திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசியதாவது: ”திருச்சியில் சுமார் 1200 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட சர்வதேச விமான நிலையம் பணிகள் முழுமையாக முடிவடைந்து நம் நாட்டு மக்கள், தமிழ்நாட்டு மக்களுக்கு அர்ப்பணிக்கப்பட உள்ளது. இந்த நிகழ்வு வரும் ஜனவரி 2 ஆம் தேதி நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. இதில்  பாரத பிரதமர் மோடி அவர்கள் பங்கேற்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை. தமிழ்நாட்டில் வட மாநில தொழிலாளருக்கு பிரச்சனை வரும்போது, நான் கேள்வி கேட்டேன்,  அதற்கு திமுக அரசு என் மீது வடமாநில தொழிலாளர்களின் பிரச்சினை குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை பரப்பியதாக என் மீது வழக்கு பதிவு செய்தது.  


மேலும், வடமாநில தொழிலாளர்களைப் பற்றி திமுக அரசு தேர்தல் அறிக்கையில் கூறியது, தயாநிதி மாறன், டி.ஆர்.பி.ராஜா  பேசியதை நான் மக்களிடம் எடுத்துக் கூறினேன். ஆனால் நடுநிலையாக இருக்கக்கூடிய காவல் துறை என் மீது வழக்கு பதிவு செய்தது. முறைப்படி முதல்வர் ஸ்டாலின், தயாநிதி மாறன், டிஆர்பி ராஜா ஆகியோர்கள் மீது வழக்கு பதிவு செய்திருக்க வேண்டும். 


திமுக அரசு, தமிழ்நாட்டின் வளர்ச்சி எப்படி உள்ளது,  மற்ற மாநிலங்களின் வளர்ச்சி எப்படி உள்ளது என்பதை நினைத்து பார்க்க வேண்டும். குறிப்பாக மற்ற மாநிலங்கள் பொருளாதார வளர்ச்சியில் மிக வேகமாக சென்று கொண்டிருக்கிறது. ஆனால் தமிழ்நாட்டில் ஊழல் அதிகமாக உள்ளதால் வளர்ச்சி பின்னோக்கி சென்று கொண்டிருக்கிறது. இதை திமுக அரசு கவனிக்க வேண்டும். 


அனைத்து துறைகளிலும் தமிழ்நாடு மிகப் பெரிய வளர்ச்சி அடைந்து வருகிறது. ஆனால் இரண்டாம் இடத்தில் இருந்த தமிழ்நாடு ஏன் மூன்றாம் இடத்திற்கு சென்றது, இதுதான் திராவிட மாடல் ஆட்சியா அண்ணாமலை கேள்வி?. தமிழ்நாட்டில் திமுக ஆட்சி பொறுப்புக்கு வந்த பிறகு ஏழரை லட்சம் கோடி கடன் அதிகப்படுத்தியது தான் திராவிட மாடல் அரசா??, பொருளாதாரத்தில் இரண்டாம் இடத்தில் இருந்த தமிழ்நாடு மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டது தான் திராவிட மாடல் அரசா? என்று மக்கள் கேள்வி கேட்கிறார்கள். இவை அனைத்தையும் மறைத்துவிட்டு இந்திய கூட்டணி,பல்வேறு முரண்பாடுகள் இருக்கக்கூடிய கட்சிகள்  கூட்டணியில் இருக்க முடியும். 




தமிழ்நாட்டில் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மத்திய அரசு உறுதியாக நிவாரண பணம் வழங்கும். ஆனால் நாம் கேட்டோம் மத்திய அரசு நிதியை வழங்கியது அதை பெற்று மக்களுக்கு  கொடுத்து விட்டோம் என்று திமுக நினைத்து  சந்தோசம்படுவதில் எந்த பிரயோஜனமும் இல்லை.


தற்போது ஏற்பட்ட புயலால் நான்கு மாவட்டங்களில் உற்பத்தி திறன் குறைந்து உள்ளது. ஏற்கனவே தமிழ்நாடு உற்பத்தி திறனில் பின்தங்கி கொண்டே வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் 120 அடி அகலம் இருந்த பக்கீங் கால்வாய், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பணிகளை மேற்கொண்டு அதை 20 அடியாக குறுக்கி விட்டார்கள். இதனால் கடலுக்கு செல்லக்கூடிய அந்த வெள்ள நீர் செல்ல முடியாமல் இத்தகைய பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது இதற்கு காரணம் மாநில அரசுதான். ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு நிதிகளை மத்திய அரசு வழங்கினாலும் திட்டத்தையும், பணிகளையும் மேற்கொள்வது மாநில அரசு ஆகும். குறிப்பாக சென்னையை பொறுத்தவரை நீர்நிலைகளில் ஐடி பார்க் கட்டுவது வீடுகள் கட்டுவது ஆக்கிரமிப்பு செய்வது போன்ற செயல்கள் தொடர்ந்து நடைபெற்று தான் வருகிறது இந்த நிகழ்வாளியே சென்னை ஒவ்வொரு ஆண்டும் வெள்ளத்தால் பாதிக்கப்படுகிறது. ஆகையால் மாநில அரசு இதையெல்லாம் சரி செய்யாவிட்டால் இனி வரும் காலங்களில் புயல், வெள்ளம் ஏற்படக்கூடிய பாதிப்புகளை ஒன்றும் செய்ய முடியாது. ஆகையால் போர்க்கால அடிப்படையில் மாநில அரசு தெளிவான நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இத்தகைய பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்க முடியும். 


தமிழ்நாட்டில் தொடர்ந்து பாதிப்புகள் ஏற்பட்டால் அதை எப்படி மத்திய அரசின் மீது பழி சுமத்துவது ,போன்ற எண்ணத்திலேயே தொடர்ந்து செயல்பட்டால் மாநில அரசு அடுத்து வரக்கூடிய இயற்கை பேரிடத்தை தடுக்கவே முடியாது. 


தமிழ்நாட்டில் புயல் வெள்ளம் பாதிப்பு ஏற்பட வாய்ப்புகள் அதிகளவில் உள்ளது என்று தெரிந்த உடனே அந்த முன் அறிவிப்பை மாநில அரசு மத்திய அரசுக்கு தெரிவிக்கவில்லை, அதேபோல் தொடர் கனமழை பெய்து பாதிப்பு ஏற்பட்டபோதும் மாநில அரசு மத்திய அரசுக்கு தகவல் கொடுக்கவில்லை. இந்நிலையில் தமிழ்நாட்டுப் பெண் நிதி அமைச்சராக இருக்கக்கூடிய நிர்மலா சீதாராமன் அவர்கள் தானாக முன்வந்து மத்திய அமைச்சர் அமிதா அவர்களை சந்தித்து தமிழ்நாட்டில் நிலைமையை எடுத்து உரைத்து தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளார்.  இதை திருமாவளவன் அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். 


இந்திய கூட்டணி ஆலோசனை கூட்டத்திற்கு சென்ற தமிழ்நாடு முதலமைச்சர் போறப்போக்கில் பிரதமரை பார்க்கலாமே என்று பார்த்திருக்கிறார். ஆனால் நிர்மலா சீதாராமன் அவர்கள் தானாக முன்வந்து பாதிக்கப்பட்ட பகுதிகளில் குறித்து கேட்டறிந்து அதற்கு உரிய நடவடிக்கையும் எடுத்துள்ளார். 


மேலும் அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியதை நன்கு கவனிக்க வேண்டும், அவர் தவறாக எதையும் பேசவில்லை. அமைச்சர் உதயநிதி  பேசியதற்கு நீங்கள் இன்னும் அரசியலில் பல இடங்களுக்கு செல்ல வேண்டும் ஆகையால் நீங்க பேசிய வார்த்தைகள் தவறு என்று சுட்டிக் காட்டியுள்ளார்.  தவிர தவறாக எதுவும் பேசவில்லை.




திமுக அரசு மத்திய அரசிடம் பேசி தேவையான நிதிகளை பெற்று தருகிறது என்று சொல்கிறார்கள். அதற்கு எதற்கு திமுக அரசு ஆட்சியில் இருக்க வேண்டும், மக்கள் வாக்களித்து பாஜகவை தமிழகத்தில் ஆட்சிக்கு வர வைத்தால் மக்கள் கேட்காமலேயே அந்த நிதிகள் உடனடியாக கிடைக்கும். 


திமுக அரசு மத்திய அரசின் மீது ஏதாவது ஒரு பழியை சுமத்த வேண்டும் அதை வைத்து பேச வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்,  வேண்டுமென்றே மத்திய அரசை  வாய் சண்டைக்கும்,  வம்பு சண்டைக்கும் இழுக்கிறார்கள். 


பிரதமர் அவர்கள் தமிழகத்திற்கு வரும்போது வணக்கம் மோடி என்ற #track ட்ரெண்டிங் ஆகும். அதே சமயம் DMK IT Wing சார்பாக #gobackmodi என்று பிரபலம் செய்வார்கள் இதுதான் அவர்களுடைய வேலை. DMK IT Wing தலைவர் டிஆர்பி ராஜாவிடம் சவால் விடுகிறேன், தமிழ்நாடு முதலமைச்சர் சென்னை மட்டுமல்ல எந்த மாவட்டத்திற்கு சென்றாலும் அவருக்கு எதிராக #gobackstalin என்று எங்களால் பிரபலப்படுத்த முடியும் இந்த சவாலுக்கு டிஆர்பி ராஜா ரெடியா என்று கேட்டு சொல்லுங்கள். X தளத்தைப் பற்றி எங்களுக்கு யாரும் எடுத்துரைக்க வேண்டும் என்று அவசியமில்லை. அதிலேயே நாங்கள் கம்பு சுத்துற வேலையெல்லாம் பார்ப்போம். எங்கள பொறுத்தவரை எங்கள் மாநில முதல்வரை நாங்கள் அவமானப்படுத்த மாட்டோம். 


வருகின்ற நாடாளுமன்ற தேர்தல் குறித்த பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதே சமயம் யாத்திரை தொடர்பான பணிகளும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. களப்பணிகளும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டின் மைய பகுதியாக இருக்கக்கூடிய திருச்சியை தலைநகரமாக மாற்றுவது என்பது குறித்து அதற்கான நேரம் வரும்போது பேசலாம்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.