தமிழகத்தில் இந்தி மொழிக்கு எதிரான போராட்டத்தில் முக்கிய பங்குவகித்தது திருச்சி தான், ஆம். தமிழ் வாழ்க தமிழ் வாழ்க என்று சொல்லிக்கொண்டே தனது உயிரை தியாகம் செய்து போராட்டத்தின் மையமாக விளங்கியவர்  யார் என்று தெரியுமா?


அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூரைச் சேர்ந்த ஆறுமுகம், தங்கம்மாள் ஆகியோருக்கு பிறந்தவர் தான் இந்த சின்னசாமி.  இவர் ஐந்தாம் வகுப்புவரை படித்துவிட்டு உழவுத் தொழிலை செய்து வந்தார். சின்னசாமி நூல்களைப் படிப்பதில் மிகவும் ஆர்வம் கொண்டவர். பின்னர்  சின்னசாமிக்கு திருமணம் நடைபெற்றது. அவரது  மனைவியின் பெயர் கமலம், இவருக்கு ஒரே மகள் திராவிடச்செல்வி ஆவார். இப்படி காலங்கள் போய்க்கொண்டிருந்த நிலையில் இந்தியாவில் 1965-ல் காங்கிரஸ் ஆட்சி முடிவுக்கு வரும் தருவாயில் நாடு முழுவதும் இந்தியை ஆட்சி மொழி ஆக்க வேண்டும். ஆங்கிலம்  மொழி நீடிக்கக் கூடாது என்று வட மாநிலத்தை சேர்ந்த எம்.பி-க்கள் நாடாளுமன்றத்தில்  குரல் கொடுத்தார்கள்.


அதற்கு போட்டியாக ஆங்கிலம் நீடிக்க வேண்டும் என்று இந்தி பேசாத தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களைச் சேர்ந்த எம்.பி-க்களும் நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்தார்கள். முதலில் தமிழுக்காகத் தொடங்கிய போராட்டம் பிறகு,  இந்தி பேசும் மாநிலங்கள் இந்தி பேசாத மாநிலங்கள் என்று போராட்டம் வெடிக்க  தொடங்கியது. 





இந்தச் சூழ்நிலையில்  நேரு மறைந்து பிரதமராக லால் பகதூர் சாஸ்திரி பொறுப்பேற்றார். ஆனால் அவரே இந்தி திணிப்புக் கிடையாது என்ற நேருவின் உறுதிமொழிக்கு மாறாகச் செயல்படத் தொடங்கினார். அப்போது உள்துறை அமைச்சராக இருந்த குல்ஜரிலால் நந்தா,  அரசியல் சட்டம் எட்டாவது அட்டவணையில் உள்ளபடி இந்தி மொழி மட்டுமே அரசாங்க மொழியாக இருக்கும்  என்ற பகீர் அறிவிப்பு செய்தார்.


நாடாளுமன்றத்திலேயே எம்.பி-க்கள் மோதல் வெடித்தது. அதனால் தமிழகம் கொந்தளித்தது. இந்தியை ஒருபோதும் தமிழகத்தில் அனுமதிக்க மாட்டோம் என்று இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூரைச் சேர்ந்த தியாகி சின்னசாமி 1964ம் ஆண்டு ஜனவரி 25ம் நாள் திருச்சி ரயில் நிலையத்தில் அதிகாலை 4.30 அளவிற்கு தன் மீது பெட்ரோலை ஊற்றி கொண்டு தமிழ் வாழ்க, தமிழ் வாழ்க, இந்தி ஒழிக எனக்கத்தி கொண்டே இந்தி திணிப்பை கண்டித்து தீக்குளித்து உயிரிழந்தார். இதன் பிறகு, இந்தி எதிர்ப்புப் போராட்டம் தமிழகம் எங்கும் வெடிக்கத் தொடங்கியது. 




இதனை தொடர்ந்து இவர் இறந்த தினத்தை மொழிப்போர் தியாகி தினம் என அரசால் ஆண்டு தோறும் அனுசரிக்க பட்டாலும் அன்று ஒரு நாள் மட்டும்  அனைவரது சார்பில் மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது. ஆனால் தமிழ்நாட்டில் இந்தி மொழிக்கு எதிரான போராட்டத்தில் முதல் உயிர் தியாகம் செய்த சின்னசாமியின் நினைவிடம் மிகவும் மோசமான நிலையில் இருக்கிறது. இந்தியவிலேயே இந்தித் திணிப்பு போராட்டம் பெரிய அளவில் வெடிக்க ஊன்று கோலாக இருந்த முக்கியாமான ஒருவர் சின்னசாமி. ஆனால் அவரின் நினைவிடமானது சாலையோரமாக யாரோ ஒருவரது சமாதியைப் போல் கேட்பாரற்று கிடக்கிறது.


இந்த நிலை நீடித்தால் வரலாறானது மறைந்து போய்விடும். மேலும் இவரது தியாகத்திற்கும் அர்த்தம் இல்லாமல் போய்விடும் என்று சமூக ஆர்வலர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர். எனவே தமிழ் மொழிக்காக தனது உயிரையும் துச்சமென நினைத்து உயிர்நீத்த இது போன்ற வீரர்களுக்கு உரிய அஞ்சலி செலுத்தும் விதமாக அவர்களின் நினைவிடத்தை பராமரித்து பேணி காக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர் மற்றும் பொதுமக்களின் கோரிக்கையாக இருந்து வருகிறது.