திருச்சி, பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னையில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு காலை 9.50 மணிக்கு திருச்சி விமான நிலையத்துக்கு வந்தடைந்தார். அங்கு அவருக்கு கட்சியினர் சிறப்பான வரவேற்பு அளித்தனர். இதனை தொடர்ந்து விமான நிலையத்தில் இருந்து கார் மூலம் புறப்பட்ட முதல்வர், திருச்சி காட்டூரில் உள்ள ஆதிதிராவிடர் பெண்கள் உயர்நிலைப்பள்ளியில் சக்கரங்களில் அறிவியல் என்ற நிகழ்ச்சியினை காலை 10.30 மணிக்கு கலந்துக்கொண்டு வானவில் மன்றத்தை  துவக்கி வைத்தார். தொடர்ந்து அங்கிருந்து 11 மணிக்கு புறப்பட்டு மதியம் 12.30 மணிக்கு பெரம்பலூருக்கு வருகை தந்து, வேப்பந்தட்டை தாலுகா, எறையூரில் சிப்காட் தொழில் பூங்காவிற்கு அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார். பின்னர் விருந்தினர் மாளிகையில் மதியம் உணவு சாப்பிட்டுவிட்டு சிறிது நேரம் ஓய்வெடுக்கிறார். பின்னர் மாலை 4 மணியளவில் பெரம்பலூரில் இருந்து புறப்பட்டு அரியலூர் மாவட்டம், கங்கை கொண்ட சோழபுரத்தில் உள்ள மாளிகைமேட்டுக்கு மாலை 5.15 மணிக்கு சென்று, அங்கு நடைபெற்று வரும் அகழ்வாராய்ச்சி பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்கிறார். பின்னர் அவர் அங்கிருந்து மாலை 5.45 மணிக்கு புறப்பட்டு அரியலூர் விருந்தினர் மாளிகைக்கு இரவு 7 மணிக்கு வருகிறார்.

 




அங்கேயே இரவு உணவை முடித்து கொண்டு, ஓய்வெடுக்கிறார். நாளை காலை 9.15 மணிக்கு அரியலூர் விருந்தினர் மாளிகையில் இருந்து புறப்படும் முதல்வர் மு.க.ஸ்டாலின் காலை 9.30 மணிக்கு அரியலூர் அருகே கொல்லாபுரத்தில் பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களுக்கு சேர்த்து நடைபெறும் அரசு விழாவில் கலந்து கொள்கிறார். அங்கு 2 மாவட்டங்களுக்கான புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற பணிகளை தொடங்கி வைத்து, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். பின்னர் அந்த நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு அவர் காலை 10.45 மணியளவில் புறப்பட்டு பெரம்பலூர் வழியாக கார் மூலம் திருச்சி விமான நிலையத்துக்கு மதியம் 12.15 மணிக்கு சென்றடைகிறார். நாளைய மதியம் 12.30 மணிக்கு செல்லும் விமானத்தில் சென்னைக்கு புறப்பட்டு செல்கிறார். இந்நிலையில் பெரம்பலூர் மாவட்டத்தில் இன்றும், நாளையும்  டிரோன்கள் பறக்க தடை விதித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகையை முன்னிட்டு பாதுகாப்பு கருதி 2 நாட்களுக்கு டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.



 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்



ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர.


யூடியூபில் வீடியோக்களை காண.