திருச்சி மாவட்டம்,  கேர் பொறியியல் கல்லூரியில் நாளை 27.07.2023 முதல் 29.07.2023 வரை மூன்று நாட்கள் வேளாண்மை உழவர் நலத்துறையின் சார்பில் மாபெரும் வேளாண்மை சங்கமம் - 2023 வேளாண்மை கண்காட்சி மற்றும் கருத்தரங்கை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  தொடங்கி வைக்க உள்ளார். ஆகையால் விழா மேடை மற்றும் கண்காட்சி அரங்குகள் அமைப்பதற்கான முன்னேற்பாடு பணிகளை நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு,  வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் இணைந்து செய்தனர். இதனைத் தொடர்ந்து, திருச்சி  கேர் பொறியியல் கல்லூரி வளாகத்தில் மாபெரும் வேளாண்மை சங்கமம் 2023 வேளாண்மை கண்காட்சி மற்றும் கருத்தரங்கு சிறப்பான முறையில் நடத்த வேண்டும் என வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

 



 

மேலும், கேர் பொறியியல் கல்லூரி வளாகத்தில் மாநில அளவில் நடைபெறவுள்ள மாபெரும் வேளாண் சங்கமம் 2023 வேளாண்மை கண்காட்சி மற்றும் கருத்தரங்கில் 250 உள்ளரங்குகளும் , 50 வெளி அரங்குகளும் அமைக்கப்படவுள்ளது. இக்கண்காட்சியில் 17 மாநில அரசு துறைகளும் ஒன்றிய அரசின் 8 ஆராய்ச்சி நிறுவனங்களும். 3 வேளாண்மை சார்ந்த பல்கலைக்கழகங்களும். 80-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்களும் கலந்து கொண்டுள்ளனர். இக்கண்காட்சியில் பாரம்பரிய நெல் வகைகள், பாரம்பரிய வேளாண் கருவிகள். பல்வகை தென்னை இரகங்கள், செயல்விளக்கத் திடல்கள், பசுமைகுடில்கள், மண்ணில்லா விவசாயம். நவீன இயந்திரங்கள். ட்ரோன்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் விவசாயிகளுக்குத் தேவைப்படும் புதிய தொழில்நுட்பம் குறித்து பல்வேறு தலைப்புகளில் கருத்தரங்குகள், விவசாயிகள் விஞ்ஞானிகள் கலந்துரையாடல், செயல்விளக்கங்கள் மற்றும் வேளாண் துறை திட்டங்கள் சார்ந்த விழிப்புணர்வு கலைநிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. 

 



 

இக்கண்காட்சிக்கு வருகை தரும் விவசாயிகளுக்குத் தேவைப்படும் அனைத்து பயிர்களின் விதைகள், தென்னங்கன்றுகள், பழமர கன்றுகள் மற்றும் காய்கறி விதைகள், நுண்ணூட்ட கலவைகள், திரவ உயிர் உரங்கள். உயிரி கட்டுப்பாட்டுக் காரணிகள், மற்றும் மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்படவுள்ளன. மேலும் இக்கண்காட்சியில் உழவன் செயலி பதிவிறக்கம். திட்டப் பதிவுகள், மண்வள அட்டை வழங்குதல்(மண் மாதிரி மற்றும் பாசன நீர் மாதிரி எடுத்து வரும் விவசாயிகளுக்கு) ஆகிய சேவைகள் வழங்கப்படவுள்ளது. மேற்காணும் இடுபொருட்கள் மற்றும் சேவைகள் தேவைப்படும் விவசாயிகள் தங்களது ஆதார் அட்டையின் நகலினை உடன் கொண்டு வரவேண்டும் என அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர். குறிப்பாக இந்த கண்காட்சியில் பாரம்பரிய நெல் உற்பத்தியில் சிறந்து விளங்கிய விவசாயிகளுக்கு விருதுகள், மற்றும்  50,000 விவசாயிகளுக்கு இலவச விவசாய மின் இணைப்பு திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்தொடங்கி வைக்கிறார். 

 

ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.








ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண