நடிகர் விஷால், நடிகை பிரியா பவானி சங்கர், சமுத்திரகனி ஆகியோர் நடிக்கும் விஷால் 34 என்று தற்காலிகமாக பெயரிடப்பட்ட திரைப்படத்தை டைரக்டர் ஹரி இயக்கி வருகிறார். இத்திரைப்படத்தின் ஷூட்டிங், திருச்சி - சிதம்பரம் சாலை, சிறுமருதூர் அருகில் உள்ள கிராமத்தில் நடைபெற்று வருகிறது. ஷூட்டிங் நடைபெற்று கொண்டிருந்த போது, அந்த வழியாக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு சென்றார். காணக்கிளியநல்லூருக்கு சென்று கொண்டிருந்த அமைச்சரை கண்டதும், படப்பிடிப்பு குழுவினர் அமைச்சருக்கு வணக்கம் தெரிவித்தனர். இதனை கண்ட அமைச்சர் கே.என்.நேரு தனது காரை நிறுத்தி படப்பிடிப்பு நடைபெறுவதை பார்வையிட்டார். அமைச்சர் கே.என்.நேரு வந்திருப்பதை அறிந்து அங்கு வந்த விஷால் அவரை வரவேற்றார். அவருடன் இயக்குனர் ஹரி, நடிகர் சமுத்திரகனியும் வரவேற்றனர். பின்னர் அமைச்சர் அவர்களுக்கு சால்வை அணிவித்து திரைப்படம் வெற்றி பெற வாழ்த்து தெரிவித்தார். மேலும் படப்பிடிப்பு குழுவினர்களுக்கு தீபாவளி வாழ்த்துக்களை கூறினார்.
இதனை தொடர்ந்து, நடிகர் விஷால் உள்ளிட்டோர், அமைச்சர் நேருவிற்கு பிறந்த நாள் வாழ்த்து கூறினர். பின்னர் எந்த உதவியென்றாலும் என்னை தொடர்பு கொள்ளுங்கள் என்று கூறி விட்டு அமைச்சர் நேரு புறப்பட்டு சென்றார். இந்த சந்திப்பின் போது திருச்சி மத்திய மாவட்ட செயலாளர் வக்கீல் க. வைரமணி, மேற்கு மாநகர செயலாளர் மேயர் அன்பழகன் ஆகியோர் உடன் இருந்தனர்.
இந்த சந்திப்பு குறித்து அரசியல் விமர்சர்களின் கருத்து : நடிகர் விஷால் - அமைச்சர் நேரு சந்திப்பு என்பது திடீர் நடந்தது இல்லை, முன்பாகவே திட்டமிட்டு இருக்கலாம். குறிப்பாக நடிகர் விஷாலுக்கு அரசியலுக்கு வர வேண்டும் என்ற எண்ணம் அதிகமாக உள்ளது. ஏற்கனெவே நடிகர் விஷால் தேர்தலில் நிற்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து, மக்கள் மத்தியில் தேர்தல் பிரச்சாரத்தையும் தொடங்கினார். ஆனால் அவரது வேட்புமனு சில காரணங்களால் நிராகரிக்கபட்டது. இதனை தொடர்ந்து நடிகர் விஷால் அவ்வபோது சில நிகழ்ச்சிகளில் செய்தியாளர்களை சந்தித்துக்கும் போது பல அரசியல் ரீதியான கருத்துக்களை வெளிப்படையாக தெரிவித்தார். இந்நிலையில் திருச்சி மாவட்டத்தில் நடைபெற்று வரும் நடிகர் விஷால் அவர்களின் படப்பிடிப்பு தளத்திற்கு சென்று அமைச்சர் கே.என். நேரு சந்தித்து வாழ்த்துகளை இருவரும் தெரிவித்துக்கொண்டனர். மேலும் இன்னும் சில மாதங்களில் நாடாளுமன்ற தேர்தல் வர உள்ளதால், நடிகர் விஷால் - அமைச்சர் நேரு சந்திப்பு, தற்போது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆகையால் இந்த சந்திப்புக்கு பிறகு தேர்தல் நேரத்தில் திமுகவில் நடிகர் விஷால் சேர அதிக வாய்ப்புள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது.