திருச்சி மாநகரில் சாலைகளில் நடுவே கால்நடைகள் அதிகளவில் சுற்றி திரிவதால் விபத்துக்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளதாக பொதுமக்கள் தொடர்ந்து மாநகராட்சிக்கு புகார் அளித்து வந்தனர். இந்நிலையில் திருச்சி- சென்னை நெடுஞ்சாலை, திருச்சி- தஞ்சாவூர் நெடுஞ்சாலை, திருச்சி- மதுரை நெடுஞ்சாலை, திருச்சி- கரூர் நெடுஞ்சாலை மற்றும் மாநகர பகுதிகளில் சத்திரம் பேருந்து நிலையம், மத்திய பேருந்து நிலையம், வயலூர் சாலைப் பகுதி, பாலக்கரை பகுதி, தில்லை நகர் பகுதி, கருமண்டபம் பகுதி, மன்னார்புரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கால்நடைகள் அதிக அளவில் சாலைகளில் சுற்றித் திரிகிறது என அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். இதனை தொடர்ந்து கால்நடைகளை வளர்ப்பவர்களுக்கு மாநகராட்சி சார்பாக ஏற்கனவே சில அறிவுரைகள் தெரிவிக்கப்பட்டு இருந்தது, அதாவது கால்நடைகளை வளர்ப்பவர்கள் பொதுமக்களுக்கு எந்தவிதமான இடையூறும் இல்லாத வகையிலும், சாலைகளில் சுற்றித்திரியாமல் வளர்க்க வேண்டும். மேலும் கால்நடைகளால் விபத்துக்கள் ஏற்பட்டால் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன் தெரிவித்தார். இந்த நிலையில் திருச்சி மாவட்டம் கோ- அபிஷேக்புரம் பகுதியில் எந்நேரமும் கால்நடைகள் முக்கிய சாலைகள் மற்றும் தெரு பகுதிகளில் சுற்றி வருகின்றன.
மேலும், இதனை கால்நடை வளர்ப்பவர்கள் கண்டுகொள்ளாமல் உள்ளனர். இதனால் வாகன ஓட்டிகள் நாள்தோறும் பல்வேறு விபத்துகளை சந்தித்து வருகின்றனர். இந்த நிலையில் வயலூர் சாலை பகுதியில் நேற்று இரவு நேரத்தில் அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று சாலையில் நின்று கொண்டிருந்த மாடுகள் மீது மோதியது. இதில் நான்கு மாடுகள் காயம் அடைந்தது. மேலும் காயம் அடைந்த மாடுகளை மாநகராட்சி பணியாளர்கள் மீட்டு சென்றனர். இதனைத் தொடர்ந்து மாநகராட்சி மேயர் அன்பழகன் வெளியீட்ட அறிக்கையின் தகவல்..
திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள தெருக்கள் மற்றும் சாலைகளில் சுற்றித் திரியும் கால்நடைகளால் பொதுமக்களுக்கும், பொது சுகாதாரத்திற்கும் கேடு ஏற்பட்டு வருவதை தடுக்கும் பொருட்டு, கால்நடைகளை வளர்க்கும் நபர்கள் தங்களுக்கு சொந்தமான கால்நடைகளை தங்களது வளாகத்திற்குள்ளேயே கட்டிவைத்து சுகாதார முறைப்படி வளர்த்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. அவ்வாறு இல்லாமல் போக்குவரத்துக்கு இடையூறாகவும், விபத்துக்களை ஏற்படுத்தும் வகையிலும் தெருக்களிலோ, சாலைகளிலோ சுற்றித்திரியும் கால்நடைகளை (மாடுகளை) மாநகராட்சி மூலம் பிடித்து செல்வதோடு முதன் முறையாக ரூ.10,000/- அபராதத்தினை 3 நாட்களுக்குள் செலுத்தி சம்பந்தப்பட்ட கால்நடையின் உரிமையாளர் திரும்ப பெற்றுக்கொள்ள வேண்டும். அவ்வாறு உரிமையாளர் பெற்றுக் கொள்ளவில்லை எனில், மாநகராட்சி அருகில் உள்ள கால்நடை சந்தையில் விற்பனை செய்து அந்த தொகை மாநகராட்சி கருவூலத்தில் செலுத்தப்படும் என இதன் மூலம் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது. என்று திருச்சி மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மாநகராட்சியில் கடந்த சில நாட்களாக சாலைகளில் சுற்றித் திரியும் கால்நடைகளால் அவ்வப்போது விபத்துக்கள் நடைபெற்று வருவதாக பொதுமக்கள் தரப்பில் தொடர்ந்து புகார்கள் தெரிவிக்கப்பட்டு வந்தது. இதனை தொடர்ந்து கடந்த முறை நடைபெற்ற மாமன்ற கூட்டத்தில் மாமன்ற உறுப்பினர்கள் அனைவரும் அனைத்து பகுதிகளிலும் மாடுகள் சுற்றி தெரிவதால் விபத்துகளும், சுகாதார சீர்கேடும் ஏற்படுவதாக பொதுமக்கள் தொடர்ந்து புகார் தெரிவிப்பதாகவும் கோரிக்கை முன் வைத்தனர். இதனைத் தொடர்ந்து மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்து அந்த அறிக்கையை திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகனிடம் ஒப்படைத்தனர். அதன் அடிப்படையில் ஏற்கனவே மாடுகளை பிடிக்க விடப்பட்ட டெண்டரை ரத்து செய்து புதிய டெண்டர் விடுவதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவித்தார்.