நாட்டின் பல்வேறு மாநிலங்களில் மீண்டும் கொரோனா பரவல் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதைத் தொடர்ந்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தீவிர கண்காணிப்பு நடவடிக்கையில் களமிறங்கியது. கடந்த மார்ச் 22ஆம் தேதி டெல்லியில் சுகாதாரத்துறை உயர் அதிகாரிகளுடன் இந்தியா பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். கொரோனா மேலும் பரவாமல் இருக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. தொடர்ந்து நேற்று மாநில அரசுகளுக்கு மத்திய அரசு முக்கிய வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது. இந்த சூழலில் கொரோனா பரிசோதனைகளை அதிகரித்து முடிவுகள் விரைவாக கிடைப்பதையும் உறுதி செய்ய வேண்டும். முன்னெச்சரிக்கையாக மருத்துவமனைகளில் படுக்கைகள், மருந்துகள், ஆக்சிஜன் சிலிண்டர் உள்ளிட்டவை இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று  மாநில அரசுகளுக்கு மத்திய அரசு  அறிவுறுத்தியுள்ளது.இந்நிலையில் கொரோனா பரவல் அதிகரிப்பை எதிர்கொள்ள நாடு முழுவதும் ஒத்திகை பயிற்சி நடவடிக்கையை மேற்கொள்ள மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. நாட்டின் அனைத்து மாநிலங்களில் உள்ள மாவட்டங்களின் பொது, தனியார் சுகாதார நிலையங்கள், மருத்துவமனைகளில் ஏப்ரல் 10, 11 ஆகிய தேதிகளில் mock drill எனப்படும் ஒத்திகை பயிற்சி நடவடிக்கையை அரசு மேற்கொள்ளவுள்ளது. இந்த பயிற்சியில் மருத்துவமனைகள், சுகாதார நிலையங்களின் மருந்துகள் இருப்பு, படுக்கை வசதிகள், ஆக்சிஜன் இருப்பு போன்றவை தயார் நிலையில் உள்ளதா என ஆய்வு செய்யப்படும். 




இந்தநிலையில் திருச்சி மாவட்டத்தில் தினசரி கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை கூடிகொண்டே இருக்கிறது.  நேற்று ஒரேநாளில் 11 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை மருத்துவமனையில் 60 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். திருச்சி மாவட்டத்தை பொறுத்தவரை இதுவரை மொத்தம்  98,481 தொற்றால் பாதிக்கபட்டுள்ளனர். 97,259 குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 1162 பேர் இறந்துள்ளனர். ஆகையால்  கொரோனா தொற்று பரவுவதை தொடர்ந்து பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். குறிப்பாக முககவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என மாவட்ட நிர்வாக அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். இந்நிலையில் அரசு மருத்துவமனை டீன் டாக்டர் நேரு நிருபர்களிடம் கூறியது..  கொரோனா சிறப்பு வார்டில் தற்போது 40 படுகை வசதிகள் தயார் நிலையில் உள்ளன. 330 ஆக்சிஜன் கான்சென்டரேட்டர்கள், 25 ஆயிரம் பி.பி.இ. கிட், 120 வெண்டிலேட்டர்கள் மற்றும் தேவையான அளவு மருந்துகள் கையிருப்பில் உள்ளன. கொரோனாவை எதிர் கொள்ளும் வகையில் டாக்டர்கள், நர்சுகள் தயார் நிலையில் உள்ளனர். தற்போது, குறைந்த அளவு கொரோனா நோயாளிகள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். திருச்சி மாநகராட்சி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தினமும் 300-க்கும் மேற்பட்டோர் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர். தற்போது இந்த சிகிச்சை மையத்திற்கு உள்ளேயே ஆர்.டி.பி.சி.ஆர். சோதனை செய்வதற்கான வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. எனவே திருச்சி மாவட்டத்தை பொருத்தவரை கொரோனா தொற்றை எதிர்கொள்ள திருச்சி அரசு மருத்துவமனை தயார் நிலையில் உள்ளது. போதுமான மருந்துகள் கையிருப்பு உள்ளது என்றார்.