அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் அருகே உள்ள துளாரங்குறிச்சி கிராமத்தில் சுமார் 30-க்கும் மேற்பட்ட இருளரின குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த மக்களின் குடியிருப்பு பகுதி வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதியாகும். சுமார் 4 தலைமுறையாக இந்த இடத்தில் இருளரின மக்கள் வசித்து வருகின்றனர். மேலும் இவர்களுக்கு விவசாய நிலமும் இருந்தது. இந்நிலையில் கடந்த 2006-ம் ஆண்டு வனத்துறையினர் விவசாய நிலங்களை பறிமுதல் செய்தனர். இதனால் விவசாயம் செய்ய முடியாத நிலையில், இருளரின மக்கள் தினக்கூலி வேலைகளுக்கு சென்று வருகின்றனர். மேலும் அவர்கள் இருக்கும் இடத்திற்கு பட்டா இல்லாத நிலையும் உள்ளது. இதனால் பட்டா வழங்க கோரிக்கை விடுத்தனர். மேலும் இதுகுறித்து பலமுறை கோரிக்கை மனுக்கள் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லாத காரணத்தால், ஆத்திரமடைந்த இருளரின மக்கள் நேற்று தங்கள் வீடுகளில் உள்ள அரிசி, மளிகை பொருட்கள், காய்கறிகள் மற்றும் பாத்திரங்களை எடுத்துக்கொண்டு 2 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று மயானத்தில் குடியேறி, சமைத்து சாப்பிடும் நூதன முறையில் போராட்டம் நடத்தினர். அப்போது அங்கு சமையல் செய்து, வாழை இலையில் உணவை பறிமாறி அனைவரும் சாப்பிட்டனர்.
மேலும் மாவட்டத்தில், 2006 வன உரிமை சட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தினர். இது பற்றி தகவல் அறிந்து வந்த மாவட்ட ஆதிதிராவிடர், பழங்குடியினர் நல அலுவலர் விஜயபாஸ்கர், ஜெயங்கொண்டம் ஆதிதிராவிடர் தனி தாசில்தார் கலைவாணன், வருவாய் அலுவலர் சிவகுமார் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் கார்த்திகேயன் ஆகியோர், அங்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, அவர்களது கோரிக்கைகளை விரைந்து நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதையடுத்து இருளரின மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தில் இருளர் பழங்குடியினர் மாநில தலைவர் இருளபூ.செல்வக்குமார், பகுஜன் சமாஜ் கட்சி மாவட்ட செயலாளர் சின்னத்துரை மற்றும் கட்சி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். மதியம் 12 மணிக்கு தொடங்கிய இந்த போராட்டம் மாலை 4 மணிக்கு முடிந்தது.இந்த போராட்டத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்