கரூர் அருகே உள்ள ஆத்தூர் பழனியப்பா நகரைச் சேர்ந்தவர் மெய்யர் (51) இவர் கோவை- ஈரோடு சாலையில் உள்ள திருக்காம்புலியூர் பகுதியில் பஸ் பாடி கட்டுதல் தேவையான உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் வியாபாரத்தை முடித்து விட்டு மெய்யர் தனது கடையை பூட்டி விட்டு சென்றுள்ளார். இந்நிலையில் இரவு சுமார் 12.30 மணி அளவில் கடையில் உள்ள பகுதியிலிருந்து குபுகுபுவென புகை வந்துள்ளது. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் இந்த சம்பவம் குறித்து கரூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தனர்




 


Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X


அதைத் தொடர்ந்து, கடை உரிமையாளர் மெய்யருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. இதன் பேரில் கரூர் தீயணைப்பு படை மாவட்ட அலுவலர் விவேகானந்தன், நிலைய அலுவலர் விஜயகுமார் தலைமையில் பத்துக்கு மேற்பட்ட தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்க முயற்சித்தனர்.



அதற்குள் தீ மளமளவென பரவி கொழுந்துவிட்டு எரிய தொடங்கியது. தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க முயன்றும் தீயை முழுமையாக அணைக்க முடியவில்லை. அதை தொடர்ந்து, வேலாயுதம் பாளையம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்ததன் பேரில் கூடுதலாக தீயணைப்பு வாகனம் வரவழைக்கப்பட்டு, அருகில் உள்ள தண்ணி லாரிக்கு தகவல் அளித்ததன் பேரில் விரைந்து வந்த அவர்களும் களத்தில் இருந்து போராடி பத்துக்கு மேற்பட்ட வாகனம் மூலம் சுமார் 2 மணி நேர போராட்டத்தை பின்னரே தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். இந்த தீவிபத்தில் குறித்து சுமார் 10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதம் ஆகியிருக்கலாம் என தீயணைப்பு படை வீரர்கள் தெரிவித்தனர். மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் மின்கசிவு காரணமாக விபத்து நடந்திருக்கலாம் அல்லது வேறு ஏதேனும் காரணமா என்ற கோணத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.