புதுக்கோட்டையில் வெடி விபத்து; 5 பேருக்கு தீவிர சிகிச்சை - காவல்துறையினர் விசாரணை
புதுக்கோட்டை அருகே நாட்டு வெடி தயாரிப்பு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டது. இதில், 5 தொழிலாளர்கள் படுகாயமடைந்தனர்.
Continues below advertisement

புதுக்கோட்டையில் வெடி விபத்து
புதுக்கோட்டை மாவட்டம், பூங்குடி கிராமத்தில் ஊருக்கு சற்று தள்ளி குடியிருப்பு பகுதிகள் இல்லாத இடத்தில் அரசு அனுமதி பெற்று நாட்டு வெடி தயாரிப்பு ஆலையை கோவிலூரை சேர்ந்த வைரமணி (வயது 44) என்பவர் நடத்தி வருகிறார். கோவில் திருவிழாக்கள், திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு வாண வேடிக்கைக்கு வெடிகள் மற்றும் நாட்டு வெடிகளை தயாரித்து விற்பனை செய்து வருகிறார். இந்த ஆலையில் வெடி மருந்து தயாரிக்கும் கூடமானது சிறிய கட்டிடத்தில் இயங்கி வந்தது. இந்த கட்டிடத்தில் நேற்று 7 பேர் வெடிகளை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் நேற்று இந்த கட்டிடத்தில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. வெடிகள் வெடித்து சிதறின. இதில் அங்கு பணியாற்றிய 5 தொழிலாளர்கள் படுகாயமடைந்தனர். அவர்கள் தீக்காயத்தில் அலறி துடித்தனர். இதற்கிடையே வெடி விபத்தில் வெடிகள் நாலாபுறமும் வெடித்து சிதறின. இந்த பயங்கர சத்தம் அக்கம் பக்கம் கிராமங்கள் வரை கேட்டது. இதனால் அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். தீக்காயமடைந்து கிடந்தவர்களை பொதுமக்கள் மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்சில் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையில் தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவித்து வரவழைத்தனர். புதுக்கோட்டை, சிப்காட் ஆகிய தீயணைப்பு நிலையங்களில் இருந்து 2 தீயணைப்பு வாகனங்களில் 20-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் வந்தனர்.
மேலும், வெடி விபத்து ஏற்பட்ட இடத்தில் இருந்து வெடி சத்தம் கேட்டுக்கொண்டே இருந்தது. ஒவ்வொரு வெடிகளாக வெடித்தப்படி இருந்தது. இதனால் தீயணைப்பு வீரர்கள் உடனடியாக அந்த இடத்தின் அருகே செல்ல முடியவில்லை. இதனிடையே வெடி விபத்து நடந்த இடத்தின் அருகே தைல மரக்காடுகள் உள்ளன. இதிலும் தீப்பற்றி எரிந்தது. இதில் ஏற்பட்ட தீயையும் தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து அணைத்தனர். வெடி விபத்து நடந்த இடத்திலும் தண்ணீரை பீய்ச்சி அடித்தனர். இந்த விபத்தில் கட்டிடம் முழுவதும் இடிந்து தரைமட்டமானது. மேலும் கட்டிடத்தில் இருந்த வெடி பொருட்கள் சிதறின. தீயணைப்பு கருவிகள் தூக்கி வீசப்பட்டு கட்டிடத்தின் வெளிப்பகுதியில் கிடந்தன. தண்ணீர் நிரப்பப்பட்ட டிரம்கள் சிதறி கிடந்தன. தீக்காயமடைந்தவர்களுக்கு புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. காயமடைந்தவர்கள் பெயர் விவரம் வருமாறு:- கோவிலூரை சேர்ந்த ஆலை உரிமையாளர் வைரமணி (44), திருக்கோகர்ணம் அருகே கோவில்பட்டியை சேர்ந்த திருமலை (30), குமார் (38), வீரமுத்து (31), வெள்ளனூரை சேர்ந்த சுரேஷ் (37) ஆகியோர் ஆவர். இந்த வெடி விபத்து குறித்து தகவல் அறிந்ததும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டே, டவுன் போலீஸ் துணை சூப்பிரண்டு ராகவி, மாவட்ட தீயணைப்பு அதிகாரி பானுப்பிரியா மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள், வெள்ளனூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் மீட்பு பணிகளை துரிதப்படுத்தினர்.
Continues below advertisement
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.