இந்து மதத்தினரின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் நேற்று வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. குறிப்பாக, தமிழ்நாட்டில் தீபாவளி பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டது. சிறுவர் முதல் பெரியவர் வரை புத்தாடை அணிந்து, கோவில்களுக்கு சென்று வழிபாடு நடத்தி, இனிப்புகள் வழங்கியும், பட்டாசுகள் வெடித்தும், வாழ்த்துக்களை பரிமாறியும் தீபாவளியை கொண்டாடினர். மேலும் புதுமண தம்பதிகள் தலைதீபாவளியை சிறப்பாக கொண்டாடினர். தீபாவளியான இன்று காலை 6 மணியில் இருந்து 7 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையிலும் பட்டாசு வெடிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தகது. 


மேலும் தீபாவளி பண்டிகையின் போது, மக்களுக்கு தீயணைப்பு துறை சார்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தபட்டது. தீபாவளி பண்டிகையொட்டி, விபத்து ஏற்படாத வகையில், பொதுமக்கள் பாதுகாப்பாக பட்டாசு வெடிக்கும் வழிமுறைகள் குறித்து தீயணைப்புத் துறையினர் பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தினர். மேலும், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள், மருத்துவமனைகள், எரிவாயு உருளை இருக்கும் இடங்கள், கூரை வீடு, வைக்கோல் படப்புகள் ஆகிய இடங்களில் பட்டாசுகளை வெடிக்கக் கூடாது என்றும், அரசு அறிவித்துள்ள நேரங்களில் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும். குறிப்பாக எளிதில் தீ பற்றகூடிய பொருட்கள் அருகே வெடியை வெடிக்க கூடாது. பாதுக்காப்பு விதிமுறைகளை பின்பற்றி தீபாவளி பண்டிகை சிறப்பாகவும், மகிழ்ச்சியாகவும் கொண்டாட வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.




திருச்சி மாநகராட்சியில் கோ-அபிஷேகபுரம், அரியமங்கலம், பொன்மலை, ஸ்ரீரங்கம், திருவெறும்பூர் ஆகிய 5 கோட்டங்கள் உள்ளது. இந்த 5 கோட்டங்களிலும் சுமார் 2.40 லட்சம் வீடுகள் மற்றும் பல்வகை வணிக நிறுவனங்கள், கடைகள் ஏராளமாக உள்ளது. திருச்சி மாநகரில் சராசரியாக ஒரு நாளைக்கு 400 டன் முதல் 450 டன் வரை குப்பைகள் சேரும். மக்கும் குப்பைகள் நுண் உரம் செயலாக்க மையங்களில் உரமாக மாற்றப்படும். இதனிடையே தீபாவளி பண்டிகைக்கு முந்தைய நாளில் முக்கிய கடைவீதிகளில் தற்காலிக கடைகள் உட்பட பல்வேறு கடைகளில் இருந்து வீசப்பட்ட பாலித்தீன் உறைகள், பாலித்தீன் பைகள், காகிதங்கள் மற்றும் தீபாவளி பண்டிகை நாளில் வீசப்பட்ட பட்டாசு மற்றும் இனிப்பு காலிப் பெட்டிகள், வெடி காகிதங்கள், வாழை இலைகள் என இன்று மாநகரில் வழக்கத்தைவிட சுமார் 697 டன் குப்பை கூடுதலாக குவிந்தது. தீபாவளி பண்டிகை நாளில் கோட்டம் தோறும் வழக்கத்தைக் காட்டிலும் கூடுதலாக 5 டன் குப்பை வரப்பெறும். ஆனால் பெரிய கடை வீதி, பர்மா பஜார், என்எஸ்பி சாலை, மேலரண் சாலை உள்ளிட்ட கடைவீதிகள் கொண்ட ஸ்ரீரங்கம் கோட்டத்தில் இருந்து வழக்கத்தைக் காட்டிலும் கூடுதலாக 10 டன் குப்பை வரப்பெற்றது. 




தீபாவளி மறுநாளான இன்று  மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் கடை வீதிகளில் வீசப்பட்டிருந்த குப்பைகளை அகற்றி மாநகராட்சி குப்பை வாகனத்தில் குப்பைகள் ஏற்றப்பட்டு அப்புறப்படுத்தினர். காலை 6 மணி முதல் மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் 1000 பேரும், ஒப்பந்த தொழிலாளர்கள் 1050 பேரும் மொத்தமாக 2050 பேர் குப்பைகளை சேகரித்து தூய்மை செய்யும் பணியில் ஈடுபட்டனர்.  இந்நிலையில் தீபாவளி பண்டிகை அன்று திருச்சி மாநகராட்சியில் வெகு சிறப்பாக பொதுமக்கள் கொண்டாடினர். இதனால் இன்று ஒரு நாள் மட்டும் திருச்சி மாநகராட்சியில் 1147 டன் குப்பைகள் அருளப்பட்டதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.