அரியலூர் பேருந்து நிலையத்தில் இருந்து நேற்று காலை 8 மணியளவில் கும்பகோணத்திற்கு அரசு புறநகர் பஸ் ஒன்று புறப்பட்டு சென்றது. இந்த பஸ்சை தாலாட்டு குப்பத்தை  சேர்ந்த டிரைவர் தனசாமி (வயது 50) ஓட்டி சென்றார். கண்டக்டராக அணிக்குறிச்சியை சேர்ந்த ராஜேஷ் (35) பணியாற்றினார். விக்கிரமங்கலம் அருகே சுந்தரேசபுரம் பகுதியில் உள்ள தனியார் பள்ளி அருகே பஸ் சென்றபோது தனசாமி அங்கிருந்த வளைவு பகுதியில் பஸ்சை திருப்ப முயன்றார். அப்போது அரியலூரில் செயல்பட்டு வரும் தனியார் சிமெண்டு ஆலைக்கு காரைக்காலில் இருந்து நிலக்கரியை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று எதிரே வந்தது.

Continues below advertisement

இந்தநிலையில் எதிரே வந்த லாரியானது அரசு பஸ் மீது மோதியது. இதில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த அரசு பஸ், அருகே இருந்த மின்மாற்றி மீது மோதி நின்றது. இதில் அரசு பஸ் சேதம் அடைந்ததுடன், முன்புறமும் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதையடுத்து, அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். இதில் அதிர்ஷ்டவசமாக பயணிகள் உயிர் தப்பினர். மேலும், இதுகுறித்து தகவல் அறிந்த ஜெயங்கொண்டம் தீயணைப்பு நிலைய அலுவலர் ராஜா தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று லாரி மற்றும் அரசு பஸ்சின் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்தனர். இதனால் அசம்பாவிதம் தடுக்கப்பட்டது.

Continues below advertisement

பின்னர் பஸ்சின் இடிபாடுகளுக்குள் சிக்கிய டிரைவர் தனசாமி, கண்டக்டர் ராஜேஷ், பயணிகளான பாக்கியா (20), மங்கையர்கரசி (29), சூர்யா (24), தனம் (50), ராசாமணி (55), பெரியசாமி (65), மணிமேகலை (50), பரமேஸ்வரி (42), 10 மாத குழந்தை பரணிதரன் ஆகிய 11 பேர் காயமடைந்தனர். இதில் டிரைவர் தனசாமிக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இந்த விபத்தால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி மக்கள், தடை செய்யப்பட்ட நேரங்களில் லாரிகள் இயக்கப்படுவதாகவும், காலை மற்றும் மாலை நேரங்களில் லாரிகளை அந்த வழியாக இயக்கக்கூடாது எனவும் கூறி திடீரென சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். அப்போது அங்கிருந்த விக்கிரமங்கலம் போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனைதொடர்ந்து விபத்தில் காயம் அடைந்த 11 பேரும் மீட்கப்பட்டு அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.

மேலும், அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து விக்கிரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவரான திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தை சேர்ந்த ராஜசேகரனை (37) கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும், மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா, அரியலூர் எம்.எல்.ஏ. சின்னப்பா ஆகியோர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு நேரில் சென்று காயமடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் கூறினர். மேலும் டாக்டர்களிடம் அவர்களுக்கு உரிய முறையில் சிகிச்சை அளிக்குமாறு அறிவுறுத்தினர்.