கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் தாலுகா, கண்டமங்கலம் அருகே குமிளங்காட்டு தெருவை சேர்ந்தவர் பிரபாகரன் (வயது 43). இவரது மனைவியின் உறவினர்கள் அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் தாலுகா, விழபள்ளம் கிராமத்தை சேர்ந்த பிரகாஷ் (42) மற்றும் அவரது மனைவி மதியழகி (35). சம்பவத்தன்று பிரகாசும் அவரது மனைவி மதியழகியும் பிரபாகரன் வீட்டிற்கு வந்துள்ளனர். அவர்கள் பிரபாகரனுக்கு பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி பணம் கேட்டுள்ளனர். அதனை நம்பிய பிரபாகரன் வங்கி பரிவர்த்தனை மூலமாகவும், ரொக்கமாகவும் ரூ.8 லட்சத்து 90 ஆயிரம் கொடுத்துள்ளார். மேலும் அவர்கள், பணம் கொடுத்தால் தங்களுக்கு தெரிந்தவர்களுக்கும் அரசு வேலை வாங்கி தருவதாக பிரபாகரனிடம் கூறியுள்ளனர்.  இதையடுத்து அவர்களிடம் அதே ஊரை சேர்ந்த பிரேம்குமார், முருகன், ரகுபதி, சண்முகசுந்தரம், கவிமணி, கதிரவன் மற்றும் இருகையூரை சேர்ந்த குருதேவன் ஆகியோரை பிரபாகரன் அறிமுகம் செய்து வைத்துள்ளார். அவர்களிடமும் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பிரகாஷ் மற்றும் மதியழகி தம்பதியினர் ரூ.27 லட்சத்து 10 ஆயிரம் பெற்றுள்ளனர். இதனைதொடர்ந்து அவர்கள் பிரபாகரனுக்கும், கவிமணிக்கும் அஞ்சல்துறையில் பணி நியமன ஆணையை வழங்கியுள்ளனர். ஆனால் விசாரித்து பார்த்தபோது அந்த பணி நியமன ஆணை போலியானது என தெரியவந்தது.




இதுகுறித்து தம்பதியிடம் கேட்டபோது அவர்கள் பணத்தை தர மறுத்துள்ளனர். மேலும் அவர்கள் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதுபற்றி கடந்த ஆண்டு செப்டம்பர் 29-ந் தேதி பிரபாகரன் புகார் அளித்தார். அதன்பேரில் அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இதன்பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர். இந்தநிலையில் அரியலூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் பிரகாஷ் மற்றும் மதியழகியை நேற்று முன்தினம் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 2 செல்போன்கள், 60 கிராம் தங்க நகைகள், ரூ.56 ஆயிரம், போலி பணி நியமன ஆணை கடிதம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.


இந்நிலையில் காவல்துறை தரப்பில் கூறியதாவது: எவ்வளவு கட்டுப்பாடுகள் விதித்தாலும், மோசடி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும்  மோசடிகள் குறையவில்லை. ஒவ்வொரு நாளும் புதுப்புது வகையான மோசடிகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. இந்த நிலையில் தற்போது லிங்க் மூலமாக மோசடி நடைபெறுவதாக தருவதாகவும், குறுஞ்செய்தியில் வரும் லிங்கை யாரும் பயன்படுத்த வேண்டாம். மேலும் பணம் இரட்டிப்பாகும் என ஆசை வார்த்தை கூறி மோசடியும் நடைபெற்று வருகிறது. அதேச்மயம் அரசு வேலை வாங்கி தருவதாக பல இடங்களில் மோசடியில் பலர் ஈடுபட்டு வருகிறார்கள்.  ஆகையால் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.