திருச்சி மத்திய மண்டலத்தில் கடந்த 2 ஆண்டுகளாக போதை பொருட்கள் விற்பனை கூடாரமாக மாறி வருகிறது. திருச்சி, கரூர், புதுக்கோட்டை, திருவாரூர், மயிலாடுதுறை போன்ற பகுதிகளில் கஞ்சா விற்பனை அமோகமாக நடைபெற்று வருவதாக காவல்துறைக்கு தொடர்ந்து புகார் மனுக்கள் வந்த வண்னம் இருந்தது. இந்நிலையில் திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி.பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் அனைத்து இடங்களிலும் தனிப்படை அமைத்து போதை பொருட்கள் விற்பனை செய்பவர்களை உடனடியாக கைது செய்து வருகிறார்கள். இதனை தொடர்ந்து திருச்சி மத்திய மண்டலம் மட்டும் அல்லாமல் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் கஞ்சா விற்பனை அதிகரித்துள்ளது. இதனால் பள்ளி, கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் அதிக அளவில் பாதிக்கபட்டு வருகிறார்கள். மேலும் இது போன்ற தீய பழக்கத்திற்கு அடிமையாகுவதால் பல்வேறு குற்ற செயல்கள் அதிகரித்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் கஞ்சா விற்பனையை தடுக்க காவல்துறை அதிரடி நடவடிக்கை எடுக்க டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து அந்தந்த மாவட்டங்களில் தனிப்படை அமைத்து போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டத்திலும் காவல்துறை சூப்பிரண்டு நிஷா பார்த்திபன் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த ஒரிரு தினங்களில் மாவட்டத்தில் கஞ்சா விற்ற வழக்கில் 10-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். இதில் அறந்தாங்கி பகுதியில் மட்டும் 8 கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலும் 19 முதல் 25 வயதிற்குட்பட்டவர்கள். இவர்களிடம் தனிப்படை காவல்துறையினர் விசாரணை நடத்திய போது திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. கோவையில் இருந்து காவல்துறை சேர்ந்த ஒருவரிடம் கஞ்சா வாங்கி வந்து விற்றதாக தெரிவித்துள்ளனர். இதையடுத்து காவல்துறை அதிகாரியிடம் கோவை சென்று விசாரணை நடத்திய போது அவரது பெயர் கணேஷ்குமார் (38) என்பதும், கோவையில் ஆயுதப்படை காவலராக பணியாற்றி வருவதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து கணேஷ்குமாரை தனிப்படை காவல்துறையினர் கைது செய்து இன்று புதுக்கோட்டைக்கு அழைத்து வந்தனர்.
மேலும் இது தொடர்பாக அறந்தாங்கி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கைதான காவலர் கணேஷ்குமாரிடம் இருந்து அரை கிலோ கஞ்சாவை காவல்துறை பறிமுதல் செய்ததாக கூறப்படுகிறது. கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த அவரிடம் இருந்து அறந்தாங்கி பகுதியை சேர்ந்தவர்கள் வாங்கி வந்து விற்றுள்ளனர். இவர்களுக்குள் பழக்கம் எப்படி ஏற்பட்டது? இதன் பின்னணியில் வேறு யாரேனும் உள்ளனர்களா? என தனிப்படை காவல்துறையினர் விசாரிக்கின்றனர். கஞ்சா விற்ற வழக்கில் காவல்துறையை சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டிருந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் சட்டத்திற்கு புறம்பாக கஞ்சா விற்பனை, போதைப்பொருட்கள் விற்பனையில் யார் ஈடுபட்டாலும் சட்டரீதியாக கடுமையான நடவடிக்கை எடுக்கபடும் என காவல்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.