உலக சுகாதார நிறுவனம், மத்திய மற்றும் மாநில அரசின் உதவியுடன் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில்  போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாம் காலை 7 மணி முதல் மாலை 5 மணிவரை நடைபெற்றது. கடந்த (13.01.2011) முதல் இன்று வரை இந்தியாவில் போலியோ நோயின் தாக்கம் இல்லை. தொடர்ந்து இந்நிலையினை தக்க வைத்து கொள்வதற்கும், போலியோ நோயை அறவே ஒழிப்பதற்கும் இந்த முறையும் மிகவும் சிரத்தையோடு போலியோ சொட்டு மருந்து முகாம் நடத்தப்பட்டது. திருச்சி மாவட்டத்தின் கிராமப்புறங்களில் 1279 மையங்களிலும், திருச்சி மாநகராட்சியில் 247 மையங்களிலும் , துறையூர் நகராட்சியில் 20 மையங்களிலும், மணப்பாறை நகராட்சியில் 23 மையங்களிலும் என மொத்தம்1,569 மையங்களில் போலியோ சொட்டு மருந்து குழந்தைகளுக்கு செலுத்தபட்டது. அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் இன்று பிறந்த குழந்தை முதல் 5 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது.




மேலும் திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்குட்பட்ட அனைத்து நகர் நல மையங்களிலும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டு வருகிறது. குறிப்பாக  ஸ்ரீரங்கம், குணசீலம், சமயபுரம், வயலூர் ஆகிய கோயில்கள், மசூதிகள் தேவாலயங்கள் மற்றும் அனைத்து பேருந்து நிலையங்கள், இரயில்வே நிலையங்கள், விமான நிலையம், முக்கொம்பு போன்ற சுற்றுலாதலங்கள் ஆகிய அனைத்து இடங்களிலும் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்க 55 இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டது என்பது குறிப்பிடதக்கது. மேலும் பெற்றோர்கள் குழந்தைகளை அழைத்து வர இயலாத இடங்களில் அவர்களுக்கு 69 நடமாடும் குழுக்கள் மூலம் போலியோ சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது என மாவட்ட ஆட்சியர் சிவராசு தெரிவித்துள்ளார்.


மேலும் இரயில்வே நிர்வாகத்துடன் இணைந்து திருச்சியிலிருந்து செல்லும் மற்றும் திருச்சி வழியாக செல்லும் அனைத்து ரயில்களில் இன்று ரயில் பயணம் செய்யும் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டது என்றார்.




திருச்சி மாவட்டத்தில் உள்ள கிராமப்புறங்களில் 1,51,608 குழந்தைகளுக்கும், நகர்புறங்களில் 83,156 குழந்தைகளுக்கும், ஆக மொத்தம் 2,34,764 குழந்தைகளுக்கு சொட்டு மருந்து கொடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் இடம் பெயர்ந்து குடியிருப்போர் மற்றும் நாடோடிகளின் குழந்தைகள் 382 பேர்களுக்கும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது. திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் 2,35,146 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து செலுத்தப்பட்டுள்ளது . மேலும் 5 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் ஏற்கனவே எத்தனை முறை சொட்டு மருந்து கொடுத்திருந்தாலும், மீண்டும் முகாமில் கட்டாயம் சொட்டு மருந்து கொடுப்பது போலியோ நோயிலிருந்து முழு பாதுகாப்பை அளிக்கும் என்றார்.


எனவே தாய்மார்கள் அனைவரும் தங்கள் பிறந்த குழந்தை முதல் 5 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளையும் அருகில் உள்ள போலியோ சொட்டு மருந்து மையத்திற்கு அழைத்துச்சென்று தவறாமல் போலியோ சொட்டு மருந்து போட்டு பயனடையுமாறு திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு கேட்டுக்கொண்டதை தொடர்ந்து மக்கள் அனைவரும் தவறாமல் தங்களது குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து செலுத்திக்கொண்டனர் என்பது குறிப்பிடதக்கது.