தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக லஞ்ச ஒழிப்புதுறையினர் அதிரடி சோதனையில் ஈடுப்பட்டு வருகிறார்கள். அரசியல் தலைவர்கள் முதல் அரசு அதிகரிகள் என அனைத்து இடங்களிலும் சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். மக்கள் மிகுந்த விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும், அரசாங்கள் மக்களுக்காக தான் செயல்பட்டு வருகிறது. ஆகையால் எந்த அலுவலங்களிலும் அரசு விதிமுறைகளை மீறி அதிகாரிகள் மட்டும் அல்லாமல் யாராக இருந்தாலும் லஞ்சம் கேட்கும் பட்சத்தில் உடனடியாக லஞ்ச ஒழிப்புதுரை அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்க வேண்டும். புகார்கள் உறுதி செய்யபடும் பட்சத்தில் அவர்கள் மீது சட்ட ரீதியான நடைவடிக்கைகள் எடுக்கபடும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக பண்டிகை நாட்களில் அரசு அலுவலங்களில் திடீர் சோதனையில் லஞ்ச ஒழிப்புதுறை அதிகாரிகள் ஈடுபடுவது வழக்கம். இந்நிலையில் திருச்சியில் லஞ்சம் வாங்கிய தாசில்தாரை லஞ்ச ஒழிப்புதுறை அதிகாரிகள் அதிரடியாக கைது செய்தனர். 




திருச்சி மாவட்டம் முசிறியில் பெயர் மாற்ற ரூபாய் 50 ஆயிரம் லஞ்சம் பெற்ற திருச்சி மேற்கு நிலவரி திட்ட செட்டில் மென்ட் சிறப்பு தாசில்தாரை லஞ்ச ஒழிப்புத்துறை கைது செய்தனர். திருச்சி கே.கே.நகர் சேர்ந்தவர் ரியல் எஸ்டேட் தொழிலதிபர் சீனிவாசன் இவருக்கு ஏர்போர்ட் கொட்டப்பட்டு கிராமம் வயர்லெஸ் ரோட்டில் சர்வே எண் 150/2 என்ற எண்ணில் 1.11 ஏக்கர் நிலம் ஊராட்சி என்பவரின் அனுபவத்தில் உள்ளது. இந்த இடத்தினை தனது பாட்டனார் கருப்பண்ணன் பெயருக்கு மாற்றுவதற்காக முடிவு செய்த சீனிவாசன். திருச்சி மேற்கு தாசில்தார் அலுவலகத்தில் இதற்கென உள்ள நிலவரி திட்டம் செட்டில்மெண்ட் சிறப்பு தாசில்தார் கோகுல் (47) , என்பவரை அணுகி உரிமை கோரி தடை மனு விண்ணப்பம் வழங்கினார். விண்ணப்பத்தினை ஆய்வுசெய்த தாசில்தார் பெயர் மாற்ற ரூபாய் 50 ஆயிரம் லஞ்சம் கேட்டார். லஞ்சம் கொடுக்க விரும்பாத சீனிவாசன் இதுகுறித்து திருச்சி மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகளிடம் புகார் அளித்தார்.




இந்த புகாரை அடுத்து டிஎஸ்பி மணிகண்டன் தலைமையில் காவல் ஆய்வாளர் சக்திவேல் மற்றும் காவல்துறையினர் நேற்று திருச்சி மேற்கு தாசில்தார் அலுவலகம் சென்று மறைந்து இருந்தனர். ஏற்கனவே காவல்துறையின் அறிவுறுத்தல் படி சீனிவாசன் ரூபாய் 50 ஆயிரத்தை தாசில்தார் கோகுலிடம் வழங்கிய போது மறைந்திருந்த காவல் துறையினர் கையும் களவுமாக பிடித்தனர். தொடர்ந்து அறை கதவை பூட்டி விசாரணை நடத்தினர் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள். தொடர்ந்து தாசில்தார் கோகுலிடம்  இருந்து பணத்தையும் பறிமுதல் செய்தனர். மேலும் திருச்சி உறையூர் ராமலிங்க நகரில் உள்ள வீட்டிலும் லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் சோதனை நடத்தினர் இந்த சோதனையில் ஏராளமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது. தீபாவளி நெருங்கும் நிலையில் லஞ்ச ஒழிப்புத் துறையின் முதல் சோதனையில் தாசில்தார் சிக்கிய நிலையில் அடுத்த வேட்டை தொடரும் என லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். எந்த துறைகளிலும் தவறுகள் நடக்கும்பட்சத்திலும், புகார்கள் வரும்பட்சத்தில் அதை உறுதி செய்யபட்டு லஞ்சம் வாங்கியவர்கள் மீது கடுமையான நடைவடிக்கைகள் எடுக்கபடும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.