திருச்சி மாவட்டம் தா.பேட்டையில் காசி விசாலாட்சி உடனமர் காசி விஸ்வநாதர் சிவாலயம் அமைந்துள்ளது. மிகவும் பழமையான இக்கோவிலில் கல்வெட்டு மற்றும் தொல்லியல் துறை ஆய்வாளர் பேராசிரியர் பாபு கள ஆய்வு மேற்கொண்ட பிறகு கூறியிருப்பதாவது. தா.பேட்டை காசி விஸ்வநாதர் சிவாலயத்தில் பல கலைநயம் மிக்க சிற்பங்கள் காணப்படுகின்றன. மிக நுண்ணிய வேலைப்பாடுகள் நிறைந்த பல சிற்பங்களும் உள்ளது. தூண்களில் சிற்பங்கள், பறவைகள், விலங்குகள் சிற்பங்களும் நேர்த்தியாக புடைப்புச் சிற்பங்களாக அமைக்கப்பட்டுள்ளது. தற்போது இங்கு கோயில் கருவறை சுற்றுப்பிரகார நடைபாதையில் ஓர் அதிசய சிற்பம் கண்டறியப்பட்டது. இது ஜெஸ்டர் எனப்படும் பழமையான (கோமாளி) சிற்பமாகும். சிற்ப அமைப்பில் தலையில் அயல் நாட்டு கோமாளிகள் அணிந்திருக்கும் வகையான தொப்பியும், கைகளில் காப்பு, கால்களில் காப்பு மற்றும் மார்பில் ஆபரணம் அணிந்த நிலையில்,இரு கைகளையும் உயர்த்திய நிலையில் குதித்தவாறு சிரித்தபடி இருக்கும் இந்த புடைப்புச்சிற்பம் அயல் நாட்டைச் சேர்ந்த ஒரு கோமாளியின் சிற்பமாகும்.ஒரு கோமாளிக்கு கோவிலில் முக்கியத்துவமளிக்க வேண்டிய அவசியம் என்னவென்று ஆராய்ந்தால் பல வரலாற்று உண்மைகள் நமக்குத் தெரியவருகின்றன.
மேலும் கி.பி 14ம் நூற்றாண்டில் ஜெஸ்டர் எனப்படும் கோமாளிகள் எகிப்து அரசர்களின் அவையில் முக்கியத்துவம் பெற்றிருந்தனர். இவர்களது பணி அரசர்களையும், மக்களையும் தங்களுடைய வேடிக்கை நிகழ்ச்சிகளால் மகிழ்விப்பதாகும். இவர்கள் உலகின் பல நாடுகளிலும் தங்களது கலைப்பணியை செய்து வந்ததை வரலாற்றுச் சான்றுகள் கூறுகின்றன. அதுபோல் இந்தியாவிலும் நம் தமிழகத்தின் பல கோவில் தூண்களிலும் இத்தகைய ஜெஸ்டர்(கோமாளி சிற்பம்) இருப்பதைக் காணலாம். அந்த வகையில் தா.பேட்டை சிவன் கோவில் காணப்படும் ஜெஸ்டர் சிற்பம் முற்காலத்தில் இங்கு வாழ்ந்த மக்களுக்கும் அயல்நாட்டினருக்கும் தொடர்புகள் இருந்திருக்கலாம் என்பதை எடுத்துக்காட்டும் விதமாக உள்ளது. தமிழத்தின் பெரும்பான்மையான கோவில்களில் கோமாளிச் சிற்பங்கள் தற்காலத்திய ஜோக்கர் வடிவத்தை சிற்பங்களாக வடிவமைத்து இருப்பதை காணலாம். ஆனால் இங்கு காணப்படும் சிற்பம் முற்றிலும் மாறுபட்டதாகும். இத்தகைய கலைநயமிக்க சிற்பம் பாதுகாக்கப்பட வேண்டியது அவசியமாகும். தூண் ஒன்றில் குரங்கினுடைய சிற்பமொன்று அமர்ந்த நிலையில் கனியினை சுவைத்தபடி இருப்பது தத்ரூபமாக வடிக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து இங்கு கருவறை சுற்றுச்சுவரில் பாலியல் சிற்பங்களும் வடிக்கப்பட்டுள்ளது. மேலும் பஞ்சமுக பைரவர் பத்து கரங்களுடன் ஐந்து முகங்களுடன் யாழி வாகனத்துடன் கபால மாலை அணிந்து கம்பீரமான தோற்றத்தோடு காட்சியளிக்கிறார். மேலும் குறிப்பாக மகாமண்டப விதானத்தில் நாயக்கர் கால கட்டுமானத்தை உறுதிப்படுத்தும் மீன் சின்னங்கள் காணப்படுகின்றது. பிரகாரத்தின் கீழே கிடக்கும் அரிய சிற்பங்கள் மற்றும் கோயில் கருவறை பிரகாரத்தில் பொறிக்கப்பட்டுள்ள சிற்பங்களை பாதுகாக்க இந்து சமய அறநிலையத்துறை உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தமிழரின் பாரம்பரியத்தைப் பறைசாற்றும் இத்தகைய கலைச்சின்னங்கள் பாதுகாக்கப்பட வேண்டும். தா.பேட்டை சிவாலயம் திருப்பணிக்காக பாலாலயம் செய்யப்பட்டுள்ள நிலையில் தொன்மை மாறாமல் புதுப்பிப்பது அவசியமாகும். என தொல்லியல் கல்வெட்டு ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.