தமிழக அரசு சார்பில் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் நகர்புறம் மற்றும் கிராம புறங்களில் வசிக்கும் ஏழை பெண்கள் கர்ப்பமுற்று 12 வாரத்துக்குள் கிராம மற்றும் நகர செவிலியர்களிடம் ஆதார் அட்டை, வங்கி கணக்கு எண் விவரங்களை தெரிவித்து, பெயரை பதிவு செய்து ‘பிக்மி’ எண் பெற்றவுடன் 2 ஆயிரம் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. தொடர்ந்து பதிவு செய்து நான்காவது மாதத்துக்குப் பிறகு இரண்டாவது தவணையாக இரண்டாயிரம் வழங்கப்படுகிறது. இதற்கிடையில், உடல் திறனை மேம்படுத்தும் விதமாக இரும்புச்சத்து டானிக், உலர் பேரிச்சை, புரதச்சத்து பிஸ்கட், ஆவின் நெய், அல்பெண்டாசோல் மாத்திரை, கதர் துண்டு உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய, தலா ரூ.2 ஆயிரம் மதிப்புள்ள 2 ஊட்டச்சத்து பெட்டகங்கள் வழங்கப்படுகின்றன. அரசு மருத்துவமனையில் பிரசவம் முடிந்தவுடன் மூன்றாவது தவணையாக 4 ஆயிரம், பேறு காலம் முடிந்து குழந்தைகளுக்கு தடுப்பூசி போடும் காலத்தில் 4-வது தவணையாக 4 ஆயிரம், குழந்தைக்கு 9 மாதம் முடிந்தவுடன் ஐந்தாவது தவணையாக 2 ஆயிரம் என மொத்தம் 14 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படுகிறது.
இந்நிலையில் தருமபுரி மாவட்டம் தீர்த்தமலை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் வாரந்தோறும் செவ்வாய், வியாழன், வெள்ளி கிழமைகளில் கர்ப்பிணிகளுக்கு பரிசோதனை செய்யப்படுகிறது. இதில் அரூர் அடுத்த கீழானூர் கிராமத்தை சேர்ந்த கர்ப்பிணிகளும் தீர்த்தமலை மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு செல்கின்றனர். ஆனால் தீர்த்தமலை ஆரம்ப சுகாதார நிலையத்தில், பிரசவம் பார்த்துக் கொண்டவர்களுக்கு முழுமையாக அரசு உதவிகள் சென்றடையவில்லை என புகார் தெரிவிக்கின்றனர்.
ஒருசிலருக்கு குழந்தை பிறந்து, 2 ஆண்டுகள் ஆகியும் நிதியுதவி வரவில்லை. இது குறித்து கீழானூர் கிராம செவிலியர் அருள்மொழியிடம் கர்ப்பிணிகள் கேட்டால், உங்களுக்கு பணம் அனுப்பிவிட்டேன், நீங்கள் வங்கியில் கேளுங்கள் என கூறி, டேப்-ஐ காட்டி அனுப்பியுள்ளார். ஆனால் கீழானூர் கிராமத்தில் உள்ள 20-க்கும் மேற்பட்ட கர்பிணிகளுக்கு மகப்பேறு நிதி முதல் தவணை, இரண்டு தவணை வரை மட்டுமே கிடைத்துள்ளது. ஆனால் ஒருவருக்கும் முழுமையான நிதி கிடைக்கவில்லை. தமிழக அரசு ஏழை பெண்கள் கர்ப்ப காலத்தில், சத்தான உணவை உட்கொண்டு, ஆரோக்கியமாக குழந்தையை பெற்றெடுக்க வேண்டும் என நிதியை வழங்குகிறது.
ஆனால் தீர்த்தமலை ஆரம்ப சுகாதார நிலையத்தில் மட்டும் முழுமையான நிதி வழங்கப்படுவதில்லை. கர்ப்பிணிகளிடம் ரூ.18,000 நிதிக்கு, பணம் கொடுத்தால் மட்டுமே, செவிலியர்கள் விவரங்களை பதிவு செய்து கொள்கிறார்கள். ஆனால் பணம் கொடுத்தும், எங்களுக்கு நிதி கிடைக்கவில்லை, செவிலியர்கள் முறைகேடு செய்கிறார்கள் என கர்ப்பிணிகள் வேதனை தெரிவிக்கின்றனர். எனவே மகப்பேறு நிதி உதவி கிடைக்காத கர்ப்பிணிகளுக்கு உடனடியாக நிலுவையில் உள்ள தொகையை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கர்ப்பிணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.