை அளிக்கப்பட்டு பொதுமக்களின் உயிரை தமிழ்நாடு அரசு பாதுகாத்துள்ளது. விபத்து பகுதியில் (பிளிங்கர்) ஒளிரும் விளக்குகளை அமைக்க வேண்டும். வேகத்தடைகளை அடையாளப்படுத்த, அதற்குரிய ஒளிரும் பெயிண்ட் அடிக்க வேண்டும். செல்போனில் பேசிக் கொண்டே செல்வதை தடுக்க வேண்டும்.

 

இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணியாமல் செல்வதை தடுக்க வேண்டும். மேலும் ஆட்டோக்களில் பள்ளி குழந்தைகளை அளவுக்கு அதிகமாக ஏற்றி செல்பவர்கள் மீதும், பஸ்களில் படியில் நின்று பயணம் செய்பவர்கள் மீதும் போலீசார் அதிக கவனம் செலுத்தி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். சாலைகளில் கால்நடைகள் சுற்றி திரிவதை கட்டுப்படுத்த வேண்டும். சாலைகளில் கால்நடைகள் சுற்றினால் மாநகராட்சி அதிகாரிகள், மாவட்ட நிர்வாக அதிகாரிகள் விலங்குகளின் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 



 

நிதின் கட்காரியிடம் நேரில் கோரிக்கை:

 

இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் வேலு பேசியது.. திருச்சி அரியமங்கலம் பால்பண்ணை முதல் துவாக்குடி வரை உயர்மட்ட பாலம் அல்லது சர்வீஸ் சாலை அல்லது இரண்டுமே அமைய உள்ளது. ஆனால், அங்குள்ள வியாபாரிகள், பல்வேறு சங்கங்கள் இணைந்து இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மத்திய அரசு தான் இத்திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்பதால், நிதின் கட்காரியிடம் நேரில் சென்று கோரிக்கை வைத்தோம். அதற்கு அவர், பால்பண்ணை- துவாக்குடி சாலை அமைப்பதற்காக ஒரு குழுவை அமைத்து, நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்யச் சொல்வதாக தெரிவித்துள்ளார். திருச்சி மாநகரப் பகுதிகளில் 3 உயர்மட்ட மேம்பாலம் அமைக்கும் பணிக்கான ஆய்வுப் பணிகள் நிறைவுற்று, விரிவான திட்ட அறிக்கை தயார் செய்த நிலையில், திருச்சியில் மெட்ரோ ரெயில் திட்டத்திற்கான அறிவிப்பு வெளியானது. மெட்ரோ மற்றும் மாநில நெடுஞ்சாலைதுறை இணைந்து, கூட்டு முயற்சியில் இந்த பணிகளை செய்யும் என்றார்.

 

 

ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.








ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண