சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் பொது போக்குவரத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வரும் முயற்சியில் பல்வேறு மாநில அரசுகள் ஈடுபட்டு வருகின்றன. இதில் மத்திய அரசும் தனது பங்களிப்பை செலுத்தி வருகிறது. எலக்ட்ரிக் பஸ்கள் எனப்படும் மின்சாரத்தால் இயங்கும் இ-பஸ்களை நடைமுறைக்கு கொண்டுவர ஆர்வம் காட்டி வருகிறது. இந்தநிலையில் தான் ஒட்டுமொத்த நாட்டின் கவனத்தையும் ஈர்க்கும் வகையில் மத்திய அரசு முக்கியமான அறிவிப்பை கடந்த மாதம் வெளியிட்டு இருந்தது. அதன்படி, கடந்த மாதம் 16-ந்தேதி நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் "பிரதான்மந்திரி இ-பஸ் சேவை" எனப்படும் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதற்காக ரூ.57 ஆயிரம் 613 கோடி நிதி ஒதுக்கீடு செய்து 10 ஆயிரம் எலக்ட்ரிக் பஸ்களை பல்வேறு நகரங்களில் பயன்பாட்டிற்கு கொண்டு வர முடிவு செய்துள்ளனர்.


இந்த திட்டத்தில் இரண்டு முக்கியமான இலக்குகள் அடங்கியிருக்கின்றது. ஒன்று, டவுண் பஸ் சேவையை விரிவுபடுத்துவது. இரண்டாவது, சுற்றுச்சூழலை பாதிக்காத பசுமை நகர்ப்புற சேவையை அளிப்பது. மத்திய அரசின் முடிவு, இந்திய நகரங்களில் பொது போக்குவரத்தின் பயன்பாட்டை வெகுவாக அதிகரிக்கும். பருவநிலை மாறுபாட்டிற்கு எதிரான இந்தியாவின் பாதையும் முக்கியத்துவம் பெறும். பிரதம மந்திரியின் இ-பஸ் சேவை" திட்டமானது 3 லட்சம் அல்லது அதற்கு அதிகமான மக்கள்தொகை கொண்ட மாநகரங்களில் அமல்படுத்தப்பட உள்ளது. குறிப்பாக வரைமுறை செய்யப்படாத பஸ் சேவைகள் இருக்கும் மாநகரங்களுக்கு முக்கியத்துவம் தரப்படும் என்று அறிவித்து இருந்தது. அதன்படி முதற்கட்டமாக இ-பஸ்கள் இயக்க தகுதியான 169 மாநகரங்களை 4 பிரிவாக தேர்வு செய்து மத்திய அரசு பட்டியல் வெளியிட்டுள்ளது.




இதில் தமிழகத்தில் 150 இ-பஸ்கள் இயக்க 20 லட்சம் முதல் 40 லட்சம் மக்கள் தொகை கொண்ட மாநகரங்கள் பட்டியலில் கோவை மாநகரமும், 100 இ-பஸ்கள் இயக்க 10 லட்சம் முதல் 20 லட்சம் வரை மக்கள் தொகை கொண்ட மாநகரங்கள் பட்டியலில் திருச்சி, மதுரை மாநகரங்களும், 5 லட்சம் முதல் 10 லட்சம் வரை மக்கள் தொகை கொண்ட மாநகரங்கள் பட்டியலில் ஈரோடு, சேலம், திருப்பூர் மாநகரங்களும் இடம்பெற்றுள்ளன. அடுத்தபடியாக 5 லட்சம் மற்றும் அதற்கு கீழ் மக்கள் தொகை கொண்ட மாநகரங்கள் பட்டியலில் அம்பத்தூர், ஆவடி, தூத்துக்குடி, நெல்லை, வேலூர் நகரங்களும் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. தமிழகத்தை பொருத்தவரை மொத்தம் 11 நகரங்களில் பிரதான் மந்திரி இ-பஸ் சேவை திட்டம் அரசு மற்றும் தனியார் பங்களிப்புடன் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. 


மேலும் இ-பஸ் பணிமனைகள், பராமரித்தல், மேம்படுத்துதல் உள்ளிட்ட வசதிகளை அரசு ஏற்படுத்தி தரும். இந்த பஸ்களுக்கு ஸ்டாண்டர்டு (12 கி.மீ), மிடி (9கி.மீ), மினி (7கி.மீ) ஆகிய 3 பிரிவுகளின் கீழ் மத்திய அரசு நிதி உதவி வழங்கும். அதன்படி, ஒரு கிலோ மீட்டருக்கு ஸ்டாண்டர்டு பிரிவில் ரூ.24-ம், மிடி பிரிவில் ரூ.22-ம், மினி பிரிவில் ரூ.20-ம் மத்திய அரசு நிதி உதவி வழங்கும். இந்த உதவி 10 ஆண்டுகளுக்கு அல்லது 2037-ம் ஆண்டு மார்ச் மாதம் வரை, இதில் எது முந்தையதோ அதுவரை வழங்கப்படும். பஸ் பணிமனை அமைக்க சம்பந்தப்பட்ட மாநகராட்சி அல்லது மாநில அரசு நிலம் ஒதுக்க வேண்டும். மேலும் பசுமை நகர்ப்புற சேவைகளில் எலக்ட்ரிக் பஸ்களுடன், இ-பைக், சைக்கிள் பயன்பாடு மற்றும் அதற்கான வழித்தடம் ஏற்படுத்துதல் ஆகியவையும் மேற்கொள்ளப்படும். அடுத்த 10 ஆண்டுகளுக்கு பிரதம மந்திரியின் இ-பஸ் சேவா திட்டமானது முழு வீச்சில் பயன்பாட்டில் இருக்கும் என தெரிவிக்கபட்டுள்ளது.