தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை இணைப்பதில்  திருச்சி முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை கருத்தில் கொண்டு, திருச்சி விமான நிலையத்தின் ஓடுபாதையை 12,500 அடியாக அதிகரிக்கும் திட்டத்திற்கு இந்திய விமானப் போக்குவரத்து ஆணையரகம் கடந்த 2010-2011 நிதியாண்டில் அடித்தளமிட்டது. இத்திட்டம் நிறைவேறினால், மிகப் பெரிய அளவிலான விமானங்கள் திருச்சிக்கு வந்துசெல்ல முடியும். இதனால், பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதோடு, சரக்குகளைக் கையாளும் திறனும் அதிகரிக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் ஓடுபாதை விரிவாக்க திட்டத்திற்காக, 683.3 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்த திட்டமிடப்பட்டது. இதில், 345.6 ஏக்கர் நிலங்கள் மாநில அரசு மூலமாக கையகப்படுத்துவது என்றும், 337.7 ஏக்கர் நிலங்களை மத்திய பாதுகாப்புத் துறையிடம் இருந்து பெறுவது என்றும் முடிவு செய்யப்பட்டது. ஆனால், இதுவரையிலும் 35.86 ஏக்கர் நிலங்கள் மட்டுமே கையகப்படுத்தப்பட்டுள்ளன. அதாவது திட்டத்திற்கு தேவையான நிலத்தில், 10 ஆண்டுகள் ஆகியும் வெறும் 10% இடம் மட்டுமே கையகப்படுத்தப்பட்டிருக்கிறது. அதேசமயம், இப்போது இருக்கின்ற உள்கட்டமைப்புகளை கொண்டு, குறிப்பிடத்தக்க வளர்ச்சியை திருச்சி விமான நிலையம் எட்டியிருக்கிறது என்பதை விமானப் போக்குவரத்து ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். 




திருச்சி விமான நிலையத்தில் இருந்து உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சரக்கு போக்குவரத்து, பயணிகளின் எண்ணிக்கையை 2025-2026-ம் ஆண்டுக்குள் 2.52 மில்லியன் ஆக அதிகரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் போதுமான ஓடுபாதை இல்லாத காரணத்தினால் அதனை அதிகரிக்க 8,126 அடி நீளத்திலிருந்து 12 ஆயிரத்து 500 அடி வரை நீட்டிக்க இந்திய விமான போக்குவரத்து ஆணையரகம் 2010-2011 நிதி ஆண்டில் இதற்கான ஆய்வு அறிக்கை சமர்ப்பித்தது. இதற்காக ராணுவ இடத்தை பெற்றுத்தர மத்திய அரசிடம் வலியுறுத்தப்பட்டது. இதற்காக பாதுகாப்புத் துறையில் 167 ஏக்கர் நிலத்தினை உள்ளடக்கிய 342.62 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. மாநில அரசு 2018-ம் ஆண்டு நிர்வாக அனுமதி வழங்கி அதற்கான பணிகள் நடந்து வருகிறது.  இந்தநிலையில் ராணுவத்துக்கு சொந்தமான நிலத்தை பெற பல்வேறு காரணங்களால் தாமதம் ஏற்பட்டது. இதனையடுத்து திருச்சி விமான நிலைய விரிவாக்கத்திற்கு ராணுவத்துக்கு சொந்தமான 167 ஏக்கர் நிலத்தை வழங்கி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. 12 ஆண்டு காலமாக நடைபெற்ற இந்த பிரச்சினைக்கு விடிவுகாலம் பிறந்தது. இதன் மூலம் திருச்சி விமான நிலைய விரிவாக்க பணி விரைவில் தொடங்குவதற்கான வாய்ப்பு உள்ளது என அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர். 




 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண