பெரம்பலூர் மாவட்டம் பாலக்கரை பகுதியில் துவங்கிய இந்த நடைபயணத்தில் அண்ணாமலை, பாஜக மாநில, மாவட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த நடைபயணம் ரோவர் வளைவு, சங்குப்பேட்டை, கடைவீதி, மேற்கு வானொலித்திடல், பழைய பேருந்து நிலையம் வழியாக காமராஜர் வளைவுப் பகுதியில் நிறைவடைந்தது.
இதனை அடுத்து காமராஜர் வளைவுப் பகுதியில் பொதுமக்களிடம் பேசிய அண்ணாமலை... ”இதுவரை 106 தொகுதியில் நடைபயணத்தை முடித்துவிட்டு, 107வதாக பெரம்பலூர் வந்துள்ளேன். திமுக தலைமையிலான ஊழல் ஆட்சியைத் தூக்கி எறிய தமிழக மக்கள் தயாராகி விட்டனர். மேலும் 70 ஆண்டுகால ஆட்சியில் பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்கள் இன்னும் வளர்ச்சி அடையவில்லை. பெரம்பலூர் மாவட்டத்தில் 0.6 சதவீதமும், அரியலூர் மாவட்டத்தில் 0.3 சதவீதமும் உற்பத்தித் திறன் உள்ளது. 70 ஆண்டுகளின் சாதனை இதுதான். பெரம்பலூரில் தொழிற்சாலைகள் இல்லை, விவசாயத்திற்கு தண்ணீர் இல்லை, தமிழகத்திலேயே மிகவும் பின்தங்கிய மாவட்டமாக பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்கள் உள்ளன. மனித வளர்ச்சி குறியீட்டில் பீகார் மாநிலத்தில் உள்ள மாவட்டங்களை விட, மிகவும் குறைவான அளவில் பெரம்பலூர் மாவட்டம் உள்ளது. தமிழகத்திற்கு புதிய அரசியல் தேவை என்பதால், மக்கள் பாரதிய ஜனதா பக்கம் திரும்பி விட்டனர். பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்ட வளர்ச்சிக்காக பாரதிய ஜனதா கட்சி பாடுபடும். அதற்கான வாய்ப்புகளை பொதுமக்களாகிய நீங்கள்தான் எங்களுக்கு கொடுக்க வேண்டும்” என்றார்.
மேலும், பெரம்பலூர் மாவட்டத்தில் வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்தப்படாமல் திமுகவினர் ஊழல் செய்து வருகின்றனர். திமுகவைச் சேர்ந்த ஜெகத்ரட்சகன் ஆயிரத்து 250 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்து உள்ளார். அதேபோல, போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் போக்குவரத்துத் துறையில் 2 ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் செய்துள்ளார். இந்த ஊழல் குறித்து மிகத் தெளிவான பட்டியலை ஆதாரங்களுடன் தமிழக ஆளுநர் ஆர்.என் ரவியிடம் கொடுத்து உள்ளோம். இதனை ஆதாரங்களுடன் போஸ்டர் ஒட்டவும், நாங்கள் தயாராக உள்ளோம். தமிழகத்தில் உள்ள 35 அமைச்சர்களில் 16 பேர் ஊழல்வாதிகள். 30 மாத காலமாக திமுக ஊழல் செய்து வருகிறது. மகன் மற்றும் மருமகன் நலனுக்காக திமுக ஆட்சி செய்து வருகிறது.
”பெரம்பலூரிலும் இதே நிலைதான். பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன், சட்டமன்றத்தில் மக்களுக்காக குரல் கொடுக்காமல், உதயநிதியை புகழ்ந்து பேசி வருகிறார். இதனால் இந்த மாவட்ட மக்களுக்கு எந்த பயனும் இல்லை. பெரம்பலூர் கல்குவாரி ஏலத்தின்போது ஆட்சியர் அலுவலகத்திற்கு டெண்டர் போட வந்த பாஜகவினரை, அடித்து அவமானப்படுத்தியுள்ளனர். மேலும் உயர் அதிகாரிகளான மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முன்னிலையில் நடைபெற்ற இந்த சம்பவத்தில், போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கரின் உதவியாளர் உள்ளிட்ட பலர் சம்பந்தப்பட்டுள்ளனர். போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கருக்கு, நான் ஒன்று தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். உப்பு தின்னவன் தண்ணீர் குடித்தேதான் ஆக வேண்டும். பாஜகவினர் மீது கை வைத்தவர்களை பாஜகவும், நானும் சும்மா விடமாட்டோம். மேலும் அவர்களது நாட்கள் எண்ணப்படுகிறது என்றார். சில மாதங்கள் கழித்து பார்ப்போம், கண்டிப்பாக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். ஏழைகள் வாழ்வு வளம் பெற மூன்றாவது முறையாக பிரதமர் மோடி இந்தியாவின் பிரதமராக வேண்டும், அதற்கு மக்கள் உறுதுணையாக இருக்க வேண்டும்” என்றார்.