புதுக்கோட்டை வழியாக விருதுநகர்- திருச்சி பயணிகள் ரயில் இயங்கி வந்தது. மீட்டர் கேஜ் பாதை காலத்தில் இருந்து இந்த ரயில் சேவை உள்ளது. அகல ரயில் பாதை ஆன பின்பும் தொடர்ந்தது. திருச்சியில் இருந்து விருதுநகர் வரை உள்ள சுமார் 217 கி.மீ. கொண்ட ரயில் பாதையில் இந்த ரயில் 5.30 மணி நேரத்திற்கு மேல் தொடர்ந்து பயணமாகும். பயணிகள் ரயிலான இதில் கழிவறை வசதி ஏற்படுத்த வேண்டும் என்று பயணிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இந்த நிலையில் 150 கி.மீ. மேல் இயங்கும் ரயில்களில் கழிவறை வசதி ஏற்படுத்தித்தர வேண்டும் என்ற ரயில்வே விதி உள்ளது. இருப்பினும் நிர்வாக காரணங்களுக்காக இந்த ரயில் 2 எண்களை கொண்ட ரயிலாக சில ஆண்டுகளுக்கு முன்பு மாற்றப்பட்டது. அதாவது திருச்சி-காரைக்குடி இடையே 76839/40 என்ற வண்டி எண்ணும், காரைக்குடி- விருதுநகர் இடையே 76837/38 என்ற வேறொரு ரயில் வண்டி எண்ணுடனும் ஒரே ரயில் பெட்டிகளுடன் தொடர்ந்து இயங்கும் ரயிலாக மாற்றப்பட்டது. இருந்தாலும் பயணிகளை பொறுத்தவரை இது விருதுநகர் - திருச்சி டெமு ரயில் என்றே அழைக்கப்பட்டது.






விருதுநகரில் இருந்து காலை 6.10 மணிக்கு புறப்பட்டு புதுக்கோட்டைக்கு காலை 10.34 மணிக்கு வந்து 10.35 மணிக்கு புறப்பட்டு திருச்சிக்கு பகல் 11.50 மணிக்கு செல்லும். ஞாயிறு தவிர மற்ற நாட்களில் இந்த ரயில் இயங்கி வந்தது. மறுமார்க்கத்தில் திருச்சியில் இருந்து மாலை 3.45 மணிக்கு புறப்பட்டு புதுக்கோட்டைக்கு மாலை 4.44 மணிக்கு வந்து மாலை 4.45 மணிக்கு புறப்பட்டு விருதுநகருக்கு இரவு 9.35 மணிக்கு செல்லும். இந்த ரயில் சனிக்கிழமை தவிர மற்ற நாட்களில் இயங்கியது. கொரோனா பரவல் காரணமாக கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் இந்த ரயில் நிறுத்தப்பட்டது. அதன்பின் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் விருதுநகர்-காரைக்குடி ரயில் மட்டும் மீண்டும் இயக்கப்பட்டு வருகிறது. ஆனால் இதன் இணை ரயிலான காரைக்குடி- திருச்சி ரயில் இன்னும் இயக்கப்படவில்லை.




தற்போது இயக்கப்படும் விருதுநகர்-காரைக்குடி டெமு ரயில் காரைக்குடி சந்திப்பில் காலை 9.30 மணி முதல் மாலை 6 மணி வரை நிறுத்தி வைக்கப்படுகிறது. காரைக்குடியோடு நிறுத்தப்படுவதால் விருதுநகர், அருப்புக்கோட்டை, மானாமதுரை, சிவகங்கை போன்ற பகுதிகளிலிருந்து புதுக்கோட்டை, திருச்சி வரும் பயணிகள் மிகுந்த சிரமத்தை எதிர்கொள்கின்றனர். அதுபோல பகலில் புதுக்கோட்டையிலிருந்து சிவகங்கை, அருப்புக்கோட்டை, விருதுநகர் போன்ற பகுதிகளுக்கு பயணிக்க முடியாத நிலை தொடர்கிறது. மேலும் இந்த ரயிலை அதிகம் பயன்படுத்துவது பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் தான். எனவே மாணவர்களின் நலன் கருதி, 2 ஆண்டுகளுக்கு மேலாக இயக்கப்படாமல் உள்ள விருதுநகர்-காரைக்குடி ரெயிலின் இணை ரயிலான 76839/40 காரைக்குடி-திருச்சி 'டெமு' ரெயிலை உடனடியாக இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண