தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களாக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தொடர்ந்து அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். குறிப்பாக வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்கள் சேர்த்து உள்ளார்கள் என புகார்கள் வந்ததன் அடிப்படையில் இந்த சோதனைகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திருச்சியில் வருமானத்துக்கு அதிகமாக சொத்துசேர்த்த வழக்கில், காவல்துறை துணை கண்காணிப்பாளருக்கு தொடர்புடைய இரண்டு இடங்களில் பெரம்பலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர்.  திருச்சி காவல்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


திருச்சி மதுவிலக்கு பிரிவில் டி.எஸ்.பி ஆக பணியாற்றியவர் முத்தரசு. இவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத் துறைக்கு புகார்கள் பறந்த வண்ணம் இருந்தது. இந்த புகார்களின் அடிப்படையில் முத்தரசு மீது துறை ரீதியான விசாரணை நடத்தப்பட்டு அவர் திருநெல்வேலி காவல்துறை வட்டாரத்தில் ஆவண காப்பு டி.எஸ்.பி.,யாக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். ஆனாலும், 5 அல்லது 6 மாதங்களிலேயே திருச்சிக்கு மீண்டும் மாறுதலாகி நில அபகரிப்பு குற்றத்தடுப்பு பிரிவு (2) காவல்துறை துணை கண்காணிப்பாளராக பதவியேற்று திருச்சியில் பணியாற்றி வந்தார் முத்தரசு. இவர் மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையில், லஞ்ச ஒழிப்புத்துறைக்கு மீண்டும் புகார்கள் சென்றிருக்கிறது.




இதனையடுத்து நேற்று முன்தினம் காலை முதல் டி.எஸ்.பி முத்தரசு வசிக்கும் மொராய் சிட்டியில் உள்ள அவரது வீடு மற்றும் அவருக்கு தொடர்புடைய இடங்களில் பெரம்பலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு காவல்துறை துணை கண்காணிப்பாளர் ஹேமசித்ரா தலைமையில் 10க்கும் மேற்பட்ட போலீசார் சோதனை நடத்தி வந்தனர். டி.எஸ்.பி முத்தரசுவின் பூர்வீகம் தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை பகுதி என்பதால் அவரது தந்தையின் வீட்டிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் ஈடுபட்டு வந்தனர். 


திருச்சி டி.எஸ்.பி முத்தரசு தொடர்புடைய வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருவது திருச்சி காவல்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இதற்கிடையில், மொராய் சிட்டிஸ் என்றாலே பெரும் செல்வந்தர்கள் குடியிருக்கும் பகுதி. அங்கே காவல்துறை டி.எஸ்.பி., பதவியில் இருக்கும் ஒருவர் கோடிகணக்கான மதிப்புடைய வீடு கட்டி வாழ்ந்து வருவதும் குறிப்பிடத்தக்கது.