அரியலூர் மாவட்டம் , ஜெயங்கொண்டம் அருகே உள்ள ஆமணக்கந்தோண்டியை சேர்ந்த பொதுமக்கள் சிலர் அருகே உள்ள பெரியவளையம் கிராமத்திற்குட்பட்ட வனச்சரகத்திற்கு சொந்தமான ஆயிரம் ஏக்கர் முந்திரி காட்டை குத்தகைக்கு எடுப்பது வழக்கம். இந்தநிலையில் கடந்த ஆண்டு அதே கிராமத்தை சேர்ந்த காசிநாதன், அவரது தம்பி சகாதேவன் உள்ளிட்ட 3 பேர் ஆயிரம் ஏக்கர் முந்திரி காட்டை குத்தகைக்கு எடுத்துள்ளனர். இதற்கு காசிநாதன் தான் காரணம் என நினைத்த கிராம முக்கியஸ்தர்களுக்கும், காசிநாதனுக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்து வந்துள்ளது. இந்தநிலையில் ஆமணக்கந்தோன்டி கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி நேற்று சாமி ஊர்வலம் நடைபெற்றது. அப்போது காசிநாதன் வீட்டின் முன்பு சாமி ஊர்வலம் சென்றபோது அவரது குடும்பத்தாருக்கு தீபாராதனை காண்பிக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் இருதரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது அதே கிராமத்தைச் சேர்ந்த கமலக்கண்ணன் (42), கண்ணதாசன் (38), தேவேந்திரன் (45), சுப்பிரமணியன், ராஜேஷ்குமார் (37), ஆகியோர் சேர்ந்து காசிநாதனை தாக்கியுள்ளனர். இதனை தடுக்க வந்த காசிநாதனின் மகன் ஜெயசீலன், மனைவி விஜயா, சரசு, சகாதேவன் (68) ஆகியோரையும் தாக்கினர். அப்போது காசிநாதனுக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இதில், படுகாயம் அடைந்த அவரை அப்பகுதி மக்கள் மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.




மேலும், இந்த சம்பவம் குறித்து காசிநாதன் கொடுத்த புகாரின் பேரில் கமலக்கண்ணன், கண்ணதாசன், தேவேந்திரன் உள்பட 4 பேர் மீது ஜெயங்கொண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதேபோல் கலைவாணன் என்பவரை காசிநாதன், ஜெயசீலன் உள்ளிட்டோர் தாக்கியதாக கூறி ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். பின்னர் இவர் கொடுத்த புகாரின் பேரில் காசிநாதன், ஜெயசீலன், சகாதேவன், சரசு, விஜயா ஆகியோர் மீது ஜெயங்கொண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.இதனைதொடர்ந்து இருதரப்பினர் கொடுத்த புகாரின் பேரில் சகாதேவன், கமலக்கண்ணன், கண்ணதாசன், தேவேந்திரன், ராஜேஷ்குமார் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, காசிநாதன் தரப்பை சேர்ந்த அனைவரையும் கைது செய்ய வலியுறுத்தி ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்திற்கு பொதுமக்கள் சிலர் வந்தனர். அவர்களை போலீசார் சமாதானம் செய்து திருப்பி அனுப்பி வைத்தனர். மேலும் அப்பகுதியில் அசம்பாவித சம்பவம் நடைபெறாமல் இருக்க போலீசார் குவிக்கப்பட்டனர். இதுகுறித்து ஜெயங்கொண்டம் போலீஸ் துணை சூப்பிரண்டு ரவிச்சந்திரன் கூறுகையில் அநாவசியமாக ரகளையில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் போலீசாரின் நடவடிக்கை பாயும். மேலும் குடிபோதையில் தகராறு செய்பவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்றார்.