திருச்சி பெரியமிளகுபாறை பொன்நகர் அருகே காமராஜபுரம் பகுதியில் ரேஷன் கடை உள்ளது. இந்த கடையில் பா.ஜ.க. மண்டல தலைவர் பரமசிவம் தலைமையிலான பா.ஜ.க.வினர் மோடி படத்தை வைக்க முயன்றனர். அப்போது அங்கு நின்று இருந்தவர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த தி.மு.க.வினர் அங்கு திரண்டனர். அவர்கள் பிரதமர் மோடி படத்தை வைக்க எதிர்ப்பு தெரிவித்து, பா.ஜ.க.வினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் இரு தரப்பினர் இடையே மோதல் மற்றும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தகவல் அறிந்த செசன்ஸ் கோர்ட்டு காவல்துறை சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, மோதலில் ஈடுபட்ட இரு கட்சியினர் இடையே பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதில் சமாதானம் அடையாத இரு கட்சியினரும் காவல் துறையிடம்  வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும்  ரேஷன் கடை ஊழியர்கள் காவல்துறை முன்னிலையில் கடைக்கு பூட்டுப் போட்டனர். பின்னர் தி.மு.க.வினர் சிலர் பிரதமர் மோடியின் படத்தை உடைத்து ரேஷன் கடை முன்பு உள்ள சாக்கடை கால்வாயில் வீசினர். இதில் ஆத்திரம் அடைந்த பா.ஜ.க.வினர் கண்டன கோஷம் எழுப்பினர்.




இதனை தொடர்ந்து  பா.ஜ.க. மாவட்ட தலைவர் ராஜசேகரன் சம்பவ இடத்திற்கு வந்தார். இதை தொடர்ந்து இருதரப்பினர் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அந்த பகுதியில் அசாதாரணமான சூழல் நிலவியதுடன் பதற்றம் ஏற்பட்டது. இதனை அடுத்து அங்கு காவல்துறை உதவி கமிஷனர்கள் அஜய் தங்கம், பாஸ்கர் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் என 50-க்கும் மேற்பட்ட  காவல்துறையினர்  குவிக்கப்பட்டனர். அந்த ரேஷன் கடையை சுற்றி உள்ள பகுதியை கயிறு கட்டி பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வந்தனர். அப்போது பிரதமர் மோடி படத்தை ரேஷன் கடையில் வைக்க கூடாது என்று தி.மு.க.வினர் மற்றும் அவர்களது ஆதரவாளர்கள் சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் பிரதமர் மோடியின் படம் அங்கு இருந்து எடுத்து செல்லப்பட்டது. அதன்பின் காவல்துறையினர்  இரு தரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சமாதானம் அடைந்த இரு தரப்பினரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.




பின்னர் பிரதமர் படத்தை உடைத்து சாக்கடையில் வீசிய தி.மு.க.வினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கண்டோன்மெண்ட் உதவி கமிஷனர் அஜய் தங்கத்திடம் பா.ஜ.க.வினர் புகார் மனு அளித்தனர். தற்போது அந்த பகுதி ரேஷன் கடை காவல்துறையின் பாதுகாப்பு வளையத்தில் உள்ளது. தி.மு.க.-பா.ஜ.க.வினர் இடையே ஏற்பட்ட மோதலால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் அப்பகுதியில் சுமாராக 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.