திருச்சி சிறப்பு முகாமில் உள்ள நான்கு இலங்கை தமிழர்களை உடனடியாக விடுவிக்க கோரி நாம் தமிழர் கட்சியின் சார்பில் திருச்சியில் மத்திய பேருந்து நிலையம் அருகே மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிடப்பட்டிருந்த நிலையில்,  காவல்துறையினர் அனுமதி மறுத்ததால் தற்போது கண்டன பொதுக்கூட்டமாக நடைபெற்றது. இதில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசுகையில், “4 இலங்கை தமிழர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்பது தான் நமது கோரிக்கை, உறுதியான நிலைபாடு ஆகும். மேலும் திருச்சி இலங்கை தமிழர் சிறப்பு முகாம் என்பது புழல் சிறை போலவோ, இல்லை மற்ற சிறைகள் போலோ அல்ல, இயற்கையான  மரங்கள் இல்லை, நடைபயிற்ச்சி செய்ய வசதி இல்லை. இதுபோன்று  பல சிரமங்களுக்கு அங்கே உள்ளவர்கள் ஆளாகிறார்கள். சிறைக்குள் 32 ஆண்டுகள் இருந்த பின்னரும் தற்போது சிறப்பு முகாமில் அவர்கள் அடைக்கப்பட்டு இருக்கிறார்கள். கேரளாவில் 7 ஆண்டுகளுக்கு மேலாக தண்டனை பெற்றவர்கள் விடுவிக்கப்படுகிறார்கள். 10 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருப்பவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி ஒரு சட்ட வடிவை  கொண்டு வந்தார். இந்த சட்டம் கொண்டு வர காரணம் என்னவென்றால் அம்மையார் லீலாவதி கொலை வழக்கில் அவர்களது கட்சிக்காரர்கள் உடன்பட்டு இருந்ததால், அவர்களை காப்பாற்றுவதற்காக கொண்டு வந்தார். ஆனால் அந்த சட்டம் ராஜீவ் கொலை குற்றவாளிகளுக்கு பொருந்தாது என்று கொண்டு வந்தார். 




மேலும் ஒருவேளை தூக்கு தண்டனை எங்கள் 4 பேருக்கும் கொடுத்தால் எங்களது உடலை சீமானிடம் ஒப்படைங்கள் என்று எனது தம்பிகள் கடிதம் எழுதினார்கள். அரசாங்கத்தை நாம் எதிர்த்துப் போராடுகிறோம், என்று அரசாங்கம் நினைக்க வேண்டாம். நாம் அன்பாக தான் கோரிக்கையை முன் வைக்கின்றோம். 4 தமிழர்கள் விடுதலையில் காங்கிரஸ் கட்சிக்கு நீங்கள் பயப்படுகிறீர்கள், ஆகையால்  நீங்கள் துணிந்து முடிவெடுங்கள் நாங்கள் உங்களுக்கு உறுதுணையாக  இருக்கிறோம்.  காங்கிரசை கழட்டி விட்டால் ஒரு தொகுதியில் கூட கட்டுத்தொகை வாங்காது.  அப்புறம் எதற்காக  இப்படி பயப்பட வேண்டும். இந்த ஆட்சியாளர்கள் நம் இன மக்களுக்கு எண்ணற்ற துரோகங்களை செய்து விட்டார்கள். குறிப்பாக  திபத்தியர்களுக்கு இந்த நாட்டில் குடியுரிமை கொடுத்திருக்கிறீர்கள், ஆனால் ஈழத்தமிழர்களுக்கு கொடுப்பதில்லை ஏன் என்று கேள்வி எழுப்பினார். 




குறிப்பாக முருகன்,சாந்தன், ராபார்ட் பயாஸ், ஜெயக்குமார் உள்ளிட்ட 4 பேரையும் தயவு செய்து விடுதலை செய்யுங்கள். அப்படி இல்லை என்றால் உங்களிடம் கெஞ்சி கேட்கிறேன் மீண்டும் அவர்களை பொது சிறையில் அடைத்து விடுங்கள். எல்லா அரசியல் கட்சியினருக்கும் தெரியும் இலங்கை தமிழர் சிறப்பு முகாமில் இருப்பவர்கள் மிகக் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள். ஆனால் எந்த கட்சியினரும் பேசுவதற்கு முன் வரவில்லை. தற்போது வட இந்தியர்களுக்காக ஐயோ பாவம் என்று குரல் கொடுப்பவர்கள், ஏன் மீனவர்கள் வயிற்று பிழப்பிற்காக சென்று கைது செய்யும் போது குரல் கொடுக்கவில்லை. காவல்துறை நமக்கு நெருக்கடி கொடுப்பது எல்லாம் ரசிக்க பழகிக் கொள்ள வேண்டும். மேலும் மக்கள் இன்னும் திமுகவை நம்புகிறதா?? இதனை கேட்கும் போது - எப்புட்றா என்பது தான் நியாபகம் வருகிறது. காலம் மேலதிக கீழாகும் கீழது மேலாகும் என்று நாங்கள் வீதியில் இருக்கிறோம், ஒரு நாள் மேலே வருவோம் நீங்கள் ஒரு நாள் வீதிக்கு வருவீர்கள்” என தெரிவித்தார்.  மேலும், எங்களது கோரிக்கை ஒன்றுதான் இலங்கை தமிழர் சிறப்பு முகாமை மூடுங்கள் என்றும் கூறினார்.