பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, புதுக்கோட்டையில் நடைபெற்ற கட்சி கூட்டத்தில் பங்கேற்பதற்காக, சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்தார். திருச்சி விமான நிலையத்தில் அவர், நிருபர்களிடம் கூறுகையில், “பாஜக, ஆர்எஸ்எஸ் உடன் சமரசம் செய்து கொள்வதற்கு மற்றும் கூட்டணி வைப்பதற்கு குடும்ப ஆட்சியில் இருக்கக்கூடாது. ஊழலற்ற அரசு மற்றும் மக்களுக்கு நல்லாட்சி புரிய வேண்டும். இவை மூன்றுமே இல்லாததால் அதற்கு அருகதை இல்லை என்பதை முதலமைச்சர் உணர்ந்திருக்கிறார். பாஜகவுடன் திமுக கூட்டணி வைப்பதற்கு எக்காலத்திலும், எந்த ஒரு தகுதியும் கிடையாது. தமிழக நிதி அமைச்சர் பேசுவதற்கு ஆதாரம் மற்றும் அர்த்தம் இருக்க வேண்டும்.


இலவசங்களால் தமிழகம் முன்னேறி இருக்கிறதா என்பதை அவர்கள் ஆய்வு செய்ய வேண்டும். இலவசம் கொடுப்பதனால் தமிழகத்தில் வளர்ந்தவர்கள் கோபாலபுரம் குடும்பத்தினர் மட்டுமே. கமிஷனால் அரசியல்வாதிகளுக்கு மட்டுமே லாபம். கடந்த 14-ந் தேதி, வரலாற்றிலேயே அதிகபட்சமாக மது விற்பனை நடைபெற்றுள்ளது. நிதிச்சுமையில் தமிழகம் முதல் இடத்தில் உள்ளது.


அதேநேரம் வாங்கிய கடனையும் முறையாக செலுத்தவில்லை. ஆட்சிக்கு வந்தபோது ரூ.1 லட்சம் கோடி கடன் பெற்ற நிலையில், தற்போது ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் கோடி கடன் கேட்டுள்ளனர். எந்த அடிப்படையில் இது முன்னேறிக்கொண்டு இருக்கும் அரசு என்றும், திராவிட மாடல் அரசு என்றும் முதலமைச்சர் கூறுகிறார் என்பது தெரியவில்லை. 




இலங்கையில் ஒரே குடும்பத்தின் கையில் ஆட்சி சென்று, நிதி நிலைமை திவாலாகி, அவர்கள் அனைவரும் இலங்கையை விட்டு ஓடும் நிலை ஏற்பட்டது. தமிழகத்தில் குட்டி இலங்கை போல ஆட்சி நடைபெற்று வருகிறது. ஆனால் அரசை தாண்டி, தமிழக மக்கள் பொருளாதார அடிப்படையில் வளர்ச்சி பெற்றுக்கொண்டிருப்பதால் இது தெரியவில்லை. மேலும் தமிழகத்தில் இலங்கையில் ஏற்பட்ட நிலை விரைவில் இங்கு ஏற்பட வாய்ப்புள்ளது” என்றார்.  மேலும், ராகுல்காந்தி ஒவ்வொரு தேர்தலிலும் ஒவ்வொரு வேஷம் போடுகிறார் என்றும் தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கும் காங்கிரஸ் கட்சியை அதில் இருந்து வெளியேற்ற முயற்சி செய்கிறார்கள் எனவும் கூறினார்.





மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண