தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மத்திய அரசு வழங்கிய தடுப்பூசிகளில் கடந்த 16ஆம் தேதி வரை 2 கோடியே 49 லட்சத்து 88 ஆயிரத்து 350 தடுப்பூசிகள் மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதில் 2 கோடியே 49 லட்சத்து 33 ஆயிரத்து 196 தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது. இதில் 8.76 லட்சம் சுகாதார பணியாளர்கள், 11.59 லட்சம் முன்கள பணியாளர்கள், 18 முதல் 44 வயது வரை உள்ள 1.06 கோடி பேர், 45 முதல் 60 வயது வரை உள்ள 80.68 லட்சம் பேர், 60 வயதுக்கு மேற்பட்ட 42.12 லட்சம் பேர் தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனர். இதன்படி வழங்கப்பட்ட தடுப்பூசியில் 100 சதவீத தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு போடப்பட்டுள்ளது.


மத்திய மாவட்டங்களில் செலுத்தப்பட்டுள்ள தடுப்பூசிகளின் எண்ணிக்கை 


இதில் திருச்சி மாவட்டத்தில் 9,32,769 பேருக்கும், புதுக்கோட்டைத்தில் 2,92,428 பேருக்கும், கரூர் மாவட்டத்தில் 3,49,522 பேருக்கும், அரியலூர் மாவட்டத்தில் 2,25,982 பேருக்கும், பெரம்பலூர் மாவட்டத்தில் 2,01,096 பேருக்கும், தஞ்சாவூர் மாவட்டத்தில் 7,20,788 பேருக்கும், திருவாரூர் மாவட்டத்தில் 3,84,604 பேருக்கும், நாகை மாவட்டத்தில் 2,28,003 பேருக்கும், மயிலாடுதுறை மாவட்டத்தில் 2,34,241 பேருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக கொடுப்பட்ட  தடுப்பூசிகளை விட அதிக அளவு தடுப்பூசி செலுத்திய மாவட்டங்களில் திருச்சி 4வது இடத்தில் உள்ளது.




கர்ப்பிணி பெண்களுக்கு தடுப்பூசி செலுத்துவதில் அரியலூர் மாவட்டம் சாதனை 


இதைத்தவிர்த்து கர்ப்பிணி பெண்களுக்கு தடுப்பூசி செலுத்தியதில் அரியலூர் மாவட்டம் சாதனை படைத்துள்ளது. இதில் அரியலூர் மாவட்டத்தில் உள்ள 7,190 கர்ப்பிணி பெண்களில் 7,023 கர்ப்பிணி பெண்களுக்கு இதுவரை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதன்படி 98 சதவீத பேருக்கு தடுப்பூசி செலுத்தி அரியலூர் சாதனை படைத்துள்ளது. மேலும் முதல் 10 இடங்களில் மத்திய மண்டலத்தில் உள்ள 5 சுகாதார மாவட்டங்கள் இடம் பெற்றுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் 6993 கர்ப்பிணி பெண்களில் 4628 பேருக்கும், அறந்தாங்கியில் 7682 பேரில் 4792 பேருக்கும், புதுக்கோட்டையில் 10,156 பேரில் 5551 பேருக்கும், நாகையில் 6233 பேரில் 3176 பேருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 18 வயதுக்கு மேற்பட்டவர்களில் அதிகம் பேருக்கு தடுப்பூசி செலுத்திய மாவட்டங்களில் திருச்சி 5 வது இடத்தில் உள்ளது.




பாலுட்டும் தாய்மார்களுக்கு தடுப்பூசி செலுத்துவதில் பின்னடைவு


இதைத்தவிர்த்து பாலூட்டும் தாய்மார்களுக்கு தடுப்பூசி செலுத்தியதில் மத்திய மண்டத்தில் உள்ள மாவட்டங்கள் மிகவும் பின்தங்கி உள்ளது. இதன்படி கரூரில் 5798, தஞ்சாவூரில் 5448, புதுக்கோட்டையில் 3268, திருவாரூரில் 2873, பெரம்பலூரில் 2798, அரியலூரில் 2416, மயிலாடுதுறையில் 2009, நாகையில் 1756, திருச்சியில் 1721 பேர் தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனர்.


தமிழகத்தில் கொரோனா மூன்றாவது அலை குழந்தைகளை அதிகம் பாதிக்கும் என்பதால் மக்கள் அனைவரும் கட்டாயமாக தடுப்பூசியை செலுத்திக்கொள்ள வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்து  வருகிறார்கள். மேலும் இனி வரும் காலங்களில் மக்கள் மிகுந்த விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும், கைகளை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும், முக கவசம், சமூக இடைவெளியை கட்டாயமாக கடைபிடிக்க வேண்டும், மேலும் அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு மக்கள் முழுமையாக ஒத்துழைப்பு கொடுத்தால் மட்டுமே கொரோனா 3 அலையில் இருந்து நம்மை நாம் பாதுக்காத்து கொள்ள முடியும் என அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.