அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் வேலாயுதநகர், மகா மாரியம்மன் கோவிலில் இருந்து பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை 104-வது பாத யாத்திரையை தொடங்கினார். புதிய பேருந்து நிலையம், அண்ணா சிலை, நான்கு ரோடு சந்திப்பு வரை யாத்திரை மேற்கொண்டார். அண்ணாமலை சென்ற வழி அனைத்திலும் ஏராளமான பொதுமக்கள் குறை கேட்டு அவர்களுடைய மனுக்களை பெற்றுக்கொண்டார்.
யாத்திரையின் முடிவில் மக்கள் மத்தியில் பேசியதாவது:
தி.மு.க. ஆட்சி வந்த பிறகு கொலை கொள்ளை அதிகரித்து உள்ளது. தி.மு.க. ஆட்சிக்கு வந்து 30 மாதங்கள் ஆகிவிட்டது. அவர்கள் பதவியேற்கும் போது தமிழ்நாடு எப்படி இருந்ததோ அதேபோல்தான் இன்னும் இருந்து கொண்டிருக்கிறது. தமிழ்நாடு எந்த வகையிலும் முன்னேறவில்லை இளைஞர்களுக்கு சரியான முறையில் கல்வி இல்லை, விவசாயிகளுக்கு விவசாயத்தில் எந்த பயனும் இல்லை. முதலமைச்சர் ஸ்டாலின், தனது மகன் குடும்பமும், மருமகன் குடும்பமும் நன்றாக இருக்க வேண்டும் என்பதே குறிக்கோளாக உள்ளார். நாம் எல்லா ஏழை குழந்தைகளுக்கும் டொனேஷன் இல்லாமல் பணத்தை கொடுக்காமல் நேரடியாக மருத்துவ கல்லூரிலே சேர வேண்டும் என்பதற்காக முயற்சி செய்து கொண்டிருக்கும் பொழுது, தி.மு.க .இளைஞர்களை ஏமாற்றும் விதமாக கையெழுத்து இயக்கத்தை நடத்தி வந்து கொண்டிருக்கிறது. இளைஞர்களை முன்வைத்து நம்முடைய பாரத பிரதமர் அவர்கள் கிட்டத்தட்ட ஒன்பது வருடங்களாக எப்படிப்பட்ட ஆட்சி நடத்திக் கொண்டிருக்கின்றார்கள்.
தமிழ்நாட்டில் ஏராளமான கிராமங்களில் வீடு வழங்கும் திட்டம், குடிநீர் வழங்கும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை கிராமப்புறங்களில் உள்ள பொதுமக்கள் பயனடைந்து வருகின்றனர். ஆனால் தி.மு.க. 23 வருடங்களாக ஏமாற்றிக் கொண்டு இருக்கிறார்கள். தமிழ்நாட்டிலே தீபாவளி அன்று மட்டுமே சாராயம் டாஸ்மாக்-ல் விற்கப்பட்ட சாராய மூலமாக 11 கோடிக்கு மேல் வருமானம் ஈட்டியுள்ளனர். மதுவிலிருந்து வரக்கூடிய வருமானத்தை வைத்துதான் ஒரு ஆட்சி நடக்க வேண்டுமா? என்கின்ற கேள்வியை மக்கள் எல்லாரும் முன் வைக்கின்றனர். அதேபோல்இந்தியாவில் எந்த ஒரு மாநிலத்திலும், இது போன்ற ஊழல் அமைச்சர்களை பார்த்தது கிடையாது. தமிழ்நாட்டில் அவர்கள் வாக்குறுதியான 511 தேர்தல் வாக்குறுதிகளில் 20 வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளார்கள். மேலும் இவர்கள் வாங்கிய கடனை ஏழை விவசாயிகள் நீங்கள் தான் கட்ட வேண்டும். ஜெயங்கொண்டம் ரயில் பாதை திட்டம் பிப்ரவரி மாதம் பட்ஜெட்டில் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.