புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் தாலுகா கீரனூர் அருகே நார்த்தாமலையில், ஆளுருட்டி மலை கடம்பர் மலை, கோட்டை மலை, மேல மலை ஊரமலை போன்ற மலைகள் காணப்படுகின்றன. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர், திரு. பாலபாரதி என்பவரால், ஆளுருட்டி மலையின் கீழ்பகுதியில் உள்ள குகைத்தளத்தில், நட்சத்திர கூட்டத்தை குறிக்கும் வெண்சாந்து ஓவியங்கள் பதிவு செய்யப்பட்டது. தற்போது ஆளுருட்டி மலையின் மேற்பகுதியிலும் பாறை ஓவியங்கள் வரையப்பட்டிருப்பது களஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


ஆளுருட்டி மலையின், உச்சிப் பகுதியை நோக்கி செல்லும் பாதையின் நடு மலைப்பகுதியில் புதர்மண்டிய நிலையில் ஒரு குகை பகுதியில் பாண்டியநாட்டு பண்பாட்டு மையத்தைச் சேர்ந்த தொல்லியல் ஆர்வலர்களான கீரனூர் முருகபிரசாத் நாராயணமூர்த்தி ராகுல் பிரசாத் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டதில் குகைப்பகுதியின் தென்புறம் செஞ்சாந்து ஓவியங்கள் சேதமடைந்த நிலையில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்த ஓவியங்களின் பின்புறம் உள்ள, சொரசொரப்பான பாறையின் மேல், ஒருவிதமான வழவழப்பான திரவம் பூசப்பட்டு, அதன்மேல் பளிச்சென்று தெரியும் வண்ணம் இந்த ஓவியங்கள் வரையப்பட்டிருக்கிறது. ஆனால் தற்போது இயற்கையினாலும்,மனித செயல்பாடுகளினாலும், தற்போது ஓவியங்களின் பெரும்பகுதி சிதிலமடைந்துள்ளது.




மேலும், திரு. பாலபாரதி அவர்களால் பார்வையிடப்பட்டு, அந்த ஓவியங்கள் குறியீட்டு வகை ஓவியங்கள் எனவும், ஆளுருட்டிமலையின் கீழ்ப்பகுதியில் உள்ள வெண்சாந்து ஓவியத்தை விட பன்மடங்கு காலத்தால் பழமையானது எனவும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இது 1970ம் ஆண்டுகளில், தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த மல்லப்பாடியில் கண்டுபிடிக்கப்பட்ட பாறை ஓவியம் முக்கியமான ஒரு கண்டுபிடிப்பாக அமைந்தது. தமிழ்நாட்டில் 30க்கும் மேற்பட்ட இடங்களில்  பாறை ஓவியங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அதிலும் குறிப்பாக புதுக்கோட்டை மாவட்டத்தில் பல ஆண்டுகளுக்கு பிறகு புதிதாக இந்த பாறை ஓவியங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.


பொதுவாக பாறை ஓவியங்களின் காலத்தினை, தொல்லியல் ஆய்வாளர்கள் வெண்சாந்து ஓவியமாக இருக்கும் பட்சம் 5000 ஆண்டுகள் பழமையானது என்றும், செங்காவி ஓவியமாக இருக்கும் பட்சம் 10000ஆண்டுகள் பழமையானவை என்றும் தோராயமாக கணிக்கின்றனர். இந்நிலையில்  தற்போது கண்டுபிடிக்கப்பட்ட செங்காவி ஓவியங்கள் 10,000 ஆண்டுகள் பழமையானதாக இருக்கலாம். எழுத்து, ஓவியம், சிற்பங்கள் தான் நம் முன்னோரின் வரலாற்றை நமக்கு அடையாளம் காட்டுகின்றன. ஆகவே, தற்போது கண்டுபிடிக்கப்பட்ட இந்த பாறை ஓவியங்களில் பயன்படுத்தப்பட்ட வண்ணக் கலவைகளை இரசாயனச்சோதனை செய்து அவற்றின் காலத்தை கணிப்பதுடன் இந்த பாறை ஓவியங்களை  இரும்பு வேலியிட்டு பாதுகாக்க வேண்டும்.




புதுக்கோட்டை மாவட்டத்தில் தொடர்ந்து நமது பண்டையாக மன்னர்களின் வீரம், குலதெய்வம், கலச்சாரம்,கலை, இலக்கியம், வாழ்க்கை முறை, போர் சின்னம், தொழில்நுட்பம் போன்ற வரலாற்று சிறப்புமிக்க பல கல்வெட்டுகள் கண்டுபிடிக்கபட்டு வருகிறது. இவற்றை அரசு தொல்லியல்துறை மிகவும் கவனமாக பாதுக்காக்க வேண்டும். ஏன் என்றால் நமது வரலாற்றை வருங்கால இளைஞர்கள் மற்றும் பள்ளி மாணவர்களுக்கு இது போன்ற வரலாற்றுத் தடயங்களை மாதம் ஒருமுறை நேரில் அழைத்துச் சென்று அதன் வரலாற்று முக்கியத்துவத்தை விளக்க வேண்டும் என்பதே தொல்லியல் ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது என்றனர்.