திருச்சி மாவட்டம், எம்.ஆர். பாளையத்தில் யானைகளை பராமரிப்பதற்காக 2019 ஆண்டு திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 50 ஏக்கர் பரப்பளவில் யானைகள் புத்துணர்வு முகாம் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த முகாமில் தமிழ்நாட்டில் அனுமதி இன்றி தனியாரால் வளர்க்கப்படும் யானைகள் மற்றும் நோயால் பாதிக்கப்பட்ட யானைகள் மீட்கப்பட்டு இந்த மையத்தில் பராமரிக்கப்பட்டு வருகிறது
இந்த முகாமில் 11 யானைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்த யானைகள் முகாமில் வெயில் காலத்தில் தாக்கத்தில் இருந்து பாதுகாக்கும் வகையில் வனத்துறை சார்பில் பிரத்யேக ஏற்பாடு செய்யப்பட்டது. குறிப்பாக கோடை காலத்தில் யானைகளுக்கு தினமும் பசும் தீவனத்துடன் குளிர்ச்சியான தர்பூசணி பழங்கள் மற்றும் இதர உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடிய பழங்கள், சத்தான உணவு வகைகள் வழங்கப்பட்டு வருகிறது.
மேலும் யானைகள் ஓய்வு எடுக்கும் இடங்களில் உள்ள மண் தரையில் தண்ணீர் கலந்த சேறாக்கி ,யானைகளை சேர்த்து குளியல் செய்ய வைக்கவும், பின்னர் ஷவரில் தண்ணீர் வரவழைத்து அதில் யானை குளிக்க வைத்து, அதிக வெப்ப தாக்கத்திலிருந்து யானைகளை பாதுகாத்து வருகின்றனர்.
திருச்சியில் உடல்நலக்குறைவால் யானை உயிரிழப்பு
இந்நிலையில் திருச்சி வனக்கோட்டம், வன உயிரின பூங்கா சரகம், யானைகள் மறுவாழ்வு முகாமில் கீரதி (65) என்ற யானை கடந்த 2 ஆண்டுகளாக பராமரிக்கப்பட்டு வந்தது. இந்த யானை தூத்துக்குடி பகுதியில் உரிமம் இல்லாமலும், எவ்வித அனுமதி இல்லாமலும் வளர்ப்பு யானை விதிகளுக்கு புறம்பாக, நோய்வாய்ப்பட்டிருந்தது.
மேலும், யானை பராமரிக்காமல் தொடர்ந்து யானையை துன்புறுத்திக் கொண்டிருந்ததை தூத்துக்குடி மாவட்ட யானைகள் பராமரிப்பு கமிட்டியின் பரிந்துரையின் பெயரில், சென்னை தலைமை வன உயிரின காப்பாளர் ஆணையின் பேரில், திருச்சி எம்.ஆர்.பாளையம் யானைகள் மறுவாழ்வு முகாமில் வைத்து சிகிச்சை அளித்து பராமரிக்கப்பட்டு வந்தது.
மேலும், மாவட்ட வன அலுவலர்கள் உத்தரவிட்டதன் பேரில் வன கால்நடை மருத்துவர்கள் குழு சிகிச்சை மேற்கொண்டு வந்தார்கள். கடந்த ஒரு மாத காலமாக யானையின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை.
தமிழ்நாடு கால்நடை மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் மற்றும் வன கால்நடை மருத்துவர்கள் அடங்கிய நிபுணர் குழு பரிந்துரையின் அடிப்படையில் யானைகள் மறுவாழ்வு முகாம் கால்நடை மருத்துவர் சிகிச்சை அளித்து வந்தார்கள்.
இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இறந்தது உறுதிப்படுத்தப்பட்டது. மேலும், இதுக்குறித்து திருச்சி மாவட்ட வன அலுவலர் , உயர் அலுவலர்களுக்கு தகவல் தெரிவித்தும், யானையை பிரேத பரிசோதனை செய்ய நடவடிக்கை மேற்கொண்டார்கள். திருச்சி மாவட்ட வன அலுவலர் தலைமையில், வன கால்நடை மருத்துவர்கள் மற்றும் திருச்சி மண்டல நோய் புலனாய்வு பிரிவு உதவி இயக்குனர் தலைமையிலான குழு, மற்றும் பணியாளர்கள், தன்னார்வலர்கள், முன்னிலையில் பிரேத பரிசோதனை செய்து யானை முகாம் வளாகத்தில் அடக்கம் செய்யப்பட்டது.