திருச்சி மாவட்டம், உப்பிலியபுரம் ஒன்றியம் நெட்டவேலம்பட்டியில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியின் தமிழ் ஆசிரியர் மோகன்தாஸ், மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சில நாட்களுக்கு முன்பு புகார் கூறப்பட்டது. இதுகுறித்து போக்சோ சட்டத்தின் கீழ் முசிறி அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மோகன்தாசை கைது செய்தனர். மேலும் இந்த சம்பவத்தில் ஆங்கில ஆசிரியை லில்லி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து கடும் மன உளைச்சல் காரணமாக அவர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து ஆசிரியை லில்லியின் சாவுக்கு காரணமானவர்களின் மீது நடவடிக்கை எடுக்குமாறு அவரது கணவர் குணசேகர் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்ததை தொடர்ந்து துறை ரீதியாக விசாரனை மேற்க்கொள்ளபட்டது. மேலும் இதுகுறித்து நேற்று முன்தினம் மாலை முசிறி கல்வி மாவட்ட அலுவலர் பாரதிவிவேகானந்தன் நேரடியாக பள்ளிக்கு வந்து விசாரணை மேற்கொண்டதாக தெரிகிறது. அப்போது முறையாக பெற்றோர்களுக்கு தகவல் தெரிவிக்காமல், குறிப்பிட்ட சில மாணவிகளிடம் அறிக்கை எழுதி வாங்கியதாக தெரிகிறது. இதையடுத்து பள்ளியில் நடைபெற்ற பெற்றோர் ஆசிரியர்கள் கூட்டத்திற்கு முறையாக அனைத்து பெற்றோர்களையும் அழைக்காமலும், விசாரணை சாதி அடிப்படையில் நடைபெறுவதாகவும் புகார் எழுந்தது.
இதையடுத்து பெற்றோர்கள் நேற்று காலை மாணவ, மாணவிகளை பள்ளிக்கு அனுப்ப மறுத்து, பள்ளியை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இது பற்றி தகவல் அறிந்த துறையூர் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையில் உப்பிலியபுரம் சப்-இன்ஸ்பெக்டர் பிரகாஷ் மற்றும் போலீசார் அங்கு சென்று பள்ளியை முற்றுகையிட்ட பெற்றோர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.அப்போது அங்கு பேச்சுவார்த்தை நடத்த வந்த முசிறி கல்வி மாவட்ட அலுவலர் பாரதி விவேகானந்தனுடன், பெற்றோர்கள் உள்ளிட்டோர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து நடந்த பேச்சுவார்த்தையில், பள்ளியில் சாதி ரீதியாக அணுகுமுறைகள் நடைபெறுவதாகவும், இதனால் வரும் காலங்களில் பிரச்சினைகளை தடுக்க, சம்பந்தப்பட்ட ஆசிரியர்களை இடமாற்றம் செய்யக்கோரியும் பெற்றோர்கள் எழுத்து பூர்வமாக புகார் அளித்தனர். அவர்களை இடமாற்றம் செய்யும்வரை தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மறுத்ததுடன், மாற்றாத பட்சத்தில் தங்களது குழந்தைகளின் பள்ளி மாற்றுச்சான்றிதழை கேட்டனர். இந்த சம்பவத்தால் நேற்று காலை முதல் மாலை வரை அப்பகுதி பரபரப்புடன் காணப்பட்டது. இதையொட்டி உப்பிலியபுரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இதனை தொடர்ந்து நேற்று இரவு திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமாரை மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் சந்தித்து புகார் மனு அளித்துள்ளனர். உடனே நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் உறுதி அளித்துள்ளார். மேலும் பட்டியலின மாணவர்களுக்கும் பெற்றோருக்கும் கொலை மிரட்டல் விடுவதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். பள்ளியில் பயிலும் பட்டியலின மாணவர்களுக்கு உணவு அளிப்பதிலும் பாகுபாடு தீண்டாமை கொடுமை நடைபெறுவதாக பெற்றோர்களும், மாணவர்களும் குறிப்பிட்டுள்ளனர். மேலும் கடந்த 20 நாட்களாக பள்ளியில் எந்த பாடங்களும் நடைபெறவில்லை. ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை 120 மாணவர்கள் பயில்வதாகவும், இதில் 20 மாணவர்கள் பட்டியலின மாணவர்கள் என தகவல் தெரிவித்துள்ளனர். குறிப்பாக இதுகுறித்து காவல்துறையினர் புகார் எடுக்க மறுத்து வருவதாகவும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.