இந்தியா முழுவதும் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி இந்ததாண்டு ஆகஸ்ட் மாதம் தொடங்கி அடுத்தாண்டு மார்ச் 31, 2023க்குள் இப்பணிகளை முடிக்க அரசு திட்டமிட்டுள்ள நிலையில், www.nvsp.in, voters portal என்ற இணையதளத்தைப் பயன்படுத்த இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியது. இந்தியாவில் போலி வாக்காளர்களின் எண்ணிக்கை சமீப காலங்களாக அதிகரித்துள்ளது. ஒரு வாக்காளரின் பெயர் ஒன்றுக்கு மேற்பட்ட தொகுதிகளில் உள்ளது. பேரூராட்சி,ஊராட்சி, நகராட்சி, மாநகராட்சி என அனைத்து இடங்களிலும் 1 வார்டில் இருக்கும் வாக்காளரின் பெயர் 6, 7 என இரண்டிற்கும் மேற்பட்ட வார்டுகளில் இருக்கும். வாக்களிக்கச் செல்லும் போது தான் நாம் எதற்கு வாக்களிக்க வேண்டும்? என்ற குழப்பம் வாக்காளர்களுக்கு ஏற்படுகிறது. இதோடு அரசியல் கட்சியினரும் இதைச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு போலி வாக்குகளைப் போடுகின்றனர். இது போன்ற பிரச்சனைகளைத் தவிர்க்க ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையும் இணைக்க இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. நாடு முழுவதும் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான பணி ஆகஸ்ட் 1ம் தேதியிலிருந்து தொடங்கியது. இப்பணிகளை வருகின்ற மார்ச் 31, 2023க்குள் முடிக்கும் வகையில் மாநிலத் தலைமைத் தேர்தல் அதிகாரிகளுக்கு அறிவுரைகளை இந்தியத் தேர்தல் ஆணையம் வழங்கியுள்ளது. இதற்கென 6 பி என்ற படிவமும் அறிமுகம் செய்யப்பட்டது. 




இதனை தொடர்ந்து மக்களுக்கு இது பற்றிய விழிப்புணர்வு மற்றும் உதவிகளை வழங்குவதற்காக பல்வேறு மாநிலங்களில் இந்தியத் தேர்தல் ஆணையத்தின் சார்பில் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் தேசிய வாக்காளர் சேவைகள் போர்ட்டல், voter helpline app என்ற செயலி மூலமாகவும் வாக்காளர் அடையாள அட்டையை ஆதார் எண்ணுடன் இணைத்துக் கொள்ளலாம் எனத் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.போலி வாக்காளர்களைக் கண்டறிய மற்றும் ஒன்றுக்கு மேற்பட்ட தொகுதிகளில் உள்ள ஒரு வாக்காளர்களின் பெயர்களை நீக்கவும் இந்த நடவடிக்கை மிகவும் உறுதுணையாக இருக்கும். இந்தியத் தேர்தல் ஆணையம் இந்த நடவடிக்கை மேற்க்கொண்டது.




இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி ஒரு வாக்காளரின் பெயர் வாக்காளர் பட்டியலில் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் இடம் பெறுவதை கண்டறிந்து நீக்கவும், வாக்காளர்களின் சுயவிருப்பத்தின் அடிப்படையில் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதனை தொடர்ந்து  தமிழகத்தில் கடந்த இரண்டு மாதங்களாக பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அரியலூர் மாவட்டத்தில் கடந்த ஆகஸ்டு மாதம் 1-ந்தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்பணி தொடங்கப்பட்டதில் இருந்து அரியலூர் மாவட்டத்தில் உள்ள வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் அனைவரும் சிறப்பாக செயல்பட்டதின் அடிப்படையில் மாநில அளவில் அரியலூர் தொடர்ந்து முதலிடம் வகித்து வருகிறது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள மொத்த வாக்காளர்கள் 5 லட்சத்து 18 ஆயிரத்து 546 பேரில் 3 லட்சத்து 78 ஆயிரத்து 340 வாக்காளர்கள் (72.96 சதவீதம்) தங்களது ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைத்துள்ளனர். இதற்காக அரியலூர் மாவட்டத்தில் பணிபுரியும் அனைத்து வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கும் கலெக்டர் ரமணசரஸ்வதி பாராட்டு தெரிவித்தார். 100 சதவீதம் பணியை முடித்த வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர்  பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.