திருச்சி மாநகரில் மிகவும் பழமையான, அகலம் குறைந்த திருச்சி ஜங்ஷன் ரெயில்வே மேம்பாலத்திற்கு பதிலாக, புதிய மேம்பாலம் அமைக்கும் பணி (அரிஸ்டோ மேம்பாலம்) கடந்த 2014-ம் ஆண்டு மார்ச் மாதம் தொடங்கியது. ரூ.81 கோடி திட்ட மதிப்பில் 2 கட்டங்களாக பாலத்தை கட்டி முடிக்க திட்டமிடப்பட்டது. இதில் முதல் கட்டமாக அரிஸ்டோ ரவுண்டானாவை மையமாக வைத்து திண்டுக்கல் சாலை, மத்திய பஸ் நிலைய பகுதி, ஜங்ஷன் ரெயில் நிலையம், மதுரை சாலை ஆகியவற்றை இணைக்கும் வகையில் பாலம் கட்டுமான பணிகள் முடிவடைந்து உள்ளன. இந்நிலையில் சென்னை-மதுரை சாலையை இணைக்கும் வகையிலான மன்னார்புரம் பகுதியில் ராணுவத்திற்கு சொந்தமான நிலம் உள்ளது. அந்த இடத்தை கொடுக்க ராணுவ அமைச்சகம் மாற்று இடம் கேட்டது. ஆனால், ராணுவ அமைச்சகம் கேட்ட இடத்தில், மாற்று நிலம் ஒதுக்க தமிழக அரசு கொடுக்க தயங்கி வந்தது. எனவே, ராணுவ இடம் ஒப்படைக்கப்படாததால் அந்த பகுதியில் மட்டும் பாலம் அமைக்கும் பணி இன்னும் நிறைவடையாமல்  பல ஆண்டுகளாக கிடந்தது. அதே வேளையில் முதல்கட்ட பணியில் கட்டுமான பணிகள் நிறைவடைந்துள்ள ஒரு பகுதியை அப்போது தமிழக முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமி கடந்த 2018-ம் ஆண்டு ஜூலை மாதம் 17-ந் தேதி அன்று சென்னை தலைமைச்செயலகத்தில் இருந்தபடியே காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.




இதனைத்தொடர்ந்து புதிதாக திறக்கப்பட்ட பாலத்தில் கார்கள், இருசக்கர வாகனங்கள் உள்பட அனைத்து வாகனங்களும் செல்ல தொடங்கின. இந்த பாலத்தில், மதுரை சாலையில் கிராப்பட்டி பகுதியில் இருந்து வாகனங்கள் ஏறி, இறங்கவும், மத்திய பேருந்து நிலையம், திண்டுக்கல் சாலை கருமண்டபம் ஆகிய வழிகளில் ஏறி, இறங்கவும் முடியும். அதே வேளையில் ஜங்ஷன் ரெயில் நிலையம் வழித்தடத்தில் வாகனங்கள் இறங்க மட்டுமே முடியும். மேலும் ஜங்ஷன் பகுதியில் இருந்து ஏற முடியாது. இந்தநிலையில் அரிஸ்டோ மேம்பாலத்தில் மன்னார்புரம் செல்லும் வழியில் விடுபட்ட பாலப் பணிகளுக்கான இடத்தினை கொடுக்க ராணுவ அமைச்சகம் ஒப்புதல் அளித்தது. இதனை தொடர்ந்து அரிஸ்டோ மேம்பாலத்தில் விடுபட்ட பாலம் கட்டுவதற்கான பணிகளுக்காக ரூபாய் 3½ கோடி நிதி ஒதுக்கீடு செய்யபட்டது. இதனை தொடர்ந்து கடந்த ஆண்டு மே மாதம் 13 ஆம் தேதி  பூமி பூஜையுடன் தொடங்கியது. முதல் கட்டமாக பாலம் அமைய உள்ள இடத்தில் நின்றிருந்த மரங்கள் நெடுஞ்சாலைத்துறை பணியாளர்களால்  வெட்டி அகற்றி அப்புறப்படுத்தப்பட்டது. பின்பு இராணுவத்திற்கு சொந்தமான இடத்தை சுற்றி தடுப்பு சுவர் எழுப்பட்டது. இதனை தொடர்ந்து அடுத்த 3 மாதங்களில் மேம்பாலம் பணிகள் முழுமையாக முடிவடைந்து மக்களின் பயன்பாட்டிற்கு வரும் என நெடுஞ்சாலை அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் டெண்டர் விடுவது, ஆட்கள் பற்றாக்குறை காரணமாக பாலம் திறப்பதில் தாமதம் ஏற்பட்டது என தெரிவித்தனர். இந்நிலையில் விடுபட்ட பாலத்தின் பணிகள் தற்போது முழுமையாக முடிக்கபட்டது. 




இதனை தொடர்ந்து இன்று அதிகாலை முதல் அரிஸ்டோ மேம்பாலம்  பொதுமக்களின் பயன்பாட்டிற்கு தமிழ்நாடு நகராட்சி நிர்வாகதுறை அமைச்சர் கே.என். நேரு திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில்  திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார், திருச்சி மேயர் அன்பழகன், மாநகராட்சி ஆணையர் வைத்தியநாதன், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுகரசர், திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் சத்தியபிரியா, நெடுஞ்சாலை துறை அதிகாரிகள், பொதுபணிதுறை அதிகாரிகள் , மற்றும் மாவட்ட நிர்வாக அதிகாரிகள் என பலர் கலந்துக்கொண்டனர். மேலும் கடந்த 8 ஆண்டுகளாக கிடப்பில் போட்டபட்ட மேம்பாலம் தற்போது புதுபொழிவுடன் மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கபட்டதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். குறிப்பாக திருச்சி- சென்னை- மதுரை நெடுஞ்சாலையை இணைக்கும் வகையில் இந்த பாலம் பணிகள் முடிக்கபட்டுள்ளது என்பது குறிப்பிடதக்கது.