திருச்சி மத்திய சிறையில் உள்ள அகதிகள் சிறப்பு முகாமில் நேற்று என்.ஐ.ஏ அதிகாரிகள் 100க்கும் மேற்பட்டோர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். திருச்சி மத்திய சிறையில் 1,500-க்கும் மேற்பட்ட தண்டனை மற்றும் விசாரணை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் போலி பாஸ்போர்ட், குற்ற வழக்குகளில் தொடர்புடைய வெளிநாட்டினர், இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்தவர்கள் ஜெயில் வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் வழக்கு முடிந்த பின்னரும் தங்களை சட்ட விரோதமாக அடைத்து வைத்துள்ளதாக அவர்கள் உண்ணாவிரதம், மரங்களில் ஏறி தற்கொலை மிரட்டல் உள்ளிட்ட தொடர் போராட்டங்கள் நடத்தி வந்தனர். மேலும் கையை பிளேடால் கிழித்து தற்கொலை முயற்சியிலும் ஈடுபட்டனர். இந்த பிரச்சினை விஸ்வரூபம் எடுத்த நிலையில் சமீபத்தில் 14 இலங்கை தமிழர்களை முகாம் சிறையில் இருந்து மாவட்ட நிர்வாகம் விடுவித்தது. ஆனால் அவர்கள் இந்தியாவிலேயே தங்கி இருந்து வழக்கு விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்ற நிபந்தனையும் விதிக்கப்பட்டது. இதற்கிடையே தமிழகத்திலிருந்து போலி பாஸ்போர்ட் மூலம் இலங்கை தமிழர்கள் வெளிநாடுகளுக்கு தப்பி சென்று விட்டதாக புகார் எழுந்துள்ளது. கடந்த இரு தினங்களுக்கு முன்பு கோவை செம்பட்டி காலனியில் நடைபெற்ற கூட்டத்தில் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தமிழ்நாட்டில் போலி பாஸ்போர்ட் ஊழல் நடந்திருக்கிறது என தெரிவித்தார். இதனை தொடர்ந்து இன்று  ஆளுநரை சந்தித்து புகார் அளித்துள்ளார்.  




இந்தநிலையில் தேசிய புலனாய்வு முகமை அமைப்பை (என்.ஐ.ஏ.) சேர்ந்த டி.ஐ.ஜி. காளிராஜ் மகேஷ்குமார், போலீஸ் சூப்பிரண்டு தர்மராஜ் தலைமையில் 30-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் நேற்று அதிகாலை 4.50 மணி அளவில் திருச்சி மத்திய சிறைக்கு வந்தனர். அவர்கள் அதிகாலை 5 மணிக்கு சிறப்பு முகாமிற்குள் அதிரடியாக நுழைந்து சோதனையை தொடங்கினர். அவர்களின் பாதுகாப்புக்காக வேன், கார் உள்ளிட்ட வாகனங்களில் 100 துணை ராணுவப்படையினரும் சிறப்பு முகாமில் குவிக்கப்பட்டனர்.அப்போது திருச்சி பொன்மலைப்பட்டி அந்தோணியார்கோவில் தெரு பகுதியில் தங்கி இருந்த குணசேகரனின் டிரைவர் நெல்லையை சேர்ந்த விக்னேஷ் என்பவர் வீட்டிலும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். விக்னேஷ் முகாமில் அடைக்கப்பட்டுள்ள குணசேகரன் உள்பட அவரது நண்பர்கள் 7 பேருக்கும் உணவு மற்றும் பொருட்களை வெளியே இருந்து வாங்கி கொடுப்பது, பாஸ்போர்ட், விசா உள்ளிட்டவற்றுக்கும் உதவி செய்வது போன்ற வேலைகளை செய்து வந்துள்ளார். இதையடுத்து விக்னேஷ் வீட்டில் 3 மணிநேரம் சோதனை நடத்தப்பட்டது. மேலும் இந்த சோதனையின் போது, அங்கு பறிமுதல் செய்யப்பட்ட நகைகள் உள்ளிட்டவைகளை மதிப்பீடு செய்ய நகை மதிப்பீட்டாளரும் சிறப்பு முகாமிற்குள் அழைத்து செல்லப்பட்டார். மேலும், வெளிநாட்டு அகதிகள் பயன்படுத்திய செல்போன்கள், சிம்கார்டுகள், பென்டிரைவ், மடிக்கணினி மற்றும் நகைகள் உள்ளிட்டவைகளையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 




இதனை தொடர்ந்து நேற்று நடைபெற்ற அதிரடி சோதனையில் சில முக்கிய ஆவணங்கள் கிடைத்ததாக அதிகாரிகள் தரப்பில் தகவல் தெரிவிக்கபட்டது. இந்நிலையில் இன்று காலை 10 மணிமுதல் மத்திய அமலாக்கதுறையை சேர்ந்த 5 அதிகாரிகள் திருச்சி மத்திய சிறையில் உள்ள அகதிகள் சிறப்பு முகாமில் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் நேற்று நடைபெற்ற என்.ஐ.ஏ சோதனையில் கைப்பற்றபட்ட ஆவணங்களை வைத்து தற்போது தீவிரமான விசாரனையை அதிகாரிகள் மேற்க்கொண்டு வருகிறார்கள். 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண