அரியலூர் மாவட்டம்  வாலாஜா நகரத்தை சேர்ந்தவர் விஜயகுமார், வெளிநாட்டில் வேலை செய்த இவர் பின்னர் ஊருக்கு திரும்பி விவசாயம் செய்து வருகிறார். இந்நிலையில் இவர் தனக்கு செய்வினை வைக்கப்பட்டுள்ளது என்று கூறி, 3 பேர் தன்னிடம் இருந்து 12 லட்சம் பெற்று மோசடி செய்துவிட்டதாக அரியலூர் சைபர் கிரைம் காவல்துறையில்  புகார் செய்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் செங்குட்டுவன் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினார். இந்த தீவிர விசாரணையில் விஜயகுமாரிடம் பணம் பெற்று மோசடி செய்தது திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றத்தை சேர்ந்த வல்லவராஜ் (22), கிருஷ்ணன் என்ற தர்மராஜ் (24), சேலம் மாவட்டம் சீலநாயக்கன்பட்டியை சேர்ந்த பேய் தலையன் என்ற சனியன் என்ற குமார் (39) என்பது தெரியவந்தது. இதையடுத்து காவல்துறையினர்  3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தினர். மேலும் கைதான 3 பேரும் சேலம் மாவட்டம் எருமபாளையம் பஸ் நிலையத்தில் தங்கியிருந்து, அங்கு வரும் பயணிகள் உள்ளிட்ட பொதுமக்களிடம் கைரேகை பார்ப்பதாக கூறி வந்துள்ளனர். பின்னர் கைரேகை பார்த்தவர்களுக்கு தோஷம், செய்வினை, பில்லி, சூனியம் உள்ளதாக கூறி அவர்களிடம் செல்போன் எண்ணை பெற்றுக்கொள்வதுண்டு. 

 



 

மேலும் கைரேகை பார்த்தவர்களை 3 பேரும் தொடர்ந்து செல்போனில் தொடர்பு கொண்டு பேசி, நாங்கள் பரிகாரம் செய்யவில்லை என்றால் உங்கள் வீட்டில் அசம்பாவிதங்கள் நடைபெறும் என்று அச்சுறுத்தும் வகையில் பேசி, பணம் பெற்று இருக்கிறார்கள் எனபது விசாரனையில் தெரியவந்தது. அதன்படி சொந்த வேலையாக சேலம் சென்ற அரியலூரை சேர்ந்த விஜயகுமார் எருமபாளையம் பஸ் நிலையத்திற்கு வந்தபோது, அவர்கள் 3 பேரும் அவரிடம் கைரேகை பார்ப்பதாக கூறியுள்ளனர். இதையடுத்து அவர்களிடம் கைரேகை பார்த்த விஜயகுமாருக்கு பில்லி, சூனியம், செய்வினை இருப்பதாகவும், அதற்கு கொல்லிமலை சென்று பரிகாரம் செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளனர். மேலும் அதற்கு செலவாகும் தொகையை தங்களது வங்கி கணக்கிற்கு அனுப்புமாறும் தெரிவித்தனர். அதை நம்பி அவர்கள் கொடுத்த வங்கி கணக்கிற்கு விஜயகுமார் பணம் அனுப்பியுள்ளார். மேலும் அவரிடம் நேரடியாகவும் அவர்கள் பணம் பெற்றுள்ளனர். இதன்படி மொத்தம் ரூ.12 லட்சம் வரை 3 பேரும் பணம் பெற்று மோசடி செய்துள்ளனர் என்பது விசாரணையில் தெரியவந்ததாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

 



 

மேலும் இதை அடுத்து 3 பேரையும் காவல்துறை கைது செய்தனர். இதனை தொடர்ந்து அவர்களிடம் இருந்து ரூ.6 லட்சத்து 30 ஆயிரம் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள், கார், இருசக்கர வாகனங்கள் மற்றும் தங்க நகை ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.  பின்னர் 3 பேரையும் அரியலூர் நீதிமன்றத்தில்  ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இவர்களை போன்று பலர் சுற்றி திரிகிறார்கள் ஆகையால் பொதுமக்கள் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும், தேவையில்லாமல் ஏமாற்றம் அடைய வேண்டாம் என காவல்துறையினர் அறிவுரை வழங்கினர்.