தமிழ்நாடு நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என். நேரு திருச்சி மாவட்டத்தில் பல்வேறு வளர்ச்சி பணிகளை ஆய்வு செய்த பிறகு பஞ்சப்பூர் பேருந்து நிலையம் அமையவுள்ள இடத்தை நேரில் சென்று ஆய்வு செய்தார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் நேரு கூறுகையில், திருச்சி பஞ்சப்பூரில் மாநகராட்சியின் ஒருங்கிணைந்த பேருந்து முனையம் 80 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்படவுள்ளது. அங்கு 200 பேருந்துகள் வந்து செல்லும் வகையிலும், 104 பேருந்துகள் சிறிது நேரம் மட்டுமே நின்று செல்லும் வகையிலும், 100 பேருந்துகள் நிரந்தரமாக நிற்கும் வகையிலும் வசதி செய்யப்படவுள்ளது. இதற்கான கட்டுமான செலவுகளுக்காக முதற்கட்டமாக ₹ 390 கோடி ரூபாய் நிதியினை தமிழக முதல்வர் ஒதுக்கீடு செய்து, சட்டமன்றத்தில் அறிவித்து, அது கையெழுத்தாகி அரசாணையாகவும் வெளியாகியுள்ளது. ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்திற்கு அருகாமையில் 28 ஏக்கர் பரப்பளவில் காய்கறிகளுக்கான மொத்த மற்றும் சில்லறை விற்பனை சந்தை அமைக்கப்பட உள்ளது. மேலும் அதன் அருகிலேயே வணிக வளாகம், வர்த்தக மையம், அங்கு போக்குவரத்து நெரிசல் இல்லாமல் வந்து செல்ல உயர்மட்ட பாலம் உள்ளிட்டவையும் அமைக்கப்பட உள்ளது. உயர்மட்ட பாலம் அமைப்பதற்கான நிதியை தேசிய நெடுஞ்சாலை துறையினர் வழங்கியுள்ளனர். திருச்சி பஞ்சப்பூரில் பேருந்து முனையம் அமையவுள்ள களிமண் சார்ந்த பள்ளத்தை, கிராவல் மண் கொண்டு 3 அடி உயரத்தி, நிலத்தை சமன்படுத்தும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.
மேலும் இன்னும் 3 மாதத்தில் பேருந்து முனையம் அமைப்பதற்கான ஒப்பந்த பணிகள் நிறைவடையும். அடுத்த 18 மாதத்தில் பேருந்து முனையம் கட்டிமுடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும். தமிழ்நாட்டில் உள்ள எல்லா மாவட்டங்களிலும் மாநகராட்சி, நகராட்சி குப்பை கிடங்குகளில் தேங்கி கிடைக்கும் குப்பைகள் அனைத்தும் இன்னும் 18 மாத காலத்தில் பயோ மைனிங் திட்டத்தின் கீழ் அகற்றப்படும். சென்னை பெருங்களத்தூர் குப்பை கிடங்கில் உள்ள குப்பைகளை 30 மாதங்களில் அகற்றிவிட்டு 400 ஏக்கர் பரப்பளவில் பூங்கா அமைக்கவுள்ளோம். பிளாஸ்டிக் என்பது மக்கள் பல ஆண்டுகளாக பயன்படுத்தி வருகிறார்கள். ஆகையால் உடனே ஒழிப்பது என்பது சற்று சிரமமாக உள்ளது. இந்நிலையில் பிளாஸ்டிக் ஒழிப்பை தீவிரமாக பேசி வருகிறோம். அதனை உடனடியாக மக்கள் கைவிடுவது சிரமமான காரியம். அதற்கு கால அவகாசம் தேவைப்படுகிறது. சென்னையில் மழை நீர் வடிக்கால்வாய் மற்றும் கழிவுநீர் வடிகால் பாதைகளை மேம்படுத்த தமிழ்நாடு முதலமைச்சர் ₹938 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளார்.
தமிழகம் முழுவதும் வாரந்தோறும் நடைபெறும் மெகா தூய்மை பணிகளில் இதுவரை 7500 டன் குப்பைகள் சேகரிக்கப்பட்டுள்ளது. பணியாளர்களை வைத்து குப்பைகளை சேகரிக்கும் போது பொருள் செலவுகள் அதிகமாவதை தவிர்க்க, தன்னார்வலர்களை கொண்டு குப்பைகளை சேகரிக்கும் புதிய திட்டத்தை சென்னையில் தொடங்கவுள்ளோம். திருச்சியில் நடைபெற்று வரும் பாதாள சாக்கடை பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர்களுக்கு அழுத்தம் கொடுத்து உள்ளோம். திருச்சி மாநகரில் 15 நாட்களில் சாலை அமைக்கும் பணிகள் 75 சதவீதம் நிறைவடையும் என்றார். மேலும், சென்னையில் முழுவதுமாக மழை நீர் வடிக்கால், கழிவு நீர் கால்வாய் சீரமைக்கப்பட்டுள்ளது, மழை காலங்களில் சென்னை தண்ணீரில் மிதக்காது என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அமைச்சர் நேரு, பாஜக பொன்.ராதாகிருஷ்ணன் கேள்விக்குகெல்லாம் பதில் சொன்னால் மேலே பார்த்து துப்பிக்கொள்வது போன்று என தெரிவித்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்