திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள கலைஞர் அறிவாலயத்தில் திருச்சி மத்திய  மாவட்ட செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.  இந்த கூட்டத்தில் நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என். நேரு மற்றும் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் கட்சியின் மூத்த, முக்கிய நிர்வாகிகள், தொண்டர்கள், வார்டு உறுப்பினர்கள் ,பகுதி செயலாளர்கள் என அனைவரும் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் இறுதியாக தமிழ்நாடு நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என். நேரு பேசுகையில், “தமிழ்நாடில் கடந்த காலங்களில் காங்கிரஸ் கட்சி முக்கியமாக திகழ்ந்தது. குறிப்பாக திமுக, அதிமுகவுடன் கூட்டணி வைத்து இரண்டாம் இடத்தை கைப்பற்றியது. அதேபோல்   இன்றைக்கு இரண்டாம் இடத்தை கைப்பற்றுவதற்காக பாரதிய ஜனதா கட்சி வந்து நிறைய முயற்சிகள் எடுத்துக் கொண்டிருக்கிறார். மேலும் எந்த கட்சியில் பதவி இல்லை என்றாலும், அவர்களிடம் போனால் மாநில அளவிலே பதவி தருகிறார்கள்.  எந்த கட்சியிலே இவர் சரியாக நடந்து கொள்ள மாட்டார் என்று நாம் எண்ணுகிறோமோ அவர்கள் எல்லாம் அந்த கட்சிக்கு போனால் அவர்களுக்கு பதவி தருகிறார்கள்.  ஆகையால்  கவனமாக திமுக மாவட்ட  செயலாளர்கள், ஒன்றிய செயலாளர்கள், நகர பேரூர் கழக செயலாளர் நன்றாக பார்த்து சிந்தித்து செயல்பட வேண்டும்” என்றார்.




மேலும் தொடர்ந்து பேசிய அமைச்சர் நேரு, “திருச்சி மாவட்டத்திற்கு உட்பட்ட ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு பூத் கமிட்டி என்ற அளவில் அமைத்து 20 பேர் 30 பேரை சேர்த்து அவர்களுக்கு தினந்தோறும்  அல்லது மாதம் தோறும் அவர்களுக்கு செலவு செய்து பார்த்து கொள்ள வேண்டும். இதனை தொடர்ந்து பூத் கமிட்டியில் பணியாற்றும் அனைவருக்கும் பயிற்சிகள் வழங்கப்பட்டு கட்சியை பலப்படுத்த நிர்வாகிகள் செயல்பட வேண்டும்” என்றார்.


மேலும், “தமிழகத்தில்  ஒவ்வொரு இடத்திலும் இரண்டாவது இடத்தில்  பிஜேபி வந்து விட வேண்டும் என்ற நோக்கத்தோடு அவர்கள் செயலாற்றிக் கொண்டிருக்கிறார்.  நாம் கட்சி திராவிட இயக்கத்தை பிடிக்காதவர்கள் கூட இன்றைக்கு திராவிட இயக்கத்தை பற்றி சிறப்பாக பேசக்கூடிய இடத்திற்கு நாம் வந்துவிட்டோம். மேலும் பொதுமக்கள் எல்லாம் திமுக பக்கம் திராவிட இயக்கத்தின் பக்கம் வந்து கொண்டிருக்கிறார்கள். எனவே ஒவ்வொரு கிராமத்திலும் செயலாளர்களை, ஒன்றிய செயலாளர்கள் நீங்கள் கவனமாக பார்க்க வேண்டும்.  மேலும் பாஜக  எந்த இடத்தில் எப்படி செயல்படுகிறார் என்பதை கவனித்து தீவிரமாக செயல்பட கூடிய இடத்திலே நாம் இருக்கிறோம். தமிழகத்தில் இன்றைக்கு அதிமுகவில் இரண்டு, மூன்றாக பிரிந்துள்ளது. அதிமுகவை சேரவிடாமல் தடுப்பது  பிஜேபி தான்” என குற்றம்சாட்டினார். 




தொடர்ந்து பேசுகையில், “அதிமுகவில் இருக்கும் இருவரும் இணைத்து வைத்து விட்டால் பாஜக சொல்வதை இவர்கள் கேட்கமாட்டார்கள். அதிமுக பிரிந்து இருந்தால் பாஜக தனக்கு தேவையான இடங்களை பெற்றுக் கொள்ளலாம் என்று நோக்கத்தோடு அவர்களை சேரவிடாமல்  பிரித்து வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.  நாம் கவனமாக தேர்தலில் பணியாற்ற வேண்டும்.  பாஜக  சிறிய பிரச்சனை எல்லாம் ஊதி பெரிதாகி இங்கு  நாட்டிலே சட்ட ஒழுங்கு இல்லை என்ற ஒரு மாயை உருவாக்க கூடிய அளவிற்கு ஊடகங்களை மிரட்டி, பத்திரிகையாளர்களை மிரட்டி,  இன்றைக்கு பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறார்கள். எனவே  கவனமாக மிக மிக கவனமாக பணியாற்றக்கூடிய காலம் இனி வருகிற காலம் என்பதை மட்டும் இங்கு இருக்கிற தோழர்கள் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். தமிழகத்தில் அண்ணன் - தம்பி கட்சி போன்று தான். ஆனால், தமிழகத்தில் எதிர்கட்சியாக வருவதற்கு பாஜக முயற்சி செய்கிறது. ஆகையால் திமுகவினர் மிக எச்சரிக்கையாக இருக்க  வேண்டும். கடந்த ஆட்சி காலத்தில் கடுமையான நிதிச் சுமையை ஏற்படுத்தி விட்டார்கள் இதிலிருந்து மீண்டு வந்து கொண்டிருக்கிறோம் விரைவில் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களும் சிறந்த முறையில் செயல்படவும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் 40க்கு 40 இடங்களில் திமுக வெற்றி பெற நாம் அனைவரும் ஒன்றிணைந்து உழைப்போம் உழைப்போம் உழைப்போம்”என்றார்.