அம்ரித் பாரத் நிலையம் திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் 508 ரயில் நிலையங்களை மேம்படுத்த பிரதமர் மோடி கடந்த மாதம் 6 ஆம் தேதி அடிக்கல் நாட்டினார். இவற்றில் 25 ரயில் நிலையங்கள் தெற்கு ரயில்வேக்கு உட்பட்டவை. இந்த நிலையங்கள் ரூ.616 கோடி மதிப்பில் மேம்படுத்தப்பட உள்ளது. நாட்டில் உள்ள பல்வேறு முக்கிய நகரங்களில், ரயில் நிலையங்களை மேம்படுத்த அம்ரித் பாரத் ரயில் நிலையம் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதில், மொத்தம் 1,309 ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்பட உள்ளது. இதன் ஒரு பகுதியாக, நாடு முழுவதும் 508 ரயில் நிலையங்கள் ரூ.24,470 கோடி செலவில் மேம்படுத்தப்படுகின்றது.


மேலும் இந்த திட்டத்தின் கீழ், தெற்கு ரயில்வேயில் உள்ள 25 ரயில் நிலையங்கள், ரூ.616 கோடி மதிப்பில் மேம்படுத்தப்பட உள்ளது. தமிழகத்தில் 18 நிலையங்களும், கேரள மாநிலத்தில் 5, கர்நாடகா, புதுச்சேரியில் தலா ஒரு நிலையமும் மேம்படுத்தப்பட உள்ளது. குறிப்பாக அம்ரித் பாரத் ரயில் நிலையத் திட்டத்தின் கீழ், தமிழகத்தில் 62 நிலையங்கள், கேரளாவில் 27 நிலையங்கள், புதுச்சேரியில் 2 நிலையங்கள், கர்நாடகா, ஆந்திராவில் தலா ஒரு நிலையம் என மொத்தம் 93 நிலையங்களை மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.




இந்நிலையில் இந்தநிலையில் 2-வது கட்டமாக திருச்சி ரெயில்வே கோட்டத்துக்கு உட்பட்ட திருச்சி மாவட்டம் லால்குடி மற்றும் அரியலூர் ரெயில் நிலையங்கள் புதுப்பிக்கப்பட உள்ளது. அதன்படி லால்குடி ரெயில் நிலையம் ரூ.6.27 கோடி மதிப்பிலும், அரியலூர் ரெயில் நிலையம் ரூ.5.24 கோடி செலவிலும் மேம்படுத்தப்பட உள்ளன. இதற்காக நிதி ஒதுக்கப்பட்டு, இந்த பணிகளை அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்திற்குள் முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் பயணிகளுக்கான அனைத்து அடிப்படை வசதிகளான லிப்ட், நடைமேம்பாலம், கூடுதல் நடைமேடைகள், பயணியர் காத்திருப்பு அறைகள், நுழைவு வாயில்கள் சீரமைப்பு, நகரும் படிக்கட்டுகள், வாகன நிறுத்த வசதி, கண்காணிப்பு கேமரா, கழிப்பறை வசதி உள்ளிட்டவை மேற்கொள்ளப்பட உள்ளது. 


ஏற்கனெவே ஸ்ரீரங்கம் ரெயில் நிலையம் அமிர்த் பாரத் ரெயில் நிலைய திட்டத்தின் கீழ் ரூ.6.18 கோடியில் புனரமைக்கப்படுகிறது. இதில் ரெயில் பயணிகளின் வசதிகளை மேம்படுத்த தற்போது உள்ள ரெயில் நிலையத்தை புனரமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளன. ரெயில் நிலைய நுழைவு வாயில், பயணிகள் காத்திருப்பு அறை, நவீனமயமாக்கப்பட்ட உட்கட்டமைப்பு வசதிகள், டிக்கெட் கவுண்ட்டர்கள் போன்றவை புதுப்பிக்கப்படும். ஸ்ரீரங்கம் ரெயில் நிலையத்தின் சுற்றுப்புற பகுதிகளில் தூய்மை படுத்தி அபிவிருத்தி செய்யப்பட்டு ரெயில் நிலையம் முகப்பு தோற்றம் அழகாக இருக்கும் வகையில் மாற்றப்பட்டு, தற்போதுள்ள முனைய கட்டிடம் புதுப்பிக்கப்பட்டு புதிய நுழைவு வாயில் கட்டப்படும். இதில் சிறப்பு அம்சமாக ரெயில் நிலைய முகப்பு தோற்றத்தில் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் மாதிரி வடிவம் உருவாக்கப்படுகிறது.  மேலும் இந்த திட்டம் மூலம் அனைத்து பயணிகளின் தேவைகளை பூர்த்தி செய்வதில் தெற்கு ரெயில்வே கவனம் செலுத்துகிறது. இதில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர்கள் பயன்படும் வகையில் ரெயில் நிலைய நுழைவு வாயிலில் நன்கு வடிவமைக்கப்பட்ட சரிவுகள் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. ரெயில் நிலையத்தில் குறைந்த மின் சக்தியை பயன்படுத்தும் வகையில் ரெயில் நிலைய கட்டிடங்கள் முழுவதும் எல்.இ.டி. விளக்குகள் பயன்படுத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.