அரியலூர் மாவட்டம் முழுவதும் பொங்கல் பண்டிகைக்கு விற்பனை செய்வதற்காக விவசாயிகள் செங்கரும்பு பயிரிடுவது வழக்கம். இந்த ஆண்டும் தமிழர்களின் கலாசார பண்டிகையான பொங்கல் திருநாளுக்கு விற்பனை செய்வதற்காக அரியலூர் மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் சுமார் 750 ஏக்கர் நிலப்பரப்பில் செங்கரும்புகள் பயிரிடப்பட்டுள்ளன. பொங்கலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் கரும்பு அறுவடைக்கும் இன்னும் ஒரு சில நாட்களில் தயாராகிவிடும். இந்த ஆண்டு அரியலூர் மாவட்டத்தில் போதுமான அளவு மழைப்பொழிவு இல்லாத நிலையிலும் விவசாயிகள் கடுமையான போராட்டத்திற்கு பிறகு நல்லநிலையில் கரும்பை வளர்த்துள்ளனர். அணில், நரி, எலி மற்றும் கரும்பைத் தாக்கும் பூச்சி தாக்குதலில் இருந்து கரும்பு உற்பத்தி பாதிப்படையாமல் மிகுந்த கவனத்துடன் பராமரித்து வளர்த்துள்ளனர். கடந்த சில ஆண்டுகளாக ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் சிறப்பு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. இதில் கடந்த 5 ஆண்டுகளாக செங்கரும்பு பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்பில் தவறாமல் இடம்பெற்று வந்தது. இதனால் விவசாயிகள் மிகுந்த உற்சாகத்துடன் செங்கரும்பு பயிரிடுவதில் ஆர்வம் காட்டி வந்தனர்.




கடந்த ஆண்டு செங்கரும்பு கூட்டுறவு சங்கங்கள் மூலம் அரசு, விவசாயிகளிடமிருந்து நேரடியாக கரும்பை கொள்முதல் செய்து ரேஷன் கடைகள் மூலம் பொங்கல் பரிசு தொகுப்போடு இணைத்து வழங்கினர். அதனால் விவசாயிகள் கடந்த ஆண்டு பொங்கலுக்கு கரும்பு பயிரிட்ட அளவைவிட இந்த ஆண்டு சற்று கூடுதல் நிலப்பரப்பில் செங்கரும்பு உற்பத்தி செய்துள்ளனர். கடுமையான போராட்டத்திற்கு பிறகு நல்லநிலையில் வளர்ந்துள்ள செங்கரும்பு நிச்சயமாக அரசால் கொள்முதல் செய்யப்படும் என்று காத்திருந்தனர். இந்நிலையில் பொங்கல் பரிசாக ரேஷன் கார்டுதாரர்களுக்கு பச்சரிசி சர்க்கரை மற்றும் ரொக்கப்பணம் வழங்க அரசால் முடிவு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அரியலூர் மாவட்டம் முழுவதும் செங்கரும்பு பயிரிட்டுள்ள விவசாயிகள் பெருத்த ஏமாற்றம் அடைந்துள்ளனர். இதனால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததுபோல் செங்கரும்பு உற்பத்தி செய்து இடைத்தரகர்களை நம்பி இருக்க வேண்டிய சூழ்நிலை விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ளது.




இதனால் அரசு நல்ல விலைக்கு கொள்முதல் செய்யும் என்று எதிர்பார்த்து இருந்த விவசாயிகள் உற்பத்தி செய்த கரும்பு முழுமையாக விற்பனை ஆகுமா?, அப்படியே ஆனாலும் கரும்புக்கு எதிர்பார்த்த விலை கிடைக்குமா? என்பது குறித்து பெருத்த அச்சம் அடைந்துள்ளனர். இதுகுறித்து விவசாயிகள் கூறியது.. கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு அரை ஏக்கர் கூடுதலாக செங்கரும்பு உற்பத்தி செய்துள்ளேன். கரும்பு நன்கு வளர்ந்து வந்துள்ளன. ஆனால் அரசு கொள்முதல் செய்யும் என்று எதிர்பார்த்து இருந்தநிலையில் கரும்பை பற்றிய அறிவிப்பு தெரிவிக்கப்படாதது ஏமாற்றமாக உள்ளது. எங்களிடம் நேரடியாக கரும்பு கொள்முதல் செய்து எங்கள் குடும்பத்திற்கு இந்த பொங்கல் திருநாளை இனிமையான பொங்கல் திருநாளாக கொண்டாட அரசு வழிவகை செய்ய வேண்டும்  என விவசாயிகள் மாநில அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.





மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்



ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர.


யூடியூபில் வீடியோக்களை காண.