புதியதாக அமைச்சராகியுள்ள உதயநிதி ஸ்டாலின் சிறப்பாக பணியாற்றுவார் என்ற நம்பிக்கை எனக்கு அதிகமாக உள்ளது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திருச்சிக்கு அரசுமுறை பயணம் மேற்கொண்டுள்ளார். திருச்சியில் உள்ள அண்ணா விளையாட்டு அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடனுதவிகள், மணிமேகலை விருதுகள், மாநில அளவிலான வங்கியாளர் விருதுகளை வழங்கினார். மேலும் புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்டப்பணிகளை தொடங்கி வைத்து, அரசு நலத்திட்ட உதவிகளை மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய அவர், திருச்சியில் எந்த விழா நடந்தாலும் அது பிரமாண்டமாக தான் நடக்கும். தமிழ்நாட்டின் தொழில்துறை என்பது முன்னேற்றத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டை நோக்கி புதிய தொழிற்சாலைகள் மற்ற மாநிலங்களில் இருந்து மட்டுமல்ல, உலக நிறுவனங்களும் வர தொடங்கியிருக்கிறது. புதிய துறைகளில் முதலீட்டுகளை நாம் ஈர்த்து வருகிறோம். திமுக ஆட்சி அமைந்ததும் மக்களை தேடி மருத்துவம் என்ற திட்டம் தொடங்கப்பட்டது. கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தொடங்கப்பட்டு தற்போது ஒருகோடி பேரை அந்த திட்டம் எட்டப்பட்டுள்ளது.
இந்த மேடைக்கு, அமைச்சரவைக்கு புதியவராக வந்துள்ள உதயநிதி ஸ்டாலின் தொண்டர்கள், பொதுமக்களாகிய உங்களுக்கு பழைய முகம் தான். அவர் அமைச்சரான போது விமர்சனம் வந்தது. அப்போது என்னுடைய செயல்பாட்டை பார்த்துவிட்டு விமர்சியுங்கள் என்றார். அதேபோல் எம்.எல்.ஏ. ஆகும் போதும் விமர்சனம் வந்தது. ஆனால் தன்னுடைய செயல்பாடுகள் மூலம் அனைவரது பாராட்டைப் பெற்று நிரூபித்து காட்டினார்
அவருக்கு ஏராளமான பொறுப்புகள், அதாவது முக்கிய துறைகள் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. அமைச்சர் பொறுப்பிலேயே சிறப்பாக பணியாற்றி இந்த துறைகளை மேம்படுத்துவார் என்ற நம்பிக்கை எனக்கு அதிகமாக உள்ளது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார். மேலும் ஒலிம்பிக் போன்ற பன்னாட்டு போட்டிகளில் பதக்கம் வெல்லும் வாய்ப்பை ஏற்படுத்த தமிழக வீரர்களுக்கு உலகத்தரம் வாய்ந்த பயிற்சிகளை வழங்கும் வகையில், தமிழகத்தில் 4 மண்டலங்களில் தலா ஒன்று வீதம் 4 ஒலிம்பிக் அகாடமிகள் உருவாக்கப்படும் கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் அறிவித்திருந்தேன். அதனை நடைமுறைப்படுத்தும் வண்ணம் திருச்சியில் அனைத்து வசதிகளுடன் கூடிய ஒலிம்பிக் அகாடமி உருவாக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.