சென்னை வேளச்சேரியை சேர்ந்தவர் திவ்யா (வயது 27, பெயர் மாற்றப்பட்டுள்ளது). தற்போது இவர் திருச்சி காந்தி மார்க்கெட் கிருஷ்ணன் கோவில் தெரு பகுதியில் வசித்து வருகிறார். இந்த நிலையில் இந்த பெண் திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் ஒரு புகார் மனு அளித்தார். அதில் அவர் தெரிவித்திருப்பது: சென்னையைச் சேர்ந்த நான் திருச்சியில் தங்கி எம்.எஸ்சி. கணிதம் படித்து வருகின்றேன். மேலும் இங்கு உள்ள ஒரு தனியார் கல்லூரியில் கௌரவ விரிவுரையாளராகவும் பணிபுரிந்து வருகிறேன். இந்தநிலையில் எனது மாமன் மகன் எனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது தொடர்பாக கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தேன். அவர் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். பின்னர் எனது செல்போனை அந்த காவல் நிலைய அதிகாரி விசாரணைக்காக வாங்கி வைத்துக்கொண்டார்.
மேலும் இதற்கிடையே அந்த முதல் தகவல் அறிக்கையில் சில தவறான தகவல்கள் இடம் பெற்று இருந்ததால் அதனை திருத்தம் செய்வதற்காக மீண்டும் துணை போலீஸ் கமிஷனரை சந்திக்க , கமிஷனர் அலுவலகத்துக்கு சென்றேன். அப்போது திருச்சி மாநகரில் பணியாற்றும் இன்ஸ்பெக்டர் ஒருவர் என்னைப் பற்றிய விவரங்களை தெரிந்து கொண்டு எனக்கு உதவுவது போல நடித்து அவரும் எனக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்தார். வீடியோ கால் மற்றும் வாய்ஸ் காலில் வந்து தொல்லை கொடுத்தார். அவருக்கு பெண் போலீஸ் அதிகாரி உட்பட சில போலீசாரும் உதவியாக இருக்கின்றனர். என்னை தாக்கி தவறாக வீடியோவும் எடுத்துள்ளனர். அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்