திருச்சி மாவட்டம், தொட்டியம் தாலுக்கா கவரப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் முத்துசாமி என்பவரின் மகன் தங்கராசு (வயது 45). இவருக்கு சொந்தமான 5 ஏக்கர் பூர்வீக நிலத்தினை இவரும் இவரது அண்ணனும் சரி பாதியாக பிரித்து, அதில் விவசாயம் செய்து வருகின்றனர்.


அண்ணன் கணேசனுக்கு பிரிக்கப்பட்ட பங்கில் விவசாயக் கேணி உள்ளது. தங்கராசுக்கு பிரிக்கப்பட்ட நிலத்தில் ஆழ்துளை கிணறு உள்ளது.


இந்த ஆழ்துளை கிணற்றுக்கும், கேணிக்கும் சேர்த்து ஒரு இலவச விவசாய மின் இணைப்பு மட்டும் உள்ளது. ஒரு இலவச மின் இணைப்பு பெற்று இரண்டு இடங்களிலிருந்து தண்ணீர் எடுப்பதாக மின்வாரியத்துக்கு வந்த புகாரின் பேரில் மின்வாரிய அதிகாரிகள் விசாரணை செய்து தங்கராசுவுக்கு அபராதம் விதித்து வசூல் செய்துள்ளனர்.


மேலும் தங்கராசு தனியாக பயன்படுத்தி வந்த மின் இணைப்பினை கடந்த (07.06.2024) அன்று வணிக பயன்பாட்டுக்கும் மாற்றி உள்ளனர். பின்னர், (25.06.2024) ஆம் தேதி அன்று தங்கராசுவின் தொலைபேசிக்கு மின்வாரிய உதவி செயற்பொறியாளர் AD பேசுகிறேன் என்று சொல்லி உன் மீது சுமதி என்பவர் புகார் கொடுத்துள்ளார். நீ தொட்டியம் ஆபீசுக்கு வந்து என்னை பார் என்று கூறியுள்ளார்.




விவசாயியிடம் லஞ்சம் பெற்ற மின்வாரிய உதவி இயக்குனர் கைது.


அதன் பேரில் (26.06.2024) மதியம் 3 மணியளவில் தொட்டியத்தில் உள்ள மின்வாரிய அலுவலகம் சென்று அங்கிருந்த மின்வாரிய உதவி பொறியாளர் திருமாறன் என்பவரை சந்தித்துள்ளார். அப்போது AD திருமாறன் உனக்கு டேரிஃப் சேஞ்ச் பண்ணிக் கொடுத்ததற்கும் நீ எனக்கு எதுவும் தரல, இப்ப சுமதி என்பவர் உன் மேல புகார் கொடுத்து இருக்காங்க. அந்த புகாரை உனக்கு சாதகமாக எழுதி அனுப்ப வேண்டும். அதனால எனக்கு 2000 ரூபாய் கொடுத்துவிடு என்று கேட்டுள்ளார்.


அதற்கு தங்கராசு பணம் ரெடி செய்தவுடன் உங்களை பார்க்கிறேன் என்று சொல்லிவிட்டு வந்துள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத தங்கராசு திருச்சி லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் அளித்தார்.


இந்த புகாரின் பேரில் டி.எஸ்.பி மணிகண்டன் ஆலோசனையின்படி, நேற்று  (02.07.2024) தொட்டியம் மின்வாரிய அலுவலகத்தில் தங்கராசுவிடம் இருந்து உதவி பொறியாளர் ஏ.டி திருமாறன் 2000 ரூபாய் லஞ்சப் பணத்தை கேட்டு பெற்றார்.


அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு துறை டி.எஸ்.பி மணிகண்டன், ஆய்வாளர்கள் சக்திவேல், பாலமுருகன், பிரசன்ன வெங்கடேஷ் அடங்கிய குழுவினர் ஏ.டி திருமாறனை கையும் களவுமாக பிடித்து லஞ்ச வழக்கில் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.




லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அறிவுரை


லஞ்சம் வாங்குவதும் , கொடுப்பதும் குற்றம். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக திருச்சி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பொதுமக்களிடம் அரசு துறை சார்ந்த அதிகாரிகள் லஞ்சம் வாங்குவதாக தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளது.


அந்தப் புகாரின் அடிப்படையில் அரசுத்துறை அதிகாரிகள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆகையால் பொதுமக்கள் எவ்வித அச்சமும் இன்றி செயல்பட வேண்டும். 


அரசு துறையைச் சார்ந்த யாராக இருந்தாலும் லஞ்சம் கேட்டாலோ, அல்லது மிரட்டினாலோ உடனடியாக லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தை தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்க வேண்டும் என அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர். 


குறிப்பாக லஞ்சம் கொடுத்தால் உடனடியாக காரியம் நடந்து விடும் என்ற நோக்கத்தோடு பொதுமக்கள் செயல்படக்கூடாது என அறிவுரை வழங்கினர்.