தி.மு.க.வின் முக்கிய தலைவர்களில் ஒருவரும், உள்ளாட்சி அமைச்சர் கே.என் நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கு குறித்து டிஜிபி ஷகில் அக்தர் திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் பேட்டியளித்துள்ளார். இதுகுறித்து அவர் பேசுகையில், “ராமஜெயம் கொலை வழக்கில் இதுவரை விசாரணை செய்ததில் சந்தேகத்திற்கு இடமான முறையில் உள்ள 20 சந்தேக நபர்கள் இன்று ஆஜராக உள்ளனர்.


அவர்களிடம் உண்மை கண்டறியும் சோதனை திருச்சி திருவரம்பூர் அருகே நடைபெற உள்ளது. ஏற்கனவே நீதிமன்றத்தின் அனுமதி பெற்றுள்ள சி.பி.சி.ஐ.டி. போலீசார் ராமஜெயத்தின் உதவியாளர்களாக வேலை பார்த்த மோகன், நந்தகுமார் ஆகியோருக்கு சி.பி.ஐ. உதவியுடன் சென்னையில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் உண்மை கண்டறியும் சோதனை நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.


இந்த முறை 20 பேர் என்பதால் அவர்களிடம் சோதனைக்கு பிறகே இந்த வழக்கில் வேறு எந்த  திருப்பமும் ஏற்பட வாய்ப்பு உள்ளதா? என்பது குறித்து தெரிய வரும்” என்று கூறினார்.


தொடர்ந்து அவர் கூறும்போது, “ கடந்த 10 ஆண்டுகளாக இந்த வழக்கில் என்ன நடந்தது என்பதை பற்றி நாங்கள் யோசிக்கவில்லை. கடந்த ஆறு மாதத்தில் நாங்கள் எடுத்த நடவடிக்கைகள் விசாரணை குறித்து தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம். மேலும் இது தொடர்பாக பல்வேறு கட்டங்களில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது இதில் சந்தேகத்திற்கு இடமுள்ள நபர்களிடம் தொடர்ந்து தீவிர விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தொடர்ந்து தீவிர விசாரணையில் சில முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளது. அதனை முன் வைத்து விசாரணையை தொடர்ந்து வருகிறோம்.  விரைவில் இந்த வழக்கு முடிவுக்கு வரும் என நம்புகிறோம்” என தெரிவித்தார்.