திருச்சி மாநகராட்சியில் உள்ள 65 வார்டு பகுதிகளில் ஸ்மார்ட் திட்டத்தின் கீழ் பாதாள சாக்கடை குழாய் பதிக்கும் பணிகள் மற்றும் 50 ஆண்டுக்கு மேலாக உள்ள குடிநீர் குழாய்கள் மாற்றி அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இதில் பாதாள சாக்கடை பணிகள் தற்போது 80 சதவீதம் முடிவடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் பணிகள் நடைபெற்று வரும் பகுதிகளை தவிர, மீதமுள்ள பகுதிகளில் பணிகளை விரைந்து முடிக்க மாநகராட்சி மேயர் அன்பழகன் மற்றும் ஆணையர் வைத்தியநாதன் ஆகியோர் ஒப்பந்ததாரர்களுக்கு உத்தரவிட்டு உள்ளனர். மேலும் பணிகள் நடைபெறும் பகுதிகளில் டி2டி முறையில் இரவோடு இரவாக பணிகளை முடிக்கும் திட்டத்தினையும் செயல்படுத்தி முடித்து வருகின்றனர். இதற்கிடையில் மாநகராட்சி பகுதிகளில் பிளாஸ் டிக் பயன்பாட்டை அறவே ஒழிக்கும் வகையில் பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். மேலும் கடைகளில் பிளாஸ்டிக் பைகளில் பொருட்கள் வழங்கக் கூடாது எனவும், மீறி வழங்கினால் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கையும் விடப்பட்டு தீவிர ஆய்வு நடத்தி அபராதமும் விதிக்கப்பட்டு வருகிறது.
இதனை தொடர்ந்து திறந்தவெளியில் மலம் கழிப்பதை தடுக்கும் வகையில் அனைத்து வார்டுகளில் நவீன கழிவறைகள் கட்டப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. இதில் கழிவறைகளை சுகாதாரமாக இல்லாமல் இருக்குமானால், அது குறித்து புகார் அளிக்க ஒவ்வொரு கழிவறைகளிலும் கியூ ஆர் கோடு கொண்ட விழிப்புணர்வு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளது. அதன் மூலம் மாநகராட்சிக்கு புகார் அளிக்கவும் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. மேலும் இதில் திருச்சி மாவட்ட மக்களுக்கு அனைத்து பகுதிகளிலும் சாலை வசதி, தூய குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் ஏற்படுத்தி தரும் வகையில் மாநகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே என் நேரு உத்தரவின் பேரில் மாவட்டம் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் பணிகளை துரிதப்படுத்தி வருகின்றனர். குறிப்பாக அமைச்சர் நேரு, ஏற்பாட்டின் கீழ் சத்திரம் பேருந்து முதல் பஞ்சப்பூர் வரை திருச்சியில் உயர்மட்ட பாலம் அமைப்பதற்கான மண் பரிசோதனை பணிகளும் துரிதமாக நடந்து வருகிறது. அதே போல் மாநகராட்சி சார்பில் பொதுமக்கள் மற்றும் குழந்தைகளுக்கு பொழுது போக்கும் விதமாக இருக்கும் வகையில் பூங்காக்கள், நடைபாதைகள் புறனமைக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையில் மாநகரை அழகுப்படுத்தும் விதமாக மாநகரில் உள்ள மேம்பாலங்களில் அடிப்பகுதிகளில் உள்ள தூண்களில் இயற்கை உபாதைகள் கழிப்பதை தடுக்கும் வகையில் வர்ணம் தீட்டி ,லைட்டிங் அமைக்கும் பணி நடந்து வருகிறது .மேலும் தூண்கள் உள்ள பகுதிகளில் தடுப்பு கிரில் அமைத்து சுகாதாரம் பேணிக் காக்கவும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதில் முதல் கட்டமாக டிவிஎஸ் டோல்கேட் மேம்பாலத்தில் உள்ள ராட்சத தூண்களில் வர்ணம் தீட்டப்பட்டு, லைட்டிங் அமைக்கும் பணி துரிதமாக நடந்து வருகிறது. மேலும் இந்த தூண்களை சுற்றிலும் தரைத்தளம் அமைத்து கிரில் தடுப்பு அமைக்கும் பணியும் நடந்து வருகிறது. விரைவில் பணிகள் முடிந்து கண்ணை கவரும் வகையில் லைட்டிங் மூலம் டிவிஎஸ் டோல்கேட் பாலம் மிளிர உள்ளது. இதைத் தொடர்ந்து பாலக்கரை மேம்பாலம், பால் பண்ணை மேம்பாலம், அரிஸ்டோ மேம்பாலம், மன்னார்புரம் மேம்பாலம் உள்ளிட்ட மெயின் பாலங்களில் வர்ணங்களை தீட்டுவது மற்றும் லைட்டிங் அமைப்பது திருச்சி மாநகரை கண் கவரும் வகையில் ஒளிர வைக்கும் பணியில் மாநகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.