திருச்சி மத்திய சிறை வளாகத்தில் அகதிகளுக்கான சிறப்பு முகாம் உள்ளது. இங்கு வெளிநாடுகளை சேர்ந்த குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மீதான வழக்கில் ஜாமீன் கிடைத்தாலும் வழக்கு முடிவதற்கு முன்பாக வெளிநாட்டுக்கு தப்பி செல்லாமல் இருப்பதற்காக இந்த சிறப்பு முகாம் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது வரை இந்த முகாமில் இலங்கை, வங்கதேசம், நைஜீரியா, ருவாண்டா, பல்கேரியா, தெற்கு சூடான் உள்பட பல நாடுகளை சேர்ந்த 156 பேர் உள்ளனர். இவர்கள் தங்கள் மீதான வழக்குகளை விரைந்து முடித்து சிறப்பு முகாமில் இருந்து விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி அவ்வப்போது போராட்டமும் நடத்தி வருவது உண்டு. கடந்த மாதம் 20-ந்தேதி திருச்சி சிறப்பு முகாமில் தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தினார்கள். கேரளாவில் போதைப்பொருள் சிக்கிய வழக்கு தொடர்பாக இந்த சோதனை நடத்தப்பட்டதாக கூறப்பட்டது. அப்போது முகாமில் இருந்து தங்க நகைகள், பணம், செல்போன்கள், கண்காணிப்பு கேமரா பதிவுகள் உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்தனர். இதனை தொடர்ந்து அமலாக்கத்துறையினரும் சிறப்பு முகாமில் சோதனை நடத்தினர். இதில் குறிப்பிட்ட 11 அகதிகளிடம் விசாரணை நடத்தினார்கள். இந்த நிலையில் கடந்த 20-ந் தேதி அகதிகளுக்கான சிறப்பு முகாமில் திருச்சி மாநகர போலீசார் திடீர் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் 155 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்த நிலையில் பறிமுதல் செய்யப்பட்ட செல்போன்களை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என வலியுறுத்தி நேற்று அகதிகள் முகாமில் கைதிகள், அங்குள்ள மரத்தின் உச்சியில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டனர். "தண்டனை காலம் முடிந்த பின்னரும் எங்களை சிறையில் வைத்துள்ளனர். எங்களை காப்பாற்றுங்கள், பறிமுதல் செய்த செல்போனை கொடுங்கள்" என கையில் பதாகைகளை தூக்கிப் பிடித்தபடி அவர்கள் கோஷம் போட்டனர். இதனையடுத்து அதிகாரிகள் தொடர்ந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். உயர் அதிகாரிகளிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதை அடுத்து மாலை 5.30 மணிக்கு பிறகு அவர்கள் மரத்தில் இருந்து இறங்கினர். இந்த சம்பவத்தால் முகாம் சிறை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அகதிகள் முகாமில் இருக்கும் கைதிகள் அவ்வபோது இதுபோன்ற போராட்டங்களில் ஈடுபட்டு வருவதால் அப்பகுதி பரபரப்பாகவே காணப்படுகிறது.
மேலும் இதன் காரணமாக முகாம் கைதிகளை பார்க்க வந்தவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. காலையில் முகாம் கைதிகளை பார்ப்பதற்காக, அவர்களது உறவினர்கள் வந்து இருந்தனர். ஆனால் போலீசார் அவர்களை பார்க்க விடாமல் தடுத்து நிறுத்தினர். இதனால் அவர்கள் சிறை முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். அவர்களை சிறை போலீசார் கலைந்து போக செய்தனர். இதனிடையே முகாமில் உள்ள கைதிகள் நேற்றும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் முகாம் சிறையின் சுற்றுச்சுவரில் ஏறி கோஷமிட்டனர். தங்களை பார்க்க வரும் உறவினர்களை அனுமதிக்க வேண்டும். பறிமுதல் செய்யப்பட்ட செல்போன்களை திரும்ப ஒப்படைக்க வேண்டும் என வலியுறுத்தினர். இந்த சம்பவத்தால் முகாம் சிறையில் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.