இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு வழக்கறிஞர்கள் கூட்டம் திருச்சி உறையூர் ஜிகேஎம் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு மாநில ஒருங்கிணைப்பாளர் பாரதி தலைமை வகித்தார்.


இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த முத்தரசன் பேசியது..


கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் அருந்தி 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக அரசு எடுத்து வரும் அனைத்து முயற்சிகளும் வரவேற்கத்தக்கது, பாராட்டுக்குரியது. மேலும், காவல் துறை, வருவாய்த் துறை, மதுவிலக்கு அமல் பிரிவு ஆகியவற்றில் கருப்பு ஆடுகள் இருக்கின்றன என்று குற்றம்சாட்டியுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். மாவட்ட கண்காணிப்பாளர் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் சிறப்பான சிகிச்சை அளித்து வருகின்றனர். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசு நிவாரணம் வழங்கியுள்ளது.




கள்ளச்சாராயம் விற்பனைக்கு காவல்துறையும் உடைந்தை - முத்தரசன் குற்றச்சாட்டு .


இது ஒருபுறம் இருந்தாலும் இந்தக் கள்ளச்சாராயம் விற்பனை எப்படி நடைபெற்று வருகிறது என்பதை உற்று நோக்க வேண்டும். கள்ளக்குறிச்சி காவல் நிலையம் மற்றும் நீதிமன்றம் அருகிலேயே கடந்த 15 ஆண்டுகளாக இந்த கள்ளச் சாராயம் விற்பனை நடைபெற்று வருகிறது. கல்வராயன்மலை மற்றும் புதுச்சேரியில் இருந்து கள்ளக்குறிச்சிக்கு கள்ளச் சாராயம் மற்றும் அது தயாரிக்க தேவையான பொருட்கள் வந்துள்ளது. இது எப்படி காவல் துறைக்கும்,  மதுவிலக்குத் துறைக்கும் தெரியாமல் போனது என ஆச்சரியமாக உள்ளது. கள்ளச் சாராயம் தொடர்பாக காவல் துறைக்கு மிகப் பெரிய வருமானம் கிடைத்துள்ளது. கள்ளச் சாராயம் இருக்கக் கூடாது என்பதில் தமிழக முதல்வர் உறுதியாக இருக்கிறார். ஆனால், இதையெல்லாம் தாண்டி காவல் துறை, வருவாய்த்துறை, மதுவிலக்கு அமல் பிரிவு ஆகியவற்றில் கருப்பு ஆடுகள் இருக்கின்றன. இவர்களும், கள்ளச் சாரய வியாபாரிகளும், கள்ளச் சாராயம் காய்ச்சுபவர்களும் சேர்ந்து ஒரு கூட்டணி அமைத்திருக்கிறார்கள். உள்ளூர் அரசுத் துறை அதிகாரிகள் ஆதரவில்லாமல் இது நடைபெறாது. அவர்களையும் இந்த வழக்கில் சேர்க்க வேண்டும். இவர்கள் மேல் நடவடிக்கை எடுத்தால் தான் ஓர் அச்சம் ஏற்படும். எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவம் நிகழாமல் இருக்கும்.




மது குறித்து மக்களிடையே அரசு கடுமையான விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்


மது குறித்து மக்களிடம் அரசு கடுமையான விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அரசியல் கட்சினரும் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றார்.


மேலும் திருநெல்வேலி மாவட்டம் மாஞ்சோலையில் நான்கு தலைமுறைகளாக 700 குடும்பங்கள் தேயிலை பறிக்கும் தொழிலில் ஈடுபட்டு வந்தனர். குத்தகைக் காலம் நிறைவடைவதால் மாஞ்சோலை தொழிலாளர்களை வெளியேற்றும் நடவடிக்கை நடைபெற்று வருகிறது. உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தொடரப்பட்ட வழக்குகளில் மாஞ்சோலை தொழிலாளர்களை வெளியேற்றக் கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது.மாநில அரசே மாஞ்சோலை எஸ்டேட்டை எடுத்து நடத்த வேண்டும் அல்லது மாற்று ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்றார்.


நீட் தேர்வில் தவறு நடக்கவில்லை என்று சத்தியம் செய்த மத்திய கல்வித் துறை அமைச்சர், இப்போது தவறு நடந்ததை ஒப்புக்கொண்டுள்ளார். தமிழகத்தில் நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க வேண்டும். இந்திய தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம், சாட்சிய சட்டம் ஆகிய மூன்று சட்டங்களையும் நிறுத்தி வைக்க வேண்டும். புதிய நாடாளுமன்றத்தில் முறையாக விவாதம் செய்து அவை நிறைவேற்றப்பட வேண்டும் என தெரிவித்தார்.