திருச்சி அரசு மருத்துவமனையில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் கைவிடப்பட்ட அதிநவீன கதிரியக்க சிறப்பு சிகிச்சை மையம் திட்டம் 55 கோடி செலவில் மீண்டும் செயல்படுத்தப்பட உள்ளது. நோய்களில் மிக கொடிய நோயாக கருதப்படும் புற்றுநோய், பெண்களுக்கு மார்பகம் மற்றும் கர்ப்பப்பை, வாய், தோல், குடல் ஆகிய பகுதிகளில் இந்த நோய் தாக்கம் அதிகம் இருக்கிறது. ஆண்களுக்கு மலக்குடல், வாய் ,தொண்டை, ஆகிய பகுதிகளில் அதிகம் ஏற்படுகிறது.புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. இதை மனதில் கொண்டு திருச்சி அரசு மருத்துவக கல்லூரி மருத்துவமனையில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு கதிரியக்கத் துறை தலைவராக பணியாற்றிய டாக்டர் ரவி என்பவர் அதிநவீன ரேடியோ தெரபி சிகிச்சை கொண்டு வர வேண்டும் என்று முயற்சி மேற்கொண்டார். அப்போது இந்த திட்டத்திற்கு ரூபாய் 12 கோடியில் ஒப்புதல் பெறப்பட்டது.




திருச்சி அரசு மருத்துவமனையில் பணியாற்றி கொண்டே தனியார் மருத்துவமனைகளிலும் பணியாற்றி வந்த சில மருத்துவர்கள் செய்த அரசியல் காரணமாக இந்த கோப்புகள் அனைத்தும் முடங்கி வைக்கப்பட்டன என அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர். இதனால் இந்த திட்டம் கைவிடப்பட்டதாக கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த திட்டம் மீண்டும் தொடங்கப்பட உள்ளது.அதிநவீன கதிரியக்க சிறப்பு சிகிச்சை மையத்தில் புற்றுநோய்க்கு என்று அணு கதிர்களை மனித உடலில் எந்த பாதிப்பும் ஏற்படாமல் செலுத்தி நோயின் தன்மையை தெரிந்துகொண்டு அதற்கான சிகிச்சையையும் அணுக்கதிர் மூலமே கொடுக்க முடியும். இந்த சிகிச்சைக்கு ரூபாய் 20 கோடி மதிப்புள்ள கோபால்ட் மற்றும் லீனாக் என்ற கருவிகளை வாங்க அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இதைத்தொடர்ந்து போஸ்டிராக், சன் எபினேசன் டோப்போகிராபி ( பெட்) என்ற கருவியையும் தருவிக்க திட்டமிடப்பட்டுள்ளது.




இந்த கருவியின் விலை ரூபாய் 35 கோடி இதற்கான முன்னேற்பாடு நடவடிக்கைகளை தொடங்கப்பட்டுவிட்டன. புற்றுநோய் சிறப்பு சிகிச்சை மையம் தொடங்க மருத்துவமனை வளாகத்தில் இடத்தேர்வு நடந்து முடிந்துவிட்டது. ரூபாய் 55 கோடி மதிப்பிலான இந்த திட்டம் முழு பயன்பாட்டுக்கு வர இன்னும் ஓராண்டு ஆகும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இத்திட்டம் முழுமையாக பயன்பாட்டுக்கு வரும்போது புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் அதிநவீன தொழில்நுட்பம் பொருந்திய கருவிகளால் சிகிச்சை  அளிக்கப்படுவதால் சாதாரண ஏழை எளிய மக்கள் அதிகளவில் பயனடைய வாய்ப்புகள் உள்ளது. ஆகையால் உடனடியாக இந்த பணிகளை தொடங்குவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் தீவிரமாக மேற்கொண்டு வருகிறோம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.மேலும் திருச்சி அரசு மருத்துவமனையில் பல்வேறு சிகிச்சைகளை வெற்றிகரமாக செய்து சாதனை படைத்துள்ளனர். மேலும் புற்றுநோய்க்கு என்று சிறப்பு சிகிச்சை மையம் அமைக்கப்பட்டால் திருச்சி மத்திய மண்டல மட்டுமல்லாமல் பல்வேறு இடங்களிலிருந்து வரும் மக்களுக்கு சிகிச்சை அளிக்கும் ஒரு முக்கிய மையமாக திகழும் இதனால் மக்கள் பெருமளவில் பயன் அடைவார்கள் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.