வேங்கைவயலில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் நடத்திய நேரடி விசாரணையால் பரபரப்பு

வேங்கைவயலில் குடிநீர் தொட்டியை அசுத்தப்படுத்திய சம்பவம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் நேரடி விசாரணை மேற்கொண்டனர். குற்றவாளிகள் விரைவில் கண்டுபிடிக்கப்படுவார்கள் என தெரிவித்தனர்.

Continues below advertisement

புதுக்கோட்டை அருகே வேங்கைவயலில் பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் அசுத்தம் கலக்கப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிகளை கைது செய்ய சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவிர புலன் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உண்மை குற்றவாளிகளை கண்டுபிடிக்கும் வகையில், அறிவியல் ரீதியாக தடயங்கள் சேகரிப்போடு, அதற்கான ஆதாரங்களையும் திரட்டி வருகின்றனர். இதற்காக வேங்கைவயல், இறையூர் பகுதியை சேர்ந்த சிலரிடம் ரத்த மாதிரி பரிசோதனை நடத்த முடிவு செய்யப்பட்டு அதற்கான பணி மேற்கொள்ளப்படுகிறது. முதல் கட்டமாக 11 பேருக்கு அனுமதி கிடைத்த நிலையில், 3 பேர் மட்டும் ரத்த மாதிரி பரிசோதனைக்கு வந்தனர். அந்த பரிசோதனை முடிவு சென்னை தடயவியல் அறிவியல் ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. வேங்கைவயல் பகுதியை சேர்ந்த 8 பேர் ரத்த மாதிரி பரிசோதனைக்கு வராதது சி.பி.சி.ஐ.டி. போலீசாரின் விசாரணைக்கு பின்னடைவு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அடுத்த கட்டமாக 10 பேருக்கு ரத்த மாதிரி பரிசோதனை நடத்த திட்டமிட்டு நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதற்கிடையில் சம்பவத்தன்று குடிநீர் தொட்டியில் அசுத்தம் கலக்கப்பட்டதாக வாட்ஸ்-அப்பில் தகவல் பரப்பிய 2 பேரின் குரல் மாதிரி பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் சம்பவத்தன்று குடிநீர் தொட்டியில் இருந்து சேகரிக்கப்பட்ட அசுத்தம், நீரின் மாதிரிகள் பகுப்பாய்வு செய்யப்பட்டு அறிக்கை பெறப்பட்டுள்ளது.

Continues below advertisement


மேலும் இதனுடன் அடுத்தடுத்து மேற்கொள்ளப்படும் பரிசோதனை முடிவுகளை ஒப்பிட்டு சி.பி.சி.ஐ.டி. போலீசார் நடவடிக்கை எடுக்க உள்ளனர். இதற்கிடையில் வேங்கைவயல் விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த சென்னை ஐகோர்ட்டால் நியமிக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதிபதி சத்யநாராயணன் தலைமையிலான ஒரு நபர் ஆணையம் தனது விசாரணையை ஓரிரு நாளில் தொடங்க உள்ளது. இந்நிலையில் வழக்கின் விசாரணை அதிகாரியான சி.பி.சி.ஐ.டி. போலீஸ் துணை சூப்பிரண்டு பால்பாண்டி தலைமையில், போலீசார் வேங்கைவயலில் நேற்று நேரடி விசாரணை மேற்கொண்டனர். இதற்கு முன்பு விசாரணை தொடக்கத்தின் போது சி.பி.சி.ஐ.டி. போலீசார் நேரில் வந்து விசாரித்தனர். அதன்பின் சிலரை திருச்சியில் உள்ள சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்திற்கு வரவழைத்து விசாரித்தனர். இந்நிலையில் தற்போது மீண்டும் நேரடி விசாரணையில் போலீசார் இறங்கினர். இதுகுறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் கேட்டபோது, இந்த விசாரணையானது சாட்சியங்கள் விசாரணை என்றனர். மேலும் இது வழக்கின் விசாரணையின் தொடர்ச்சி எனவும், முந்தைய விசாரணையின்போது கிடைத்த தகவல்களில், சந்தேகங்களை தீர்க்கவும் நேரில் விசாரணை நடைபெற்றது. வழக்கில் குற்றவாளிகளை விரைவில் கண்டுபிடிக்க வேண்டி உள்ளதால் இந்த விசாரணை நடைபெறுகிறது என்றனர். சி.பி.சி.ஐ.டி. போலீசார் நேற்று நடத்திய நேரடி விசாரணையால் பரபரப்பு ஏற்பட்டது.


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

Continues below advertisement